'செல்பி' எடுக்க முயற்சித்த இளம்பெண்; தலைமுடியை பிடித்து இழுத்த சேட்டை குரங்குகள் - வைரல் வீடியோ


செல்பி எடுக்க முயற்சித்த இளம்பெண்; தலைமுடியை பிடித்து இழுத்த சேட்டை குரங்குகள் - வைரல் வீடியோ
x

செல்பி எடுக்க முயற்சித்த இளம்பெண்ணின் தலைமுடியை 2 குரங்குகள் சேட்டை செய்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு கடந்த சனிக்கிழமை தனது நண்பர்களுடன் இணைந்து இளம்பெண் சுற்றிப்பார்க்க சென்றுள்ளார். அங்குள்ள ஒரு கூண்டுக்குள் குரங்குகள் அடைத்துவைக்கப்பட்டிருந்தன.

இதை பார்த்த அந்த இளம்பெண் அந்த கூண்டு அருகே சென்று செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார். செல்பி புகைப்படம் எடுக்க வசதிக்காக கூண்டின் கம்பியில் தொங்கிக்கொண்டிருந்த குரங்கு ஒன்றை விரட்டுவதற்காக தனது கையை வீசி செய்கை செய்துள்ளார்.

அப்போது, அந்த குரங்கு கூண்டின் கம்பி இடைவெளி வழியாக அந்த இளம்பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் குரங்கிடமிருந்து விடுபட முயற்சித்துள்ளார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் குரங்கின் பிடியில் இருந்து பெண்ணை விடுவிக்க கூச்சலிட்டுள்ளனர். சில வினாடிகளில் அந்த குரங்கு அந்த பெண்ணின் தலைமுடியை விட்டுள்ளது.

இதையடுத்து, அந்த பெண் அந்த கூண்டு அமைந்துள்ள பகுதியில் இருந்து வெளியே செல்ல முயற்சித்துள்ளார். வெளியே செல்லும் பாதைக்கு கூண்டு அருகே அமைந்திருந்த நிலையில் அவ்வழியாக அப்பெண் சென்றபோது மீண்டும் அந்த குரங்கு அப்பெண்ணின் தலைமுடியை மீண்டும் பிடித்து இழுந்தது.

அந்த குரங்குடன் இணைந்த மற்றொரு குரங்கும் அப்பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுந்தது. பின்னர், சில வினாடிகள் கழித்து இரு குரங்குகளும் அப்பெண்ணின் தலைமுடியை விட்டுவிட்டு சென்றன.

இந்த சம்பவத்தை அப்பெண்ணுடன் வந்த நண்பர் ஒருவர் வீடியோவாக எடுத்து தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Next Story