கிறிஸ்தவம் : எது கிறிஸ்தவ வாழ்க்கை?


கிறிஸ்தவம் : எது கிறிஸ்தவ வாழ்க்கை?
x
தினத்தந்தி 13 Feb 2018 11:12 AM GMT (Updated: 13 Feb 2018 11:12 AM GMT)

கிறிஸ்தவ வாழ்க்கை எது என்பதில் பலருக்கும் குழப்பம். அந்தக் குழப்பத்திற்கு காரணம் இறைவார்த்தையைத் தவறாகப் புரிந்து கொள்வது தான்.

இறைவார்த்தைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக தேவைக்கேற்ப எடுத்துப் பயன்படுத்துவது அதன் முழுமையை நீர்த்துப் போகச் செய்து விடுகிறது.

இறை வார்த்தை என்பதை இறைவனாகவே பார்க்கிறது கிறிஸ்தவம். ஆதியில் வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை கடவுளோடும், கடவுளாயும் இருந்தது என்கிறது விவிலியம்.

ஆதியில் இருந்த அந்த வார்த்தையானவர் தான் மனிதனாய் மண்ணில் வந்த இறைமகன் இயேசு என்பதை “வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்” (யோவான் 1:14) எனும் இறை வார்த்தை விளக்குகிறது.

வார்த்தையான இறைவனின் வரவு, நமக்கு வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை விளக்குகிறது. அவற்றில் ஒரு சில சிந்தனைகளை நாம் பார்ப்போம்.

தாழ்மை அணி

விண்ணில் சர்வ அதிகாரமும் படைத்தவராய் இருந்த இறை மகன் இயேசு, அனைத்தையும் விட்டு விட்டு, ஏழையிலும் ஏழையாக பிறந்தார். தனது இறைத் தன்மையை விட்டு விட்டு எல்லோருக்கும் பணி செய்யும் பணியாளராய் வந்தார்.

எல்லாவற்றிலும் பெரியவரான இறைமகன், எல்லாரையும் விட எளியவராய் வந்தது தாழ்மையின் மிகப்பெரிய உதாரணம்.

எல்லோரையும் விட தன்னை உயர்த்த‌ நினைத்த லூசிபர் சாத்தான் ஆனான். எல்லாரையும் விட தன்னைத் தாழ்த்திய இயேசு மீட்பர் ஆனார். தாழ்மை மனிதனை இறைவனின் சாயலாய் மாற்றுகிறது. தாழ்மை நாம் கற்றுக் கொள்ளவேண்டிய முதல் பாடம்.

தூய்மை கொள்

“அவரோடு இணைந்திருப்பதாகக் கூறுவோர் அவர் வாழ்ந்தவாறே வாழக் கடமைப்பட்டவர்கள்” என்கிறது 1 யோவான் 2:6 வார்த்தை.

இயேசு நம்மைப் போல எல்லா விதங்களிலும் சோதிக்கப்பட்டும் பாவம் இல்லாதவராய் இருந்தார் என்கிறது விவிலியம். பாவம் இல்லாத வாழ்க்கை என்பது சாத்தியமே இல்லை என்பது தான் உலகம் நமக்குச் சொல்லும் செய்தி. “ஊரோடு ஒத்து வாழ்” என்பது அவர்கள் சொல்லும் சாக்குப் போக்கு. “இப்படியெல்லாம் வாழவே முடியாது” என்பது அவர்கள் நம்பும் மாயை. ஆனால் இயேசுவோ பாவமே இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து அந்தக் கூற்றையெல்லாம் பொய்யாக்கினார்.

தூய்மை நாம் பெற்றுக் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம்.

சோதனை தாண்டு

மனிதனாய் வந்த கடவுளின் மகனுக்கு சோதனைகள் வந்தன. சாத்தான் அவரைச் சோதித்தபோது அவர் இறைவார்த்தையைக் கொண்டே சாத்தானுக்கு பதிலடி கொடுத்தார்.

அதாவது, இறைவார்த்தையின் மனித வடிவம், இறைவார்த்தையைக் கொண்டு சாத்தானை விரட்டியது எனலாம். நாமும் நமது வாழ்க்கையில் வருகின்ற ஒவ்வொரு சோதனையையும் இறைவார்த்தையைக் கொண்டும், இயேசுவின் வாழ்க்கையைக் கொண்டும் எதிர்க்க வேண்டும் என்பதே கற்றுக் கொள்ளும் பாடமாகும்.

சோதனைகளைத் தாண்ட இறைவன் நமக்கு அளித்திருக்கும் தேற்றரவாளன் தான் தூய ஆவியானவர். ஆவியானவரை இதயத்தில் அழைத்தால் அவர் நமக்குள் இருந்து நம்மை ஞானத்தின் வழியில் நடத்துவார்.

சோதனைகள் நாம் தாண்டிச் செல்லவேண்டிய சாத்தானின் தடைக்கல்.

வலிமை கொள்

இயேசுவின் வாழ்க்கை வலிமையாய் இருந்தது. அவர் தனது வாழ்க்கைக்கான வலிமையை ஜெபத்திலிருந்து பெற்றுக் கொண்டார். அதற்காகத் தான் அடிக்கடி தனிமையான இடங்களுக்குச் சென்று செபிப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தார்.

தனது விருப்பத்தை விட தந்தையின் விருப்பத்தையே செயல்படுத்தினார் இயேசு. ஆன்மிகத்தின் ஒருவரி விளக்கம் இது தான். நமது விருப்பங்களையல்ல, இறைவனின் விருப்பங்களை மட்டுமே விரும்புவது. அதற்காகவே அவர் தந்தையோடு எப்போதும் ஜெபத்தில் ஒன்றித்திருந்தார்.

இயேசுவின் வாழ்க்கை நமக்கு ஜெபத்தின் தேவையைப் புரிய வைப்பதாய் இருக்க வேன்டும். ஜெபம் நமது வாழ்வின் மையமாகும் போது, தோல்விகள் நம் வீட்டுக் கொல்லைப் பக்கம் வழியாக வெளியேறிவிடும்.

வலிமை நாம் இறைவனோடு இணைவதில் பெற்றுக் கொள்ளவேண்டிய வரம்.

அன்பாய் இரு

இயேசுவின் வாழ்க்கையை உற்றுப் பார்க்கும் போது அவர் எளிய மக்கள் மீது வைத்திருந்த‌ அன்பும் கரிசனையும் நமக்கு சட்டென விளங்கும்.

கடவுளை நேசி, பிறனை நேசி என கட்டளைகளை அன்பில் அடக்கியவர் இயேசு. போதனைகளில் ஏழைகளை முதன்மைப்படுத்தியவர் இயேசு. அத்துடன் நிற்கவில்லை, எதிரிகளையும் நேசியுங்கள் என அன்பின் அடுத்த பக்கத்தையும் நமக்கு அறிமுகம் செய்து வைக் கிறார்.

அன்பைத் தாண்டிய எந்த வேலையையும் இயேசு செய்யவில்லை. இயேசுவைப் பின்பற்றும் வாழ்க்கை என்பது அன்பில் திளைத்தும், அன்பில் நிலைத்தும் இருக்க வேண்டிய வாழ்க்கையாகும்.

அன்பு நாம் இறைவனின் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துகின்ற நிலை.

- சேவியர், சென்னை

Next Story