வடகொரியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களில் பங்கு; இந்தியர் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா


வடகொரியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களில் பங்கு; இந்தியர் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா
x

இந்தியாவை சேர்ந்த தனியார் அனிமேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, வடகொரியாவின் அனிமேஷன் ஸ்டுடியோவுக்கு பணம் வழங்கி வருவதாக கூறி அவர் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்து இருக்கிறது.

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், நேற்று சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி அவற்றுக்கு காரணமானவர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.

அந்த வகையில் வடகொரியாவில் அரசால் நடத்தப்படும் எஸ்.இ.கே. என்கிற அனிமேஷன் ஸ்டுடியோ, அதன் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியத்தை வழங்கி அதிகப்படியான வேலை வாங்குவது உள்பட பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் இந்த நிறுவனத்துக்கு பொருள் ஆதரவு வழங்குவது அல்லது அதற்கு சாதகமாக செயல்படுவதன் மூலம் மனித உரிமை மீறல்களில் பங்கு வகித்ததாக கூறி ஒரு இந்தியர் உள்பட 2 பேர் மீதும், 7 நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த தனியார் அனிமேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தீபக் சுபாஷ் ஜாதவ் வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடகொரியாவின் எஸ்.இ.கே. அனிமேஷன் ஸ்டுடியோவுக்கு பணம் வழங்கி வருவதாக கூறி அவர் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்து இருக்கிறது. அதே போல் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கிம் மியோங் சோல் என்கிற தனிநபர் மீதும் சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 7 நிறுவனங்கள் மீதும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.


Next Story