இந்தியா செல்பவர்கள் அதிக கவனமுடன் இருக்கவும்; நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுரை

Image Courtesy: PTI
பயங்கரவாதம், குற்றச்செயல்கள் காரணமாக இந்தியா செல்பவர்கள் அதிக கவனமுடன் இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது.
வாஷிங்டன்,
சுற்றுலா, தொழில் உள்பட பல்வேறு காரணங்களுக்காக இந்தியா வரும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்க உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.
ஆண்டு தோறும் இந்த அறிவிப்பு வெளியாகும் நிலையில் இந்த ஆண்டுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் 2-ம் கட்ட நிலையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்தியாவில், பயங்கரவாதம் மற்றும் குற்றச்செயல்கள் காரணமாக இந்தியாவுக்கு செல்லும் நாட்டு மக்கள் (அமெரிக்கர்கள்) அதிக கவனமுடன் இருக்க வேண்டும்.
பயங்கரவாதம், அமைதியின்மை காரணமாக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம். ஆயுத மோதல் இருப்பதால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையின் 10 கிலோமீட்டர் அருகே செல்ல வேண்டாம்.
பாலியல் வன்கொடுமை குற்றங்கள் இந்தியாவில் அதிகரித்து வருவதாக இந்திய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது. பாலியல் குற்றங்கள் போன்ற மோசமான வன்முறைகள் சுற்றுலா தலங்கள் மற்றும் பிற இடங்களில் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டும் இந்தியா செல்லும் தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா இதுபோன்ற அறிவுரையை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா பரவல், பயங்கரவாதம் மற்றும் குற்றச்செயல்கள் காரணமாக இந்தியாவுக்கு செல்லும் நாட்டு மக்கள் (அமெரிக்கர்கள்) அதிக கவனமுடன் இருக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.