இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டம்.. இங்கிலாந்து ராணுவ அமைச்சக கட்டிடத்தில் சிவப்பு பெயிண்ட் தெளித்ததால் பரபரப்பு


லண்டனில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் கீர் ஸ்டார்மரின் இல்லத்திற்கு வெளியே பாலஸ்தீன ஆதரவாளர்கள் சிலர் போராட்டம் நடத்தினர்.

லண்டன்:

இஸ்ரேலுக்கு இங்கிலாந்து அரசு ஆயுத விற்பனை செய்வதை கண்டித்து இங்கிலாந்தில் உள்ள பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று லண்டனில் உள்ள ராணுவ தலைமையகத்தின் அருகே போராட்டம் நடத்தினர். திடீரென ராணுவ அமைச்சக கட்டிடத்தின் சுவரில் சிவப்பு நிற பெயிண்டை ஸ்பிரே செய்தனர். 'இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்' என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தினர். இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, லண்டனில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் கீர் ஸ்டார்மரின் இல்லத்திற்கு வெளியே சிலர் போராட்டம் நடத்தினர். இதில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பின் அக்டோபர் 7 தாக்குதலைத் தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் தீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த போர் தொடங்கியதில் இருந்து இங்கிலாந்தில் உள்ள எம்.பி.க்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இதனால் பொது இடங்களில் ஆர்ப்பாட்டங்களுக்கான வரம்புகள் மற்றும் விதிமுறைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.


Next Story