காலனி ஆதிக்க காலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகள் - நைஜீரியாவிடம் திருப்பி ஒப்படைத்த ஜெர்மனி


காலனி ஆதிக்க காலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகள் - நைஜீரியாவிடம் திருப்பி ஒப்படைத்த ஜெர்மனி
x

Image Courtesy : Reuters

தினத்தந்தி 10 July 2022 5:08 PM GMT (Updated: 10 July 2022 5:14 PM GMT)

19 ஆம் நூற்றாண்டு காலத்தில் கவர்ந்து வரப்பட்ட சுமார் 1,500 வெண்கல சிலைகளை ஜெர்மனி அரசு நைஜீரியாவிடம் திரும்ப ஒப்படைத்துள்ளது.

பெர்லின்,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா, பத்தொண்பதாம் நூற்றாண்டு காலகட்டத்தில் இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்தது. அதை தொடர்ந்து 1960 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஆட்சியில் இருந்து நைஜீரியா விடுதலை அடைந்தது. காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளில் இருந்து பல விலைமதிப்பற்ற பொருட்கள், ஆட்சியாளர்களால் கவர்ந்து செல்லப்பட்டுள்ளன.

தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள பெனின் என்ற நகரத்தின் மீது கடந்த 1897 ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர்கள் படையெடுத்துச் சென்றனர். இந்த படையெடுப்பின் போது அங்கிருந்த பல அரிய வகை கலைப்பொருட்கள், சிலைகள் உள்ளிட்டவற்றை இங்கிலாந்து வீரர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த பொருட்கள் 13 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை என்று கூறப்படுகிறது.

அவ்வாறு கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பொருட்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் ஜெர்மனி வசம் இருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த கலைப்பொருட்களை திருப்பி ஒப்படைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது.

அதன்படி ஐரோப்பிய காலனி ஆட்சியாளர்களால் நைஜீரியாவில் இருந்து 19 ஆம் நூற்றாண்டு காலத்தில் கவர்ந்து வரப்பட்ட சுமார் 1,500 வெண்கல சிலைகளை ஜெர்மனி அரசு நைஜீரியாவிடம் திரும்ப ஒப்படைத்துள்ளது. ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லினில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஜெர்மனியின் வெளியுறவுத்துறை மந்திரி அனாலேனா பேர்பாக், நைஜீரிய கலாச்சார மந்திரி லாய் முகமதுவிடம் இந்த சிலைகளை ஒப்படைத்தார்.


Next Story