ஆன்மிக ஒருமைப்பாடு


ஆன்மிக ஒருமைப்பாடு
x
தினத்தந்தி 2 Feb 2018 12:45 AM GMT (Updated: 1 Feb 2018 8:54 AM GMT)

ஆன்மிகம் என்பது இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நேரடி உறவைக் குறிப்பது. மதம் என்பது அந்த ஆன்மிக உறவை உருவாக்கித் தர இருக்கின்ற கட்டமைப்பு.

ஆன்மிக செழுமையையே மதங்கள் முன்னெடுத்துச் செல்லவேண்டும். அதற்கான ஒருமைப்பாடே இன்றைக்கு மிகவும் அவசியமான ஒன்று.

ஒருமைப்பாடு எப்போதும் நல்லதா? சர்வதேச நாடுகளை வன்முறையால் அழிக்க நினைக்கும் தீவிரவாத இயக்கங்களிடமும் ஒருமைப்பாடு இருக்கிறதே. நாட்டை கொள்ளையடிக்க நினைக்கும் ஆள்பவர்களிடையேயும் புரிந்துணர்வு இருக்கிறதே. ஏன், இயேசுவைக் கொல்ல வேண்டும் என முடிவெடுத்த மதத் தலைவர்களிடமும் ஒற்றுமை இருந்ததே. எனில், ஒருமைப்பாடு என்பது எப்போதும் நல்லது என்று சொல்லி விடமுடியாது.

ஒருமைப்பாடு நன்மையாகவோ, தீமையாகவோ முடியலாம். நாம் எதன் அடிப்படையில் ஒன்றுபட்டிருக்கிறோம் என்பதை வைத்தே அது தீர்மானிக்கப்படும். நன்மையின் பக்கம் இணைந்து நிற்பது நன்மையில் முடியும். தீமையின் பக்கம் தலைசாய்த்தால் அது தீமையாகவே முடியும்.  

கிறிஸ்தவர்கள் இணைந்து நிற்பது வேறு, கிறிஸ்துவோடு இணைந்து நிற்பது என்பது வேறு. கிறிஸ்தவர்கள் இணைந்து நிற்பது எப்போதும் நல்லது என்று சொல்ல முடியாது. கருப்பர்களுக்கு எதிராக இணைந்து போராடிய அமெரிக்க திருச்சபைகள் ஏராளம். விவிலியம் எதிர்க்கின்ற பாலியல் உரிமைகளுக்காக இணைந்து போராடிய இறைமக்கள் ஏராளம்.

ஆன்மிக ஒருமைப்பாடு என்பது எப்படி இருக்க வேண்டும்?

1. அன்பின் ஒருமைப்பாடு

‘முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்’ என்கிறது எபேசியர் 4:2,3 வசனங்கள்.

அன்பின் ஒருமைப்பாடு என்பது தூய ஆவி அருளும் வாழ்க்கையை வாழ்வதே. அவரது கனிகளின் படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே. இயேசுவின் மரணத்துக்குப் பின், அச்சத்தால் பயந்து கிடந்த அப்போஸ்தலர்களை இணைத்து, வலுவூட்டியவர் தூய ஆவியானவர். அந்த தூய ஆவியானவரின் ஒருமைப்பாடு நமக்கு வலிமையையும், சரியான வழியையும் காட்டும்.

ஆழமான அன்பு கிறிஸ்தவ ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும். குடும்பங்களில் தொடங்கி, திருச்சபைகளில் வளர்ந்து, சமூகத்தில் பரவும் இந்த அன்பு தான் கிறிஸ்தவர்களை அடையாளப்படுத்த வேண்டும். அத்தகைய அன்பு கொள்வதில் ஒருமைப்பாட்டோடு இருக்க வேண்டும்.

2. ஒன்றித்தலின் ஒருமைப்பாடு

‘நானே திராட்சைக்கொடி, நீங்கள் அதன் கிளைகள்’ என்றார் இயேசு. திருச்சபையின் மக்கள் அனைவருமே இயேசு எனும் கொடியின் கிளைகளே. அந்த கிளைகள் பார்வைக்கு வேறுபடுகின்றன. அவற்றின் செயல்பாடுகள் வேறுபடுகின்றன. ஆனால் இலக்கு ஒன்றே.

செடியோடு இணைந்தே இருப்பது. செடியோடு இணைந்தே வளர்வது. கொடியை விட்டு தனியே செல்கின்ற கிளை விறகாகும். அதில் ஆன்மிக பச்சையம் இருப்பதில்லை.

3. பொதுநலத்தின் ஒருமைப்பாடு


உலக ஒருமைப்பாடுகள் பெரும்பாலும் லாப நோக்கத்துக்கானவையே. ஒரு தொழில் ஆனாலும் சரி, ஒரு அலுவலக வேலையானாலும் சரி அல்லது வேறெந்த பணியாய் இருந்தாலும் சரி. லாப நோக்கங்களும், சுயநல கணக்குகளுமே தொடர்புகளை உருவாக்கும். ஆனால் இறைவன் விரும்பும் ஒருமைப்பாடு சுயநலமற்ற சிந்தனைகளின் விளைவாக இருக்க வேண்டும்.

‘கட்சி மனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள்’ என்கிறது பிலிப்பியர் 2:3. அடுத்தவரை உயர்வாய்க் கருதும் இடத்தில் சுயநல சிந்தனைகள் செயலிழக்கும்.


4. எதிர்நோக்கின் ஒருமைப்பாடு


‘அதனால் நாம் எல்லாரும் இறை மகனைப் பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம்’ (எபேசியர் 4:13) என்கிறது விவிலியம்.

கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை இறைமகன் மீதான எதிர்நோக்கு தான். அந்த விசுவாசத்தின் மீது கட்டியெழுப்பப்படாத எந்த கட்டிடமும் நிலைப்பதில்லை.

5. செபத்தில் ஒருமைப்பாடு


‘உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர் களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார் இயேசு.

மனமொத்த செபத்தை இயேசு முன்மொழிகிறார். கூடி செபிக்கும்போது செபம் தன்னலத் தேவைகளைத் தாண்டியதாக மாறி விடுகிறது. இறைவன் விரும்புகிற ஒருமைப்பாடு என்பது பணி சார்ந்ததாக இருக்க வேண்டும். வெறுமனே வார்த்தைகளால் இறைவனைப் புகழ்வதோ, அடையாளங்களால் அவரை வெளிப்படுத்துவதோ இறைவனின் விருப்பத்துக்குரியதல்ல. அவரோடு இணைந்து பணியாற்றுவதன் முதல் பணி, செபத்தில் ஒன்றிணைவதே.

இந்தகைய ஆழமான அன்பின் ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவோம். வேற்றுமையும், வெறுப்பும் இல்லாத ஒரு அன்பின் சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்.

–சேவியர்

Next Story