அபுதாபியில் இந்து கோவில் கட்டுமான பணி... நேரில் பார்வையிட்டார் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்


அபுதாபியில் இந்து கோவில் கட்டுமான பணி... நேரில் பார்வையிட்டார் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்
x

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மற்றும் ஒத்துழைப்புடன் அபுதாபியில் இந்து கோவிலானது கட்டப்பட்டு வருகிறது என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம்,

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு, மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறைக்கான மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று சென்றார். அவருடன் பிற அதிகாரிகளும் உடன் சென்றனர். மத்திய மந்திரியை ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்வி மந்திரி அகமது அல் பலாசி முறைப்படி வரவேற்றார்.

இதன்பின்னர் அவர்கள் இருவரும் கல்வி மற்றும் திறன் மேம்பாடு துறையில் ஒருங்கிணைதல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றி ஆலோசனை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் இரு நாட்டு மந்திரிகளும் கையெழுத்திட்டனர். இதன்பின்னர், இந்தியா சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்வி மந்திரி அகமது அல் பலாசிக்கு, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் சால்வை அணிவித்து, புத்தகம் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.

இதன்பின், அபுதாபியில் கட்டுமான பணி நடைபெற்று வரும் இந்து கோவிலுக்கு மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் பூஜிக்கப்பட்ட செங்கல் ஒன்றை எடுத்து அடுக்கினார். தொடர்ந்து, அவருடன் சென்ற பிற அதிகாரிகளும் செங்கல்லை அடுக்கினார்கள்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, அபுதாபியில் கட்டப்பட்டு வரும் இந்து கோவிலை பார்வையிடுவதற்காக நான் வந்துள்ளேன். சுவாமிநாராயண் சம்பிரதாயத்திற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

பிரதமர் மோடிக்கும் கூட என்னுடையை நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஏனெனில், அவருடைய தலைமையின் கீழ் மற்றும் ஒத்துழைப்புடன் இந்த கோவிலானது கட்டப்பட்டு வருகிறது என்று பேசியுள்ளார்.


Next Story