மன்னிப்பின் அவசியம்


மன்னிப்பின் அவசியம்
x
தினத்தந்தி 13 April 2018 6:11 AM GMT (Updated: 13 April 2018 6:11 AM GMT)

“பகைவரிடமும்  அன்பு செலுத்த  வேண்டும்” என்று ஆண்டவர் இயேசு போதித்தார்.

தம்மை சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னித்த இயேசு, “தந்தையே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்கிறார்கள்” என்று எதிரி களுக்காக வேண்டுதல் செய்ததையும் காண்கிறோம். அவர் எப்படி நடந்து கொண்டாரோ, அவ்வாறே தமது சீடர்களும் பிற மனிதர்கள் செய்யும் குற்றங்களை மன்னிக்க வேண்டுமென கற்பித்தார்.

“உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்கு செவிசாய்த்தால் நல்லது, உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் ‘இரண்டு அல்லது மூன்று சாட்சி களுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்’ என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போல இருக்கட்டும்” (மத்தேயு 18:15-17) என்று இயேசு போதித்தார்.

இதைக் கேட்டதும், அவரது சீடரான பேதுருவுக்கு ஒரு சந்தேகம். அவர் இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்து வந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” எனக் கேட்டார். அதற்கு இயேசு, “ஏழு முறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன். உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்” (மத்தேயு 18:21-22,35) என்று பதிலளித்தார். நானூற்று தொன்னூறு முறை, அதாவது எத்தனை முறை பாவம் செய்தாலும் கணக்கு பார்க்காமல் மன்னித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஆண்டவரின் போதனை.

மன்னிப்பின் அவசியத்தை விளக்க இயேசு ஓர் உவமையையும் கூறுகிறார்: “அரசர் ஒருவரிடம் பத்தாயிரம் தாலந்து (ஆறு கோடி தெனாரியம்) கடன்பட்ட பணியாள் ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். அரசரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ‘என்னைப் பொறுத்தருள்க! எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்’ என்றான். அரசரும் பரிவு கொண்டு அவனை விடுவித்து, கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.

ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன் பட்டிருந்த உடன் பணியாளர் ஒரு வரைக் கண்டு, ‘என்னிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தா’ எனக் கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க! நான் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான். அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் அரசரிடம் போய் நடந்த அனைத்தையும் விளக்கிக் கூறினார்கள்.

அப்போது அரசர் அவனை வரவழைத்து, ‘பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன் பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?’ என்று கேட்டார். அவர் சினங்கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.” (மத்தேயு 18:23-34)
இந்த உவமையில் வருகின்ற அரசர்தான் கடவுள். அவருக்கு எதிராக நாம் செய்கின்ற குற்றங்களே, அவரிடம் நாம் பெறுகின்ற கடன். நாம் எத்தனை முறை பாவம் செய்தாலும், நமது குற்றங்களை மன்னிக்க அவர் தயாராக இருக்கிறார். நமது குற்றங்களுக்காக மனம் வருந்தி அவரிடம் சரணடைந்தால், கடவுள் நம்மை உறுதியாக மன்னிப்பார். அதே நேரத்தில், பிறர் குற்றங்களை மன்னிக்க நமக்கு மனம் வரவில்லை என்றால், நமது குற்றங்களுக்கான தண்டனையை கடவுள் வழங்குவது உறுதி என்பதே இயேசு தருகின்ற போதனை.

ஆண்டவர் இயேசு தம் சீடர்களுக்கு கற்பித்த செபத்தில், “விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும்” (மத்தேயு 6:12) என்று வேண்டுமாறு அறிவுறுத்துகிறார். நாம் பிறரது பாவங்களை மன்னித்தால், நமது பாவங்களை மன்னிக்குமாறு கடவுளிடம் உரிமையோடு கேட்க முடியும் என்பதே இயேசு நமக்கு கற்றுத் தருகின்ற பாடம்.
“மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர் களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்” (மத்தேயு 6:14-15) என்ற எச்சரிக்கையையும் இயேசு கிறிஸ்து வழங்குகிறார். நம் பாவங்களை கடவுள் மன்னிக்க வேண்டுமானால், பிறர் குற்றங்களை நாம் மன்னிப்பது அவசியம். நம் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்தால், நமக்கு விண்ணக வாழ்வு உறுதியாகும்.

-டே. ஆக்னல் ஜோஸ்

Next Story