தீய எண்ணங்களை அகற்றும் தில்லைக் காளி


தீய எண்ணங்களை அகற்றும் தில்லைக் காளி
x
தினத்தந்தி 9 May 2018 8:10 AM GMT (Updated: 9 May 2018 8:10 AM GMT)

அகிலத்தை ஆட்சி செய்பவள் அம்பிகை. இவள் அருட்சக்தியாக விளங்கும்போது பார்வதியாகவும், புருஷசக்தியாக விளங்கும் போது திருமாலாகவும் அருளுகிறாள்.

கோபசக்தியாக விளங்கும்போது காளியாகவும், போர்சக்தியாக விளங்கும்போது துர்கையாகவும் திருக் கோலங் கொண்டு அருளுகிறாள். இதில் காளி வடிவம் கொடியோரை வேரறுத்து நல்லோரை காப்பதற்கான வடிவமாகும். உக்கிர சிவனான காளனின் கனல் கண்களிலிருந்து தோன்றியவள் என்பதால் இந்த அன்னைக்கு ‘காளி’ என்ற பெயர் ஏற்பட்டது.

காளி வழிபாடு ஹர்ஷவர்த்தனர் காலத்தில் தோன்றியது என்பது வரலாறு கூறும் செய்தி. இவள் வெற்றியைத் தரும் வேதநாயகி என்பதால், பண்டைய அரசர்கள் பலரும் போருக்குச் செல்வதற்கு முன்னரும், வெற்றிவாகை சூடிவந்த பின்னரும், அரசு சார்பாக மேற்கொள்ளப்படும் முக்கிய செயல்பாடுகளின் போதும் முதலில் காளியை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

காளியின் பிறப்புப் பற்றி இருவிதமான வரலாறுகள் கூறப்படுகின்றன.

தனக்கு மரணம் சம்பவித்தால் அது ஒரு கன்னிப் பெண்ணால் நிகழவேண்டும் என்று பிரம்மாவிடம் வேண்டி வரம்பெற்றிருந்தான் தாருகாசுரன். அந்த அசுரனை அழிப்பதற்காக சிவனின் கனல் கண்ணிலிருந்து அவள் படைக்கப்பட்டாள் என்றும், அசுரனை அழித்த பிறகு பிரம்மாவின் ஏற்பாட்டின்படி அவள் சிவனின் கரம் பற்றியதாக ஒரு வரலாறு.

மற்றொரு வரலாற்றின்படி, ஒரு முறை சிவன்- சக்தி இருவருக்கும் தங்களில் யார் சக்தி மிக்கவர் என்பதாக மோதல் ஏற்பட்டது. அதில் சிவனின் கோபத்திற்குள்ளான பார்வதிதேவி, காளியாக சாபம் பெற்றாள் என்றும், தவறை உணர்ந்து பிரயாச்சித்தம் வேண்டியபோது ‘உலக நன்மை பொருட்டு உன்னை காளியாக ஆக்கினோம். வரும் யுகத்தில் அரக்கர் குலத்தால் தேவர்கள், முனிவர்கள் மற்றும் லட்சோபலட்சம் உயிர்களுக்கு அழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதை உன் கோப சக்தியால் தடுத்து அரக்கர் குலத்தை அழித்து தேவர்களை காத்துவா’ என சிவனால் ஆசீர்வதித்து அனுப்பப்பட்டவள் காளி தேவி என்கிறது அந்த வரலாறு.

வரலாறுகள் வெவ்வேறானாலும் பார்வதிதேவியே, காளி என்பது பாமரர் வரை அறிந்த உண்மை. இறைவனின் அருளாணையின்படி ஆதிகாளி, தட்சிணகாளி, க்ரீம்காளி, ஸ்ததிகாளி, பத்ரகாளி, மதுகைபட சம்ஹார காளி, குஹ்யகாளி, வரகாளி, சதுர்புஜகாளி, நடனகாளி என பத்து விதமான உருமாறி அதேசமயம் கோரத்தன்மை மாறாமல் மகிஷாசுரன், பண்டகாசுரன், தாரஹாசுரன், மதுகைபடர், சும்பநிசும்பர் போன்ற பல அசுரர்களை சம்ஹாரம் செய்து, தேவர்கள், முனிவர்கள் மற்றும் ஏனைய ஜீவராசி களுக்கு அபயம் அளித்தாள். அதன்பின்னரும் அவள் கோபம் தணியவில்லை. இதனால் உலகுக்கு ஆபத்து நேர்ந்து விடலாம் என்பதால், சிவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடி காளியின் கோபத்தை அடக்கி தில்லையில் அமரச் செய்தார்.

சாந்தம் அடைந்த காளி, தில்லைவனத்தை அடைந்து ஈசனிடம் ஐக்கியமடைய வேண்டிய தருணத்தை எதிர்பார்த்து சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ள மூலநாதரை பூசித்து தவம் மேற்கொண்டாள். காளியின் அம்சம் முடிவுறும் வேளை நெருங்கி சாபவிமோசனம் பெறும் நிலையில் இருந்தமையால் ‘காளி உரு இனி இல்லை, காளி உருவுக்கு இதுவே எல்லை’ என்றாகி ‘எல்லைக்காளி’ என அழைக்கப்பட்டாள். எல்லைக்காளியாக அவள் தில்லையில் எழுந்தருளியமையால் தில்லைக்காளி என்றும் பெயர் பெற்றாள்.

தில்லைக்காளியின் திருக்கோவில் மிகவும் பழமையானது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரை மற்றும் சிவஞானபுரம், மதுரை மாவட்டம் மடப்புரம் மற்றும் முடுக்குசாலை, பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர், தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவில் மற்றும் வடமட்டம், திருச்சி மாவட்டம் உறையூர், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி மற்றும் கண்டிபட்டி, விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் பச்ச மடம், திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர், விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம். ஏனாதிமங்கலம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள காளி கோவில்களுக்கு இல்லாத சில சிறப்பு களை இக்கோவில் கொண்டுள்ளது.

இந்த ஆலயத்தில் உள்ள காளிசிலை விசுவாமித்திர மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தனது யாகத்திற்கு தடையாய் இருந்த தாடகை என்னும் அரக்கியை கொன்ற காரணத்தினால் ராமர், லட்சுமணர்களுக்கு ஏற்பட்டது. அவர்களின் தோஷத்தை போக்க யாகம் செய்ய விரும்பிய விசுவாமித்திரர், தில்லைவனக்காடாக இருந்த இப்பகுதிக்கு ராமர், லட்சுமணர்களுடன் வந்தார். பின்னர் இங்கு காளிதேவியை பிரதிஷ்டை செய்து யாகத்தை நடத்தியதாக வரலாறு சொல்கிறது.

இரணியனை வதம் செய்த நரசிம்மமூர்த்திக்கு, அதன் பின்னரும் கோபம் குறையவில்லை. அவர் இந்த உலகத்தையே விழுங்க நினைத்தார். இதைக் கண்ட சிவபெருமான் சரபமூர்த்தியாக வடிவம் கொண்டு திருமாலை கட்டுப்படுத்த முயன்றார். அதுசமயம் அவர் தனக்கு கூடுதல் சக்தி வேண்டி வடக்கில் அமர்ந்திருந்த காளியை துணைக்கு அழைத்து, நரசிம்மரை அடக்கியருளினார். இதனால் தில்லைக்காளிக்கு ‘உத்தர பிரத்யங்காரகாளி’ (வடபத்ரகாளி) என்ற பெயரும் ஏற்பட்டது.ஆலய அமைப்பு

மேற்கு நோக்கிய திருக்கோவிலுக்கு கம்பீரமான ராஜகோபுரம் அழகு சேர்க்கிறது. கோபுரத்திற்கு முன்னால் சிவப்பிரியை தீர்த்தம் உள்ளது. இது இவ்வாலயத்திற்கான தீர்த்தமாகவும், நடராஜபெருமானின் பத்து தீர்த்தங்களில் ஒன்றாகவும் திகழ்கின்றது. கோபுரத்திற்கு உள்ளே மகாமண்டபமும், அதன் தென் புறத்தில் பிரசன்ன விநாயகர், வடபுறத்தில் வள்ளி-தெய்வானை சமேத கார்த்திகேயன் சன்னிதிகள் இருக்கின்றன.

மகாமண்டபத்தைத் தாண்டி பிரகார வாசலில் துர்கா, ஜெயதுர்கா என்னும் துவார சக்திகள் உள்ளனர். அவர்களைக் கடந்து உள்ளேச் செல்ல பிரம்மசாமுண்டீஸ்வரி எனப்படும் தில்லையம்மன் நான்கு முகங்களும் நான்கு திருக்கரங்களும் கொண்டு சாந்தசொரூபியாகக் காட்சியளிக்கின்றாள். வலது மேல்கரத்தில் ருத்ராட்ச மாலையும், கீழ்கரத்தில் கமலகிண்ணியும், இடது மேல்கரத்தில் சூலமும், கீழ் கரத்தில் அமலோற்பவமும் தாங்கி அமர்ந்தகோலத்தில் அருள்பாலிக்கிறாள். இந்த அன்னை ‘நான்முகி’ என்றும் குறிப்பிடப்படுகிறாள்.

அர்த்தமண்டபத்தில் தாரகாசுரனை வதம் செய்து, சினம் தணிந்து, ஈசனை நாடும் நிஷ்டை கோலத்தில் தில்லைக்காளி அருள்பாலிக்கிறாள். இவளது திருவுருவம் வெள்ளை வஸ்திரம் சூடப்பெற்று குங்குமகாப்பு செய்து கண்களை மட்டுமே காணும் வண்ணம் உக்கிரகோலத்தில் அலங்கரிக்கப்படுகிறது. கருணையே வடிவாக கண்களால் நம்மை அரவணைக்கும் அன்னையை கரங்குவித்து கண்மூடி வணங்குவோருக்கு அவள் அருள்பாலிக்கிறாள்.

தில்லைகாளியின் சன்னிதிக்கு அருகில், அவளது உற்சவமூர்த்தி சன்னிதி மற்றும் அகோரவீரபத்திரர் சன்னிதி காணப்படுகின்றன. வடக்கு பிரகாரத்தில் துர்க்கை, சண்டிகேஸ்வரர், பைரவர் அருள்கின்றனர். கருவறைச்சுற்றில் நான்கு முகத்துடன் கையில் ஓலைச்சுவடி மற்றும் எழுத்தாணி கொண்டு வடக்கு நோக்கி பிரம்மசொரூபிணியாகவும், ஒரே முகத்துடன் கரத்தில் சங்கு-சக்கரம் தாங்கி கிழக்கு நோக்கி நாகவைஷ்ணவ ரூபிணியாகவும், மான்-மழுவேந்தி தெற்கு நோக்கி தட்சணசொரூபிணியாகவும் அருள்பாலிக்கிறாள். இந்த மூன்று திருமேனிகளும் படைத்தல், காத்தல், அழித்தல் அனைத்தும் நானே என்பதை உணர்த்துகின்றன.

தெற்கு பிரகாரத்தில் விநாயகப்பெருமான் ஏழு திருக்கரங்களுடன் கூத்தாடும் கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு அருகாமையில் கலைமகளை நினைவூட்டும் விதமாக நின்ற நிலையில் வீணைவாசிக்கும் அபிநயத்துடன் சர்வவித்யாம்பிகை அருள்பாலிக்கிறாள்.

சிதம்பரம் நடராஜர் திருக்கோவில் சிவன், ஆனந்த தாண்டவம் மற்றும் நிருத்தத் தாண்டவம் ஆடிய திருத்தலம் என்பது மட்டுமே பலருக்கும் தெரியும். ஆனால் அவருக்கு இணையாக சக்தியும் நடனமாடிய இடம் என்பதை இவ்வாலயத்தை தரிசிப்பவர்களால் மட்டுமே அறியமுடியும். காளிதேவி சாபவிமோசனம் பெற்ற இத்தலத்தில் சாப விமோசனம் வேண்டுவோரும், எதிரிகளால் சிரமத்திற்கு ஆளானவர்களும், வெற்றி அல்லது எடுத்தகாரியம் சிறக்க விரும்புவோரும், கல்வி- செல்வம் -வீரம் உட்பட பதினாறு பேறுகளை வேண்டுவோரும் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

ஆலயத்தில் வைகாசி மாதம் பத்துநாட்கள் பிரம்மோற்சவம், ஆடியில் கொள்ளிடம் ஆற்றிலும், மாசியில் கடலிலும் தீர்த்தவாரி, புரட்டாசி-ஐப்பசியில் வரும் நவராத்திரி ஆகியவை முக்கிய திருவிழாக்களாகும்.

ஒவ்வொரு ஆண்டும் மாசி பவுர்ணமி திதியின் போது காலை 6 மணிக்கு சந்திரனும், பவுர்ணமியின் இரண்டு நாட்களுக்குப்பிறகு திருதியை திதியில் மாலை 6 மணி முதல் 6.15 மணிக்குள் சூரியனும் தன் பொன்னொளியை பரப்பி அம்பிகையை தரிசிக்கும் அரிய காட்சி காணக் கிடைக்காத ஒன்றாகும்.

கோவில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயத்தின் வடக்கு வாசலில் இருந்து அரை கிலோமீட்டர் வடக்காக இவ்வாலயம் அமைந்துள்ளது.

- நெய்வாசல் நெடுஞ்செழியன் 

Next Story