ஸ்பெயினில் பெண் ஊழியருக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கு; நெருக்கடியான சூழலில் பாகிஸ்தான்


ஸ்பெயினில் பெண் ஊழியருக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கு; நெருக்கடியான சூழலில் பாகிஸ்தான்
x

ஸ்பெயின் நாட்டில் பெண் ஊழியருக்கு பாகிஸ்தானின் முன்னாள் தூதர் பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கின் விசாரணையில் பல தகவல்கள் அடுத்தடுத்து வெளிவரும் என கூறப்படுகின்றன.



லாகூர்,

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் மூத்த தூதர் மிர்ஜா சல்மான் பெய்க் என்பவர் மீது தூதரகத்தின் உள்ளூர் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்து உள்ளார். தொடர்ந்து, மாட்ரிட் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதர் சுஜாத் ரத்தோரிடம், அந்த பணியாளர் புகார் அளித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து ரத்தோர், இஸ்லாமாபாத் நகரில் உள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு இந்த புகாரை அனுப்பி உள்ளார். இதனையடுத்து, 2 நபர் கொண்ட குழு ஒன்றை பார்சிலோனா மற்றும் மாட்ரிட் நகருக்கு வெளியுறவு அமைச்சகம் அனுப்பி வைத்து உள்ளது.

விசாரணை நிறைவில், அதன் அறிக்கையின் அடிப்படையில் அதிகாரியை பதவியில் இருந்து நீக்கியதுடன், உடனடியாக இஸ்லாமாபாத்தில் உள்ள தலைமையத்திற்கு வரும்படி உத்தரவிடப்பட்டது. அந்த பெண் அளித்த புகாரின்படி, பாகிஸ்தான் தூதர் சமூக ஊடகம் வழியே அந்த பணியாளருக்கு செய்திகளை அனுப்புவது வழக்கம்.

இதனையே பாலியல் புகாராக அவர் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து தூதர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இந்நிலையில், பெய்க்கிடம் உள்நாட்டு மட்டத்திலான விசாரணை நடத்தப்பட்டு வருவதில் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், பாதிப்படைந்த தூதரக பெண் ஊழியர் உள்ளூர் கோர்ட்டில் குற்ற வழக்கு ஒன்றையும் தொடர்ந்து உள்ளார். அதில், சமூக ஊடகம் வழியே பாலியல் ரீதியிலான கொச்சையான தகவல்களை பெய்க் அனுப்புவது வழக்கம் என்றும் தொடர்ச்சியாக, இதுபோன்ற துன்புறுத்தல்கள் தொடர்ந்தன என்றும் தெரிவித்துள்ளார்.

பெய்க், அந்த பெண் ஊழியரை தனி செயலாளராக பதவி உயர்வு அளித்ததும் துன்புறுத்தல்கள் தொடங்கின என குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. இதற்காக வைபர் என்ற செயலியை பதிவிறக்கம் செய்யும்படி பெய்க், ஊழியரை கேட்டு கொண்டுள்ளார். அதன் வழியே, ரகசிய சாட்டிங் செய்துள்ளார். பின்னர் 24 மணிநேரத்தில் பெய்க் அனுப்பிய அனைத்து ஆவணங்கள் மற்றும் தகவல்களும் செயலியில் அழிக்கப்பட்டு விடும்.

இதேபோன்று, நிர்வாண புகைப்படங்களும் அனுப்பப்பட்டு உள்ளன. ஆனால், இதனை ஊழியரால் நிரூபிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. ஏனெனில் சாட்டிங் உள்ளிட்டவற்றை நகல் எடுக்கும்போது, அதற்கான எச்சரிக்கை அறிவிப்பு பெய்க்கிற்கு சென்று விடும். பணியிடத்தில், நீண்டநேரம் தன்னுடன் இருக்கும்படி பெய்க் கட்டாயப்படுத்தி உள்ளார். பாலியல் உறவும் வைத்து கொண்டார் என குற்றச்சாட்டு பட்டியல் தொடருகிறது.

இதுதவிர, பார்சிலோனா நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் வைத்து பாலியல் தாக்குதலில் ஈடுபட பெய்க் முயன்றார் என்றும் வழக்கில் தெரிவித்து உள்ளார். இதனை அல் அரேபியா செய்தி நிறுவனம் பெண் தூதரின் புகாரின் அடிப்படையில் செய்தியாக தெரிவித்து உள்ளது.

எனினும், குற்றச்சாட்டுகளை பெய்க் மறுத்து உள்ளார். தன்னை பணியில் இருந்து நீக்கவே இந்த புகார்களை பெண் ஊழியர் அளித்துள்ளார் என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, அல் அரேபியா பத்திரிகை தெரிவித்து உள்ள தகவலில், இத்தாலியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் முன்னாள் தூதராக பணியாற்றிய நதீம் ரியாஸ் என்பவர் மீது வர்த்தக அமைச்சக பெண் அதிகாரியான சாய்ரா இம்தத் அலி என்பவர் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

இதனை தொடர்ந்து, இந்த ஆண்டு மே மாதத்தில் நதீம் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் பணியில் இருந்த, பாகிஸ்தான் வெளியுறவு சேவைக்கான அதிகாரி வாக்கர் அகமது என்பவர் மீது உள்ளூர் ஊழியர் ஒருவர் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின்பேரில் கடந்த 2020-ம் ஆண்டு பணியில் இருந்து அகமது விடுவிக்கப்பட்டார் என்றும் அல் அரேபியா தெரிவித்து உள்ளது. இதனால், சமீப காலங்களாக தன்னுடைய உயரதிகாரிகளின் நடவடிக்கைகளால் பாகிஸ்தான் கடுமையான சூழலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.


Next Story