சரக்கு கப்பலை கடத்தும் முயற்சி முறியடிப்பு; கடற்கொள்ளையர்களுக்கு இந்தியா எச்சரிக்கை


சரக்கு கப்பலை கடத்தும் முயற்சி முறியடிப்பு; கடற்கொள்ளையர்களுக்கு இந்தியா எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 March 2024 3:25 PM GMT (Updated: 16 March 2024 3:39 PM GMT)

இந்திய கடற்படையின் போர் கப்பலான ஐ.என்.எஸ். சுமித்ரா, கடந்த ஜனவரியில் ஈரானிய கொடியுடன் கூடிய கப்பலில் நடந்த கடற்கொள்ளை முயற்சியை முறியடித்தது, 19 பாகிஸ்தானியர்களை மீட்டது.

மொகதிசு,

சோமாலியா கடற்கொள்ளையர்கள் அடிக்கடி கப்பல்களை தடுத்து நிறுத்தி கொள்ளையடிக்கும் சம்பவங்களும், கப்பலை கடத்தும் முயற்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், சோமாலியாவின் கிழக்கு கடலோர பகுதியில், எக்ஸ்-எம்.வி. ரூவென் என்ற வர்த்தக கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது.

இதனை சோமாலியா கடற்கொள்ளையர்கள் சிலர் சேர்ந்து தடுத்து நிறுத்தினர். அதற்குள் புகுந்து கப்பலை கடத்த முயற்சித்தனர். இந்நிலையில், இந்த விவரம் அறிந்த இந்திய கடற்படையினர் இந்த முயற்சியை முறியடித்து உள்ளனர்.

அந்த கப்பலில், பல்கேரியா, அங்கோலா மற்றும் மியான்மர் நாடுகளை சேர்ந்தவர்கள் பயணம் செய்கின்றனர். கப்பலுக்குள் 30 கடற்கொள்ளையர்கள் வரை புகுந்திருக்க கூடும் என நம்பப்படுகிறது. அவர்கள் இந்த கப்பலை தாய் கப்பலாக பயன்படுத்தி பிற பகுதிகளில் கொள்ளை சம்பவங்களை நடத்த கூடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்திய கடற்படையினரை நோக்கி அவர்கள் துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர். இதுபற்றி இந்திய கடற்படையினர் வெளியிட்டுள்ள செய்தியில், எங்களுடைய போர் கப்பலை நோக்கி அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால், சர்வதேச சட்டம், சுய பாதுகாப்பு மற்றும் கடற்கொள்ளையர்களை ஒழித்தல் ஆகியவற்றிற்காக குறைந்த அளவு படைகளை பயன்படுத்தி அவர்களின் அச்சுறுத்தலை முறியடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

அவர்களிடம் சமரச முயற்சிக்காக பேசி, உடனடியாக சரண் அடையும்படி எச்சரிக்கையும் விடுத்தது. கடந்த பிப்ரவரியில் கடற்கொள்ளையை தடுப்பதற்காக அரபி கடலில், இந்திய கடற்படையின் சிறப்பு படைகள் சி-130 விமானத்தில் இருந்து வான்வழியே கீழிறங்கி நடவடிக்கை எடுத்தது.

கடந்த ஜனவரியில் ஈரானிய கொடியுடன் கூடிய கப்பலில் நடந்த கடற்கொள்ளை முயற்சியை இந்திய கடற்படையின் போர் கப்பலான ஐ.என்.எஸ். சுமித்ரா முறியடித்தது. 19 பாகிஸ்தானியர்களையும் மீட்டது.


Next Story