'அடுத்து நீங்கள் தான்' ஹரி பாட்டர் எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்...!


தினத்தந்தி 13 Aug 2022 11:18 PM GMT (Updated: 2022-08-14T04:58:08+05:30)

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது நேற்று முன் தினம் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

லண்டன்,

உலகின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி (வயது 75) மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் (ஆக.12 வெள்ளிக்கிழமை) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில், சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த சல்மான் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய 24 வயதான ஹடி மடர் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பிரபல எழுத்தாலர் ஜேகே ரவ்லிங்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பிரபலமான ஹரி பாட்டர் கதையை எழுதி பிரபலமானவர் ஜேகே ரவ்லிங். இவர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து இரங்கல் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக ஜேகே ரவ்லிங் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அதிர்ச்சியடைய வைக்கும் செய்தி. உடல்நிலை சரியில்லாதது போல் உணருகிறேன். அவர் நலமுடன் இருக்கட்டும்' என பதிவிட்டிருந்தார்.

ஜேகே ரவ்லிங் டுவிட்டர் பதிவிற்கு கீழே கருத்துபதிவிடும் பகுதியில், மீர் ஆசிப் அஜீஸ் என்ற பெயரில் டுவிட்டர் கணக்கு கொண்ட நபர், 'கவலைப்படவேண்டாம் அடுத்து நீங்கள் தான்' என கொலை மிரட்டல் விடுத்து டுவிட் செய்துள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த ஜேகே ரவ்லிங்கிற்கு டுவிட்டரில் கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க... ஈரானால் தலைக்கு 3 மில்லியன் டாலர்கள் வெகுமதி அறிவிக்கப்பட்ட பிரபல எழுத்தாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் - யார் இவர்?Next Story