அற்புதம் செய்யும் ஐயன்


அற்புதம் செய்யும் ஐயன்
x
தினத்தந்தி 6 Dec 2017 8:17 AM GMT (Updated: 6 Dec 2017 8:16 AM GMT)

கேரளாவில் கோவில் கொண்டிருக்கும் ஐயப்பனின் பிறப்பு, வளர்ப்பு குறித்து பல்வேறு கதைகளும், புராணங்களும் இருந்தாலும், அவர் சிவ-விஷ்ணு குழந்தையாக அவதரித்தவர் என்பதே பொதுவாக அனைவராலும் அறியப்பட்ட ஐயப்பனின் வரலாறாக உள்ளது.

மகிஷாசுரன் என்ற அசுரனை துர்க்காதேவி அழித்தாள். அவனது தங்கை மகிஷி என்பவள், தன் சகோதரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என்பதால், தேவர்களையும், பூலோகத்தில் இருந்த முனிவர்களையும் இம்சித்து வந்தாள். அவளை அழிப்பதற்காக ஐயப்பனின் உருவானது. ஏனெனில் மகிஷி, பிரம்மதேவனிடம் ஒரு சிக்கலான வரத்தைப் பெற்றிருந்தாள். அதாவது, ‘எனக்கு மரணம் என்று ஒன்று நிகழ்ந்தால், அது ஈசனுக்கும், திருமாலுக்கும் பிறக்கும் குழந்தையால் தான் நிகழவேண்டும். அதுவும் அந்தக் குழந்தையின் 12 வயது பிரயாத்தின்போது தான் நான் அழிக்கப்பட வேண்டும்’ என்றாள்.

இரண்டு ஆண்கள் இணைந்து குழந்தை பெறுவது என்பது சாத்தியமில்லை, ஆகையால் தனக்கு அழிவும் இல்லை என்பதாலேயே இந்த வரத்தை மகிஷி கேட்டிருந்தாள். ஆனால் விஷ்ணு மோகினி உருவம் கொண்டபோது, ஐயப்பன் அவதாரம் நிகழ்ந்தது.

பந்தள மகாராஜா ராஜசேகரன், வனத்தில் வேட்டையாடச் சென்றபோது, பம்பா நதிக்கரையில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அந்தக் குழந்தையே ஐயப்பன். குழந்தையில்லாமல் ஏக்கத்தில் இருந்த பந்தளராஜன், அந்தக் குழந்தையை எடுத்து வந்து வளர்த்தான். குழந்தையின் கழுத்தில் மணி ஒன்று கிடந்ததால், ‘மணிகண்டன்’ என்று பெயரிட்டான்.

வருடம் செல்கையில், பந்தள ராணி கர்ப்பம் தரித்தாள். அவளுக்கு ஒரு ஆண் குழந்தைப் பிறந்தது. இருப்பினும் ஐயப்பனுக்கே பட்டம் சூட்டப்படும் என்றார் பந்தளராஜன். மந்திரியும், ராணியும் சூழ்ச்சி செய்து, ஐயப்பனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். அதன்படி ராணிக்கு மருந்துகளால் குணமாகாத தலைவலி ஏற்பட்டிருப்பதாகவும், காட்டிற்குச் சென்று புலியின் பாலைக் கொண்டுவந்தால் நோய் குணமாகும் என்றும் நாடகமாடினர்.

12 வயது நிரம்பிய ஐயப்பன், புலிப் பாலை கொண்டு வருவதாகக் கூறி காட்டிற்குப் புறப்பட்டார். அங்கு ஐயனின் வரவிற்காக காத்திருந்த தேவர்கள், பொன்னம்பல மேட்டில் அவரைச் சந்தித்து மகிஷியால் தாங்கள் படும் வேதனைகளைக் கூறினர். இதையடுத்து ஐயப்பன் தேவேலாகம் சென்று, மகிஷியை வென்று பூலோகத்தில் தள்ளினார். மகிஷி வந்து விழுந்த இடமே அழுதா நதிக்கரை என்று தற்போது அழைக்கப்படுகிறது.

மகிஷி வதம் செய்யப்பட்டதும், அவளது அரக்க உருவம் மறைந்து அழகிய பெண்ணாக மாறினாள். பின்னர் ஐயனை அடையும் தன்னுடைய ஆவலை தெரிவித்தாள்.

ஆனால் ஐயப்பன், தன்னுடைய பிரம்மச்சரிய விரதத்தை எடுத்துரைத்து, 'அது சாத்தியமாகாது' என்று கூறிவிட்டார். ஆனால் தான் இருக்கும் இடத்தின் இடது பக்கத்தில் மாளிகைபுரத்து அம்மன் என்ற பெயரில் வீற்றிருக்கும் வாய்ப்பை அவளுக்கு அளித்தார்.

மகிஷியின் துன்பத்தில் இருந்து விடுபட்ட தேவர்கள் அனைவரும் புலியாக மாறி, ஐயப்பனுடன் புறப்பட்டனர். புலிக்கூட்டம் ஊருக்குள் வருவதைக் கண்ட அனைவரும் பயந்து நடுங்கினர். ஐயப்பனின் பெருமையை அனைவரும் உணர்ந்தனர். ராணியும், மந்திரியும் இறைவனிடம் மன்னிப்பு வேண்டினர்.

எல்லாம் அவதார நோக்கத்திற்காக நடைபெற்றவை என்பதை எடுத்துரைத்த ஐயப்பன், தான் அமைதியாக சூழலில் இருந்து தியானம் செய்ய தனக்கு ஒரு ஆலயம் எழுப்பும்படி கூறினார்.

ஒரு அம்பை எய்து, அது விழும் இடத்தை தன்னுடைய ஆலயம் அமைக்க தேர்வு செய்தார். அந்த அம்பு விழுந்த இடமே சபரிமலை. அங்கே தனக்கு 18 படிகளுடன் கிழக்கு நோக்கி ஆலயம் அமைக்கும்படியும், அருகிலேயே மாளிகைபுரத்து அம்மனுக்கும் சன்னிதி உருவாக்கும்படியும் கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தார்.

ஐயப்ப விரத முறை

சபரிமலையில் வாழும் ஐயப்பனை 41 நாட்கள் விரதம் இருந்து வழிபட வேண்டும் என்பது நியமமாகும். 12 வயது பாலகனாக இருந்த மணிகண்டனை, வஞ்சமாக காட்டுக்கு அனுப்பிய ராணியும் மந்திரியும், 41 நாட்கள் கடும் அவதிப்பட்டனர். உடலை வருத்தி துன்பத்தை அனுபவித்தனர். அதுவே அவர்களுக்கு தண்டனையாக அமைந்தது. இறுதியில் ஐயப்பனை சரணடைந்தனர். அவர்கள் இருவரும் விரதம் இருந்ததன் மூலமாகவே 41 நாட்கள் விரதம் இருக்கும் முறை வந்தது. தற்போது 41 நாட்கள் விரதம் என்பது ஒரு மண்டலமாக, அதாவது 48 நாட்களாக மாறி இருக்கிறது.

குருசாமியின் கைகளால் துளசிமணி, ருத்திராட்சம் மாலைகளை அணிந்து கடவுள் சன்னிதியில் விரதம் மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்த நாள் முதல் மலைக்குச் சென்று வரும் வரை, முடி, நகம் வெட்டவோ, சவரம் செய்யவோ கூடாது . மாலை அணிந்தது முதல் இறைநிலை பெற்ற உணர்வுடன் வாழ்தல் வேண்டும். சொகுசு வாழ்வை துறக்க வேண்டும். அனாவசியமான பேச்சுகளை தவிர்க்க வேண்டும். மனைவி மற்றும் பிற பெண்களை தாயாகவும், சகோதரியாகவும் மதிக்க வேண்டும்.

மனசுத்தம் பேண வேண்டும். அன்றாடம் காலை, மாலை இருவேளையும் குளித்துவிட்டு உடல் தூய்மையோடு, அக்கம் பக்கத்தினரை அழைத்து, ஐயப்பன் பாடல்களை பாடி பிரசாதம் தந்து இறையருளைப் பெறவேண்டும். எவ்வளவு பெரிய செல்வந்தரானாலும் இறைவன் முன் ஒன்றுதான் என உணர்ந்து பார்ப்பவர்களை எல்லாம், இறைவனின் வடிவமாகக் கண்டு ‘சாமி’ என அழைக்க வேண்டும். ஆணவம், அகங்காரம், பதவி மோகம், இல்வாழ்க்கை இச்சைகள், போதை வஸ்துகள், அசைவம் போன்றவற்றை விடுத்து உண்மையான பக்தியோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் விரதம்இருக்க வேண்டும்.

இப்படி மன உறுதியுடன், தான் எனும் மமதையை விட்டு, ஐயப்பன் மேல் ஒருமுகமாக சிந்தை வைத்து நம்பிக்கையுடன் விரதம் இருக்கும் பக்தர்கள், பதினெட்டுப்படி ஐயப்பன் அருளால், வாழ்வில் ஒவ்வொரு படியையும் எளிதாக கடந்து வெற்றியுடன் நிம்மதியான வாழ்வைப் பெறுவார்கள் என்பது நிச்சயம்.

தத்துவம் சொல்லும் ‘கால்கட்டு’

கார்த்திகை மாதம் வந்தாலே ஐயப்ப பக்தர் களுக்கு கொண்டாட்டம்தான். கடுங் குளிரையும் பொருட்படுத்தாமல் குளிர்ந்த நீரில் குளித்து, உடல்சுத்தம், மனசுத்தத்துடன் அந்த ஐயப்பனின் அருளை வேண்டி காடு மேடு கடந்து சென்று சரணம் அடைவதில் உள்ள சுகத்தை, அதை அனுபவித்தவர்கள் மட்டுமே அறியமுடியும்.இந்து மதத்தில் எண்ணிலடங்கா இறை வழிபாடுகள் இருந்தாலும், மண்ணில் மனிதனாகப் பிறந்து, இறைநிலையை அடைந்தவரான ஐயப்பனின் வழிபாடு அனைவரையும் கவரும் ஒன்றாக இருக்கிறது. நேர்மை, ஒழுக்கம் போன்ற பாதையில் செல்ல வலியுறுத்தும் விரதமாக ஐயப்ப வழிபாடு இருப்பதும், பக்தர்கள் பலர் சபரிமலை தரிசனத்தைத் தேர்வு செய்ய ஒரு காரணமாக உள்ளது.

தான்தோன்றித் தனமாக ஊரைச் சுற்றிவருபவர்களை, ‘ஒரு கால்கட்டு போட்டால் சரியாகிவிடுவான்’ என்று சொல்லக் கேட்டிருப்போம். அந்த கால்கட்டுக்கு ‘திருமணம் செய்து வைத்தல்' என்பது பொதுவான பொருளாக இருக்கிறது. ஆனால் கால்கட்டு என்பதற்கு ‘பாதை மாறாது மனதை ஒருநிலைப்படுத்தி வாழ்வது’ என்பதே சரியான பொருளாகும்.

சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பன், குத்து காலிட்டு, கால்கள் கட்டப்பட்ட நிலையில்தான் காட்சி தருகிறார். அவர் தன்னுடைய தவத்தை யாரும் கலைத்து விடக்கூடாது என்பதற்காக மனதை ஒரு நிலைப்படுத்தியபடி அமர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. ஐயப்பனின் இந்த தரிசனம், எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் தங்கள் இலக்குகளை மனிதர்கள் விட்டுவிடக்கூடாது என்பதை வலியுறுத்துவதாக கூறு கிறார்கள்.

ஐயப்பன் வழிபாடு ஏராளமான வாழ்வியல் தத்துவங்களை உள்ளடக்கி உள்ளது. நிலையற்ற இந்த பூலோக வாழ்க்கையில், வாழும் காலத்திலேயே நல்லவராக வாழ்ந்து பிறவிப் பெருங்கடலை கடக்கும் எளிய வழியை காட்டுகிறது ஐயப்பன் வாழும் சபரிமலையின் வரலாறு. ஆடம்பர வாழ்வு நிலையற்றது என்று உணர்த்தவே ஐயப்ப பக்தர்கள் எளிமையான ஆடையை.. சீருடைபோல் அணிந்து செல்கிறார்கள். மேலும் அனைவரும் சமத்துவமானவர்கள் என்பதற்காகவே ஒரே மாதிரியான இருமுடி கட்டி மலை யேறுகின்றனர்.

-சேலம் சுபா.

திரு ஆபரணம்

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் தேதி, சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பன் ஆலயத்தில் மகர விளக்கு பூஜையும், அன்று மாலை மகரஜோதி தரிசனமும் நடைபெறும். இது மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாடுகளின் ஒன்றாகும்.

மகர விளக்குப் பூஜையை முன்னிட்டு, அவர் வளர்ந்த பந்தளராஜா அரண் மனையில் இருந்து திரு ஆபரணம் கொண்டு வரப்படும். பந்தளராஜா அரண்மனையானது, பந்தளத்தில் அச்சன்கோவில் ஆற்றை ஒட்டியுள்ள ஐயப்பனின் வலிய கோயிக்கால் என்றழைக்கப்படும் கோவிலுக்கு அருகில் இருக்கிறது.

சபரி மலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும், பந்தளத்திற்கு வந்து அங்குள்ள ஆலயத்தில் பிரார்த்தனை செய்து விட்டு, பின்னர் அரண்மனையில் உள்ள திரு ஆபரணத்தை பக்தியுடன் தரிசித்துச் செல்வார்கள். கார்த்திகை மற்றும் மார்கழி ஆகிய இரண்டு மாதங்கள் மட்டுமே இந்த திரு ஆபரணம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும்.

மகர விளக்குப் பூஜைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், வலிய கோயிக்கால் சாஸ்தா ஆலயத்தில் இருந்து திரு ஆபரணத்தை ஊர்வலமாக தூக்கிக் கொண்டு சபரிமலையை நோக்கி புறப்படுவார்கள். ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் அந்த ஆபரணங் களை, பந்தளராஜா வம்சத்தைச் சேர்ந்த மூத்த குடும்ப உறுப்பினர் தலையில் சுமந்தபடி கொண்டு செல்வார். இந்த திரு ஆபரணம் ஊர்வலமாக புறப்படும் நேரத்தில் இருந்து, சபரிமலை ஐயப்பன் ஆலயத்தைச் சென்றடையும் வரையான நேரத்தில் மட்டும் வானத்தில் ஒரு கழுகு தோன்றி, திரு ஆபரணம் செல்லும் பாதையில் பறந்தபடி இருக்கும். இது இன்று வரை ஆண்டுதோறும் நடந்து வரும் ஒரு அதிசய நிகழ்வாகும்.

அஞ்ஞானத்தை அழிக்கும் குரு

பணம், பொருள் போன்ற சிற்றின்பத்தின் மீது ஆசை கொள்ளாதவர்களே இந்த உலகில் இல்லை. ஆழ்ந்த பக்தி, மன உறுதி என்பது எல்லாருக்கும் இருப்பதில்லை. மனதிற்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுத்து, மனிதனை கட்டுப்படுத்த நல்ல ஆசிரியர் தேவைப்படுவது போல, சபரிமலை சென்று மெய்யாக அமர்ந்திருக்கும் ஐயப்பனை தரிசனம் செய்து வருவதற்கும் அனுபவமுள்ள குரு சுவாமியின் உதவியானது கட்டாயம் தேவை.

‘கு’ என்பதற்கு அஞ்ஞானம் என்றும், ‘ரு’ என்பதற்கு ஒழிப்பது என்றும் பொருள். குரு என்றால் அஞ்ஞானத்தை ஒழிப்பவர் என்று அர்த்தம். ஞானம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்து கிடக்கிறது. அதனை வெளிக்கொண்டு வருபவர்தான் குரு. அனைவரிடமும் தெய்வ சிந்தனை இருக்கிறது. ஆனால் அதனை பயன்படுத்தி தெய்வத்தை வழிபடும் வகை தெரியாமல் இருள் என்னும் அஞ்ஞானத்தில் பலர் உள்ளனர். அவர்களின் இருளைப் போக்கும் ஒளி தீபம் தான் குரு. அத்தகைய குருவை நாடிச் சென்று விரதம் இருந்து, அந்த குருவின் மூலமாகவே சபரிமலை வாசனை வந்தடைய வேண்டும் என்பது சபரிமலைக்கு வருபவர்களுக்கு சபரிகிரீசன் விதித்திருக்கும் விதிகளில் ஒன்று.

Next Story