ஒரே சீனா கொள்கைக்கு ஆதரவா, எதிர்ப்பா...? அமெரிக்காவின் குழப்ப நிலைப்பாடு


ஒரே சீனா கொள்கைக்கு ஆதரவா, எதிர்ப்பா...? அமெரிக்காவின் குழப்ப நிலைப்பாடு
x
தினத்தந்தி 13 Aug 2022 5:59 AM GMT (Updated: 2022-08-13T11:51:08+05:30)

ஒரே சீனா கொள்கைக்கான ஆதரவு நீடிக்கும் என ஒருபுறம் தெரிவித்து விட்டு, தைவானுக்கு ஆதரவளிப்போம் என்றும் அமெரிக்கா தெரிவித்து குழப்ப நிலைப்பாட்டை வெளியிட்டு உள்ளது.


வாஷிங்டன்,சீனாவின் எதிர்ப்பை மீறி, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி (வயது 82) கடந்த 2-ந்தேதி தைவான் நாட்டுக்கு சென்றது சீனாவுக்கு கடும் ஆத்திரம் ஏற்படுத்தியது. தைவான் சென்ற பெலோசி, அந்நாட்டு அதிபர் சைஇங்-வென்னை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் அமெரிக்க சபாநாயகர் பெலோசி தைவானில் பேசும்போது, வளர்ந்து வரும் ஜனநாயகம் கொண்டது தைவான். சவால்களை சந்தித்தபோதிலும், அமைதி மற்றும் வளமிக்க எதிர்காலம் ஆகியவற்றை நம்பிக்கை, தைரியம் மற்றும் உறுதியான தீர்மானம் ஆகியவை கட்டியெழுப்பும் என உலகிற்கு நிரூபித்து உள்ளது.

தைவான் மற்றும் உலக நாடுகளில் ஜனநாயக பாதுகாப்பு பற்றிய அமெரிக்காவின் தீர்மானம் தொடர்ந்து இரும்பு கவசம் போல் இருக்கும் என அவர் பேசினார். இதனால், ஒரே சீனா கொள்கைக்கு எதிராக மற்றும் சீன-அமெரிக்க உறவில் விரிசில் ஏற்படும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது என பரபரப்புடன் பேசப்பட்டது.

பெலோசியின் தைவான் பயண எதிரொலியாக, தைவான் உற்பத்தி பொருட்கள் மீது சீனா இறக்குமதி தடை விதித்தது. இதனால், தைவானில் இருந்து கொண்டு வரப்பட்ட பொருட்கள் சீனாவுக்குள் நுழைய முடியாமல் தேங்கி வர்த்தக இழப்பும் ஏற்பட்டது.

தொடர்ந்து, பெலோசி மற்றும் அவரது குடும்பம் மீது தடை விதிப்பது, தைவான் பகுதியை சுற்றி போர்க்கப்பல்களை நிறுத்துவது உள்ளிட்ட செயல்களில் சீனா இறங்கியது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஒரே சீனா கொள்கை நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தைவானின் தனிநாடு சுதந்திரத்திற்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லை.

தற்போதுள்ள நிலைப்பாட்டில் இரு தரப்பினரில் எவரிடம் இருந்தேனும் தனிப்பட்ட முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டால், அதனை நாங்கள் எதிர்க்கிறோம். சீனா மற்றும் தைவான் இடையேயான வேற்றுமைகள் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்து உள்ளார்.

தைவானுடன் தொடர்ந்து, பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்பு ஏற்படுத்தி, அந்நாட்டுடன் சீனா ஆழ்ந்த உறவை மேற்கொள்வதற்கான ஒரே சீனா கொள்கையில், அமெரிக்கா தொடர்ந்து ஒத்துபோகிறது என்றும் தெரிவித்து உள்ளார்.

எனினும், அதிபர் பைடனுக்கான துணை உதவியாளர் குர்த் கேம்ப்பெல் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, சீனாவின் செயல்கள் தொடர்ந்து தூண்டி விடும் வகையில், ஸ்திரதன்மையற்ற சூழ்நிலையை உருவாக்கும் வகையில் மற்றும் முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்ளன.

தைவானை சுற்றி இன்றளவும் சீனாவின் போர் கப்பல்கள் பல சூழ்ந்துள்ளன என கூறியுள்ளார். அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சீனா விதித்த தடைகள், தைவானுக்கு எதிரான இறக்குமதி தடை உள்ளிட்ட தொடர்ச்சியான பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவற்றையும் கேம்ப்பெல் விமர்சித்து உள்ளார்.

தைவானுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம். மற்றும் எங்களது நட்பு நாடுகளான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆசியன் நாடுகளும் இந்த விசயங்களை பொது அறிக்கைகளின் வழியே வெளிப்படுத்தி உள்ளன என தெரிவித்து உள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் சார்பில் தைவானின் சுதந்திர நிலைப்பாட்டுக்கு ஆதரவில்லை என அறிக்கை வெளியிட செய்துவிட்டு, மறுபுறம் அதிபரின் உதவியாளர் ஒருவர் சீனாவின் போக்கை கண்டிக்கும் வகையில் பேசி, தைவானுக்கு ஆதரவளிப்போம் என கூறி சீனா, தைவான் விவகாரத்தில் அமெரிக்கா ஒரு குழப்ப நிலைப்பாட்டை எடுத்திருப்பது காணப்படுகிறது.


Next Story