தாழ்மைக்கு கர்த்தரின் கிருபை


தாழ்மைக்கு கர்த்தரின் கிருபை
x
தினத்தந்தி 11 May 2018 12:45 AM GMT (Updated: 10 May 2018 10:52 AM GMT)

தேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம் பண்ணுவாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்? (2 நாளா.6:18)

இயேசு கிறிஸ்துவில் பிரியமானவர்களே, எருசலேமிலே சாலமன் ராஜா தனது தந்தை தாவீது காண்பிக்கப்பட்ட மோரியா மலையில் ஆலயத்தை கட்ட ஆரம்பித்து, ஏழு வருடத்தில் கட்டி முடித்தான்.

பின்னர் ‘வானாதி வானங்களுக்கும் மேலான இறைவன் மனுஷரோடே பூமியிலே வாசம் பண்ணுவாரோ. ஒவ்வொரு மனிதனின் இருதயத்தில் தங்கி தாபரித்து மனிதரோடு வசிப்பாரோ. இந்த ஆலயத்தில் செய்யும் விண்ணப்ப ஜெபத்தை கேட்க உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்து இருப்பதாக நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்’ என்று தன்னை தாழ்த்தி ஜெபம் செய்யத் தொடங்கினான்.

சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இரவிலே சாலமனுக்குத் தரிசனமாகி, ‘நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களை தாழ்த்தி, முழு இருதயத்தோடு என் முகத்தைத் தேட தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினால், பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு அவர்கள் பாவத்தை மன்னித்து அவனவனுடைய கிரியைகளின்படி தக்கதாய் பலன் அளித்து ஆசீர்வதிப்பேன்’ என்றார்.

சாலமனின் தாழ்மையினால் தேவன் அவனோடு பேசினார்.

‘மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள், பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்’. (1 பேதுரு 5:5)

ஒருவனுடைய வாழ்வில் பெருமையும், தாழ்மையும் உண்டு. எல்லா தீமைக்கும் வித்தாகிய பெருமை மனுஷனுடைய இருதயத்தில் ஆழமாக பதிந்துள்ளது. நமது உள்ளத்தில் வீணான பல மேன்மை பாராட்டுதலால் பெருமை வருகிறது. பெருமையோ ஒருவனுடைய வாழ்க்கையை அழித்துவிடுகிறது.

தாழ்மை என்பது தேவன் நமக்கு அளிக்கும் சக்தி வாய்ந்த ஓர் ஆயுதமாகும். வேலை செய்யும் இடத்தில் தாழ்மை, பிரயாணத்தில் தாழ்மை, எல்லா காரியத்திலும் தாழ்மை என்று செயல்பட்டால் ஒருபோதும் இடறல் வருவது இல்லை.

தாழ்ந்த இடத்தில் தண்ணீர் நிற்கும். உயர்ந்த இடத்தில் தண்ணீர் நிற்காது. மெய்யான, பரிசுத்தமான மனத்தாழ்மையாக வாழ்கிறவர்கள் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் பூரண சமாதானத்தின் விளக்கு பிரகாசித்துக் கொண்டு இருக்கும்.

ராஜாவாகிய சவுல் தேவ வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் தன்னைத்தானே உயர்த்தியபோது, அவனை தேவன் புறக்கணித்து தள்ளினார். ஒரு பொல்லாத ஆவி அவனைப் பிடித்துக் கொண்டது.

ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருந்த தாவீது, தன்னைத் தானே தாழ்த்தினபோது பலம் பெற்று இஸ்ரவேலின் ராஜாவாக மாறினார். நாற்பது வருஷம் அரசாண்டார்.

தாழ்மையுள்ளவர்களுக்கு மிகுதியான பிரதிபலன்களைப் பரலோகத்தில் சேர்த்து வைக்கிறார். அவர்கள் ஆத்துமா நித்திய இளைப்பாறுதலை காண்பார்கள்.

‘அவர் மனுஷ ரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி...’ (பிலி.2:8,9)

சர்வ அதிகாரமும் நிறைந்த தேவனாகிய இயேசு குறித்து தேவதூதன் மரியாளிடத்தில் பேசிய போது, ‘பரிசுத்த ஆவி உன்மேல் வரும். உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும். ஆதலால் உன்னிடத்தில் பிறக்கிறவர் பரிசுத்தர்’ என்றான்.

இயேசு மிகுந்த ஆடம்பர அரண்மனையில் பிறக்கவில்லை. அவர் மிகுந்த தாழ்மையில், அசுத்தமும் துர்நாற்றமுள்ள ஒரு மாட்டு தொழுவத்திலே பிறந்தார். நம்மை பாவத்திலிருந்து மீட்கும் படியாக பரலோகத்தின் சகல மகிமையையும் விட்டு ஒரு மனிதனாகும்படி இறங்கி வந்தார். அவரது இந்த உலக வாழ்க்கையின் தொடக்கம் எவ்வளவு தாழ்மையாக இருந்தது என்பதை இதன் மூலம் நாம் அறியலாம்.

முப்பதாவது வயதில் யோர்தான் நதிக்குச் சென்று யோவான் ஸ்நானனிடம் ஞானஸ்நானம் பெற்று, எல்லோருக்கும் நன்மை செய்கிறவராய் சுற்றித் திரிந்தார். வியாதி உள்ளவர்களை குணமாக்கினார். பிசாசுகளை துரத்தி, அனேக அற்புதங்களை செய்து மரித்தோரை உயிரோடு எழுப்பினார்.
கல்வாரி சிலுவைக்கு முன் சீடர்களின் கால்களை கழுவினார்.

கெத்சமனே தோட்டத்தில் பிதாவை நோக்கி ஜெபம் செய்தபோது, இயேசுவை பிடித்துச் சென்றனர். இரவில் ஐந்து பிரதான ஆசரியர்களால் விசாரிக்கப்பட்டு கன்னத்தில் அறைந்து, கோலால் அடித்து பரியாசம் செய்து, தலையில் முள்முடி சூட்டி சிலுவை சுமந்து சென்றபோது வாரினால் அடித்தார்கள்.

அடிக்கிறவர்களுக்கு தன் முதுகையும், தாடை மயிரை பிடுங்குகிறவர்களுக்கு தன் தாடையையும் ஒப்புக்கொடுத்தார். மூன்று ஆணிகளால் சிலுவையில் அறைந்து சரீரம் தொங்கினபோதும், ‘பிதாவே இவர்களை மன்னியும்’ என்றார்.

அவரின் தாழ்மையை யாரால் வர்ணிக்க முடியும். பிதாவாகிய தேவன் எல்லா நாமத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் இயேசுவை உயர்த்தினார்.

- ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம் சி.பூமணி, சென்னை-50.

Next Story