டுவிட்டர் என்ற பெயருக்கு விரைவில் நாங்கள் விடை கொடுக்கலாம்...!! எலான் மஸ்க் டுவிட்டரால் பரபரப்பு


டுவிட்டர் என்ற பெயருக்கு விரைவில் நாங்கள் விடை கொடுக்கலாம்...!! எலான் மஸ்க் டுவிட்டரால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 July 2023 6:23 AM GMT (Updated: 23 July 2023 8:05 AM GMT)

டுவிட்டர் என்ற பெயருக்கு விரைவில் நாங்கள் விடை கொடுக்கலாம் என்று எலான் மஸ்க் டுவிட்டரில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நியூயார்க்,

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபரில் டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரானார். அதுமுதல் பல்வேறுவித மாற்றங்களை அந்நிறுவனத்தில் மேற்கொண்டார்.

முதலில் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் நீக்கப்பட்ட சிலர் மீண்டும் டுவிட்டரில் சேர்க்கப்பட்டனர். பின்னர், புளூ டிக் பெற கட்டணம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட பதிவுகளையே பயனாளர்கள் பார்க்க முடியும் என்ற கட்டுப்பாடுகள் உள்ளிட்ட சில மாற்றங்களால், டுவிட்டரின் விளம்பர வருவாய் பாதிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரலில், டுவிட்டரை முன்னெடுத்து செல்லும் நோக்கில் அந்நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ.வாக லிண்டா யக்காரினோ பதவியேற்றார். கடந்த அக்டோபரில் அவர் கூறும்போது, டுவிட்டரை வாங்குவது என்பது எக்ஸ் எனப்படும் செயலியை உருவாக்குவதற்கான ஒரு நடவடிக்கையே என குறிப்பிட்டார்.

லிண்டா பதவியேற்றதும், இந்த எக்ஸ் என்ற பெயரை தனது மனதில் சில காலத்திற்கு முன்பிருந்து வைத்திருக்கிறேன் என கூறியுள்ள அவர், இந்த டுவிட்டர் தளம், எக்ஸ் என்ற செயலியாக உருமாற்றப்படும் பணியை லிண்டாவுடன் இணைந்து செயலாற்ற எதிர்பார்த்து இருக்கிறேன் என கூறினார்.

இந்நிலையில், சமீபத்தில் மஸ்க் வெளியிட்ட டுவிட்டர் பதிவொன்றில், விளம்பர வருவாய் சீராக சரிவடைந்து வருகிறது. இதனால், டுவிட்டரை மீட்டெடுக்கும் பல்வேறு கடைசி கட்ட முயற்சிகள் நடந்து வருகின்றன என பதிவிட்டார்.

இந்த மாதத்தில், புளூ டிக் கொண்ட சில சந்தாதாரர்களுக்கு விளம்பர வருவாயை அந்நிறுவனம் பகிர தொடங்கியது. அவர்கள் தங்களது டுவிட் பதிவுகளால் எந்தளவுக்கு பலரை சென்றடைந்து உள்ளனர் என்ற அடிப்படையில் இந்த வருவாய் பகிர்வு அளிக்கப்படுகிறது.

சமீபத்தில் அவர் கூறும்போது, "மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பது பற்றி பரிசீலிக்காமல் தொழில்நுட்ப மேம்பாட்டில் ஈடுபடுகின்றன" என ஓபன்ஏ.ஐ. மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களை அவர் குற்றம்சாட்டி பேசினார்.

இந்த நிலையில் அவர் இந்த பிரபஞ்சம் பற்றி புரிந்து கொள்வதற்காக, புதிதாக எக்ஸ்.ஏ.ஐ. என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒன்றை தொடங்க இருக்கிறேன் என சமீபத்தில் கூறினார்.

இந்த சூழலில், மஸ்க் இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், டுவிட்டர் தளம் மறுசீரமைக்கப்படும் என தெரிவித்ததுடன், வர்த்தக குறியீடாக உள்ள டுவிட்டர் என்ற பெயருக்கு விரைவில் நாங்கள் விடை கொடுக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளார். இதனால், டுவிட்டரின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பது பயனாளர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.


Next Story