அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர்; முன்னிலையில் டொனால்டு டிரம்ப்


அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர்; முன்னிலையில் டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 24 Jan 2024 9:39 AM IST (Updated: 24 Jan 2024 9:40 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி உள்ளன. அந்நாட்டு அதிபராக ஜோ பைடன் செயல்பட்டு வருகிறார். அவர் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் ஆவார். இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஈடுபட்டு வருகின்றன.

அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கவும் அந்நாட்டில் தேர்தல் முறை பின்பற்றப்படுகிறது. அதன்படி, அந்நாட்டில் உள்ள மாகாணங்களில் தங்கள் கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுக்க தனித்தனியே தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நியூ ஹம்ப்ஷர் மாகாணத்தில் குடியரசு கட்சி வேட்பாளருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹெய்லி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

இதில் 52.5 சதவிகித ஆதரவு பெற்று டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றார். அதேவேளை, 46.6 சதவிகித ஆதரவு பெற்று நிக்கி ஹெய்லி 2ம் இடம் பிடித்தார்.

இதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் தேர்வில் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் உள்ளார். இதன் மூலம் அதிபர் தேர்தலில் டிரம்ப் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதேவேளை, நியூ ஹம்ப்ஷர் மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story