ஆண்டவருக்கு ஏற்ற நோன்பு


ஆண்டவருக்கு ஏற்ற நோன்பு
x
தினத்தந்தி 15 Feb 2018 10:30 PM GMT (Updated: 15 Feb 2018 8:40 AM GMT)

இறையரசு பண்பாட்டின் சில உட்கூறுகளான அறச்செயல்கள் புரிதல், தர்மம் செய்தல், இறைவேண்டல் புரிதல், போன்றவற்றைக் கூறுகின்ற இயேசு, நோன்பு இருத்தலைப் பற்றியும், அதன் அவசியத்தைப் பற்றியும், அதை பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைக் குறித்தும் கூறுகிறார்.

நாம் முற்றிலும் இறைவனைச் சார்ந்து வாழ்கிறோம் என்ற நினைவு நம்மை விட்டு அகலாமல் இருப்பதற்கும், மனிதரின் தன்னலங்களாலும், சுரண்டலாலும் பசியாயிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் அனுபவத்தை நாம் பெற்று உணரவும் நோன்பிருத்தல் நல்லது.

நோன்பு

‘நெஸ்டியா’ என்ற கிரேக்க வேர்ச்சொல்லில் இருந்து உருவானதே ‘நோன்பு’ எனும் வார்த்தை. ‘உணவைத் தவிர்த்தல்’ என்பதே இதன் முதன்மைப் பொருள். உணவைக் குறைத்தல், உண்ணா நிலை மற்றும் பிற புலனடக்க கட்டுபாடுகளைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. இது சமயச்சடங்கின் ஒரு பகுதியாகும்.

யூதர்களின் நோன்பு

யூதர்கள் கதிரவன் உதிக்கும் நேரம் முதல் மறையும் நேரம் வரை நோன்பிருந்தனர். இறைவனின் கவனத்தை தம்பக்கம் ஈர்த்திடவும், தங்களின் மனம் வருந்துதலின் அடையாளமாகவும், மக்கள் பார்க்க வேண்டுமெனவும் மூன்று வகை மனநிலையுடன் நோன்பிருந்தனர். நோன்பிருத்தலை பக்தி வைராக்கியத்தின் உயர்நிலை என்றே கருதினர்.

யூதர்கள் மகிழ்ச்சியான காலங்களில் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தை கழுவி புத்துணர்வுடன் காணப்படுவர். நோன்பு காலங்களினை தவிர மற்ற சமயங்களில் வழக்கமான அனைத்து உணவு வகைகளும் உண்ண அனுமதிக்கப்பட்டனர். தம் நெருங்கிய உறவினர்கள் அல்லது உடன்பிறப்புகள் மரித்துப் போன தருணங்கள், நாட்டின் நலனைப் பாதுகாக்க, மாபெரும் இயற்கை பேரழிவிலிருந்து விடுவிக்க வேண்டி, யூதர்கள் தனிநபராகவும், கூட்டாக இணைந்தும் நோன்பை கடைப்பிடித்தனர். இந்த நாட்களில் திராட்சை மதுவையும், இறைச்சியையும் தவிர்த்தனர்.

ஆண்டவர் இயேசுவின் காலத்தில் நோன்பு

ஆண்டவர் இயேசுவின் காலத்திலும் நோன்பு கடைப்பிடிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் இயேசுவின் காலத்தில் யூதர்கள் பாவக்கழுவாய் நிறைவேற்றும் நாளில் மட்டும் கட்டாய நோன்பு கடைப்பிடித்தனர். இந்த நாள் வருடந்தோறும் ‘திஸ்ரி’ எனும் யூதர்களின் பத்தாவது மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது (திப.27:9). நம்முடைய செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களை அது குறிக்கும். இந்த நாளில் காலை முதல் மாலை வரை மக்கள் தங்களை இறைவன் தூய்மையாக்கும்படி அர்ப்பணிக்க வேண்டும்.

நோன்பு நேரங்களில் உண்ணவும், பருகவும், குளிக்கவும், ஒருவரை அருள்பொழிவு செய்யவும், மிதியடி அணியவும், தாம்பத்ய உறவு கொள்ளவும் யூதர்களின் திருச்சட்டம் தடைசெய்கிறது. சிறுவர்களும் ஒரு குறிப்பிட்ட அளவு நோன்பு மேற்கொள்ள ஆயத்தப்படுத்தப்பட்டனர்.

வாரத்தின் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் நோன்பு இருந்தனர் (லூக்கா 18:12). இந்த இரண்டு நாட்கள் யூதர்களின் சந்தை கூடும் நாட்கள். சந்தைகளில் பல பட்டணங்களிலிருந்தும், கிராமங்களிலிருந்தும் அநேக மக்கள் திரளாக கூடுவார்கள். மாபெரும் மக்கள் கூட்டத்தில் தங்கள் பகட்டு நோன்பை பகிரங்கப்படுத்தினார்கள். இவர்கள் தலையில் எண்ணெய் தேய்க்காமல், முகத்தைக் கழுவாமல், முகவாடலாய் தோன்றினார்கள். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொண்டார்கள்.

பெரும்பாலானவர்கள் நோன்பிருத்தலை சுய அர்ப்பணிப்பாக கருதுவதற்கு பதிலாக, சுய கவுரவமாக, சுயநீதியாக கருதிக் கொண்டு பிறர் பார்க்க வேண்டும் என்றே நோன்பிருந்தனர். ஆதலால் ஆண்டவர் இயேசு நோன்பு பற்றி யூதர்கள் கொண்டுள்ள கருத்துக்கள் தவறானவை என எடுத்துக்காட்டுகிறார்.

ஆண்டவருக்கு ஏற்ற நோன்பு

நோன்பு கடைப்பிடிப்பது உடல் நலத்திற்கு சிறந்தது, சுய ஒழுக்கத்திற்கு உதவுகிறது. சில பழக்க வழக்கங்களுக்கு அடிமையாவதிலிருந்து பாதுகாக்கிறது. சில ஆடம்பர பொருட்களை இழந்தாலும் வாழ முடியும் என்ற படிப்பினையைக் கற்றுத் தருகின்றது. இறைவன் முன் மனிதன் ஒன்றுமற்றவன் என்ற நிர்வாண நிலையை உணர்த்துகிறது.

நோன்பு என்பது உணவைத் தவிர்த்தலும், உறவை விலக்கலும், உலகைத் துறத்தலும் மட்டும் ஆகாது. அற்கும் மேலான ஒரு தூய பண்பட்ட வாழ்வுக்கு நம்மை அது வழிநடத்த வேண்டும். அது தான் ஆண்டவருக்கு ஏற்ற நோன்பு ஆகும். ‘பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரை கானும் போது அவர் களுக்கு உடுக்கக் கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு’ (ஏசாயா 58:7) என்கிறார்.

நோன்பு என்பது கடமைக்காகவோ, கட்டுப்பாடுகளை நிறைவேற்றவோ, சமயச் சடங்காச்சாரத்திற்காகவோ செய்யப்படாமல் முழு இருதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும் ஆண்டவரிடம் அன்பு கூர்ந்து செய்யப்படுமாயின் நோன்பின் உண்மையான, உயரிய நோக்கம் நிறைவு பெறும். ஆன்மிகத்தை உயர்த்திப் பிடிக்காமல் மனித நேயத்தின் மாண்பினை தெளிவுற உணர்ந்து கொண்டு, அதை நிறைவேற்றுவதே ஆண்டவருக்கு ஏற்ற நோன்பாகும்.

அருட்பணி. ம. பென்னியமின், பரளியாறு

Next Story