இரவல் பொருட்கள்


இரவல் பொருட்கள்
x
தினத்தந்தி 21 Nov 2017 12:30 AM GMT (Updated: 20 Nov 2017 3:12 PM GMT)

அடுத்தவரிடமிருந்து ஏதேனும் ஒருபொருளை இரவலாக வாங்குகின்றோம். பின்னர் சாதாரணப் பொருள்தானே என்று திருப்பித் தராமல் அதனை அப்படியே மறந்து விடுகின்றோம்.

இஸ்லாம்

அடுத்தவரிடமிருந்து ஏதேனும் ஒருபொருளை இரவலாக வாங்குகின்றோம். பின்னர் சாதாரணப் பொருள்தானே என்று திருப்பித் தராமல் அதனை அப்படியே மறந்து விடுகின்றோம். பொருளைத் தந்தவர் இதையெல்லாம் எப்படித் திருப்பிக் கேட்பது என்ற வெட்கத்தில் இருப்பார். இதையெல்லாம் அவர் கேட்கவா போகின்றார் என்ற மெத்தனத்தில் நாமும் இருப்போம்.

ஆயினும் அல்லாஹ்வின் ஏட்டில் இவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதை ஏனோ மறந்து விடுகின்றோம். அற்பப் பொருள்தானே என்று நாம் கருதும் எந்த ஒன்றும் அல்லாஹ்வின் பார்வையில் அற்பமாக இருப்பதில்லை. வாசித்து முடித்த புத்தகம், சின்னச்சின்ன வீட்டு உபயோகப் பொருட்கள், மாலையில் வாங்கிப் படிக்கும் இரவல் தினசரி, தேதி முடிந்த பத்திரிகைகள் என்று அடிக்கிக்கொண்டே போகலாம். இவை அனைத்தும் அடைக்கலப் பொருட்களே.

அடுத்தவரிடமிருந்து இவற்றை வாங்கும்போது இரவல் மனோபாவத்துடன் தான் வாங்குகின்றோம். ஆயினும் திருப்பிக் கொடுப்பதே இல்லை. இதையெல்லாம் எப்படித் திருப்பிக் கேட்பது என்ற வெட்க உணர்வில் அவர்களும் கேட்கமாட்டார்கள். அவர்கள் திருப்பிக் கேட்கின்றார்களோ இல்லையோ.. கொடுப்பது நமது கடமையில்லையா..? அதுதானே முறையாகவும் நேர்மையாகவும் இருக்கும்.

ஜாஹிலிய்யா எனும் அறியாமைக் காலத்தில் கஅபா ஆலயத்தைப் பாரமரிக்கும் பொறுப்பு உஸ்மான் பின் தல்ஹா அவர்களுடைய குடும்பத்தினரிடம் இருந்தது. கஅபாவின் திறவுகோலும் அவர்களிடம்தான் இருந்தது. அவர்கள் விரும்பும் மக்களை ஆலயத்திற்கு உள்ளே அனுமதிப்பார்கள். விரும்பாதவர்களை அனுமதிப்பது கிடையாது.

இஸ்லாத்தின் ஆரம்ப நாட்கள். ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் தல்ஹா அவர்களிடம், தம்மையும் அந்த ஆலயத்திற்கு உள்ளே அனுமதிக்குமாறு வேண்டினார்கள். உஸ்மான் அவர்கள் அப்போது இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. நபிகளார் மீதும் இஸ்லாத்தின்மீதும் வன்மம் கொண்டிருந்த நேரமது. உம்மைப் போன்றவர்களை ஒருபோதும் உள்ளே விடமுடியாது என்று கூறிவிட்டார். இறைத்தூதருக்கோ அது பெரும் மனவருத்தத்தைத் தந்தது.

அந்த வருத்தத்துடனேயே உஸ்மான் பின் தல்ஹா அவர்களிடம் நபிகளார் கூறினார்கள்: “உஸ்மான்! ஒன்றை நன்றாக நினைவில் வையுங்கள். இதோ இப்போது உமது கரங்களில் இருக்கும் இந்தத் திறவுகோல்.. ஒருநாள் என் கரங்களுக்கு வரும். அப்படி வரும் நாளில் அந்தத் திறவுகோலை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்ற அதிகாரமும் என்னிடம் இருக்கும். நினைவில் வையுங்கள். மறந்துவிடாதீர்கள்”.

இதனைச் செவியுற்ற உஸ்மான் பின் தல்ஹா அவர்களும் விடவில்லை. அவர் கூறினார்: “முஹம்மதே! அப்படி ஒருநாள் வரவே வராது. அவ்வாறு வந்துவிட்டால் அந்த நாளில் இந்த உஸ்மான் மண்ணுக்கு மேலாக உயிரோடு இருப்பதைவிட மண்ணோடு மண்ணாக மடிந்து போயிருப்பான்”.
நாட்களும் வருடங்களும் ஓடின. மக்கா வெற்றி கொள்ளப்படுகிறது. வெற்றித் திருமகனாய் பெருமானார் (ஸல்) அவர்கள் கஅபாவுக்கு முன்பாக அமர்ந்து இருக்கின்றார்கள். கஅபாவைத் திறந்து அங்கிருக்கும் சிலைகளை அகற்றி அதனைச் சுத்தம் செய்யவேண்டும். ஆயினும் திறவுகோல்..? அது உஸ்மான் பின் தல்ஹா அவர்களிடம் அல்லவா இருக்கிறது.

பழைய உரையாடல்கள் நினைவலையில் வந்து போகிறது. அருகில் இருந்த மக்களிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்டார்கள், “உஸ்மான் எங்கே?”. “இதோ இருக்கின்றேன்” என்று கூறுகின்றார். “கஅபாவின் திறவுகோல் எங்கே?”. “இதோ இருக்கிறது” என்று கூறி தன்னிடம் இருந்த சாவியை எடுத்துக்  கொடுக்கின்றார்.

திறவுகோலை வாங்கிய நபிகளார் அதனைப் பார்வையிடுகின்றார்கள். என்ன வேண்டுமென்றாலும் செய்வதற்கான அதிகாரம் தன்னிடம் இப்போது இருக்கிறது. இந்தச் சாவியைக் கூட தாம் விரும்பும் யாருக்கு வேண்டுமென்றாலும் கொடுக்கும் அதிகாரமும் உள்ளது. காலம் காலமாக அதனைத் தங்கள் கைவசம் வைத்திருந்த உஸ்மான் பின் தல்ஹா அவர்களும் அங்கே நிற்கின்றார்கள்.

கஅபாவைப் பராமரிக்கும் பணி என்பது கண்ணியம் மிக்க ஒருபணி. யாருடைய குடும்பத்திற்கு அந்தப் பேறு வழங்கப்படுகிறதோ அவர்களுக்கு மக்களும் கண்ணியம் கொடுப்பார்கள். ஆகவே அனைவரது கண்களும் அந்தத் திறவுகோல் மீதே இருந்தது.

அண்ணலாருக்கு அருகே அவரது பெரியதந்தை அப்பாஸ் (ரலி) நின்றுகொண்டிருந்தார். காதருகே குனிந்து பெருமானார் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! அந்தத் திறவுகோலை என்னிடம் தாருங்கள். இன்றுமுதல் இந்த ஆலயத்தைப் பராமரிக்கும் பணியை நான் மேற்கொள்கிறேன்”.

பெருமானார் எதுவும் கூறவில்லை. கஅபாவைத் திறந்தார்கள். உள்ளேயே வலம் வந்தார்கள். அப்போதுதான் அந்த மாயம் நடந்தது. ஆம். ஆலயத்திற்குள்ளே வலம் வந்துகொண்டிருக்கும்போதே இறைக்கட்டளையுடன் வானவர் கோமான் ஜிப்ரீல் (அலை) வந்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அந்தத் திறவுகோலை உஸ்மான் பின் தல்ஹா அவர்களிடமே ஒப்படைத்துவிடுங்கள்” என்று கூறினார்கள். பின்வரும் வசனம் இறக்கியருளப்பட்டது:

“முஸ்லிம்களே!) அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான். அமானத் - அடைக்கலப் பொருட்களை அவற்றிற்குரியவர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடுங்கள்; நீங்கள் மக்களிடையே தீர்ப்பு வழங்கினால் நீதத்துடன் தீர்ப்பு வழங்குங்கள். திண்ணமாக, அல்லாஹ் உங்களுக்கு வழங்குகின்ற அறிவுரை மிக உன்னதமானதாகும். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்”. (4:58)

இந்த வசனத்தை ஓதியவாறே நபிகளார் கஅபாவை வலம் வந்தார்கள். பின்னர் வெளியே வந்து “உஸ்மான் பின் தல்ஹா (ரலி) எங்கே?” என்று விசாரித்தார்கள். “இதோ இருக்கின்றேன் இறைத் தூதரே!” (ஆம். அவர் இஸ்லாத்தை ஏற்றுவிட்டார்) என்று அவர் கூறினார். “நீட்டுங்கள் உங்கள் கரங்களை”. கரத்தை நீட்டினார். அதில் அந்தத் திறவுகோலை வைத்தார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள். “மறுமைநாள் வரை இது உங்களிடமே இருக்கட்டும்” என்று கூறினார்கள்.

தனக்கு அநீதி இழைத்தவராக இருந்தாலும் ஒருவரிடமிருந்து வாங்கிய அடைக்கலப் பொருட்களை அவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்ற இறைக் கட்டளையைப்பாருங்கள். இஸ்லாம் என்பது இறைவனை நம்பிக்கைக் கொண்டேன் என்று வாயால் கூறிவிட்டு எதுவும் செய்யாமல் இருப்பதல்ல. மாறாக இறைநம்பிக்கை என்பது செயலில் வெளிப்பட வேண்டும். நம்பிக்கையும் நாணயமும் செயலில் வெளிப்படும்போதுதான் இஸ்லாம் எவ்வளவு உயரிய மார்க்கம் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரியவரும். நம்பிக்கை செயலாக வெளிப்படாதவரை அது உண்மையான நம்பிக்கையாக மலராது.

நூஹ் மஹ்ழரி, குளச்சல்.


Next Story