வளையலுக்கு ஆசைப்பட்ட அம்மன்


வளையலுக்கு ஆசைப்பட்ட அம்மன்
x
தினத்தந்தி 23 May 2018 5:30 AM GMT (Updated: 23 May 2018 5:30 AM GMT)

கும்பகோணம்-திருவாரூர் வழிப்பாதையில் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருநறையூர். இத்தலத்தில் திருச்சி சமயபுரம் மாரியம்மன், தனது திருவுருவ வடிவில் இல்லாமல் அரூபமாக ஒளிவடிவில் அருள்பாலிக்கிறாள்.

சமயபுரத்தாளை ‘ஆகாச மாரியம்மன்’ என்று இங்கு  அழைக்கிறார்கள். சமயபுரத்தாள் எப்படி ஆகாச மாரியம்மனாக, திருநறையூர் வந்தாள் என்பதைக் கூறும் கதை ஒன்று உள்ளது. அது சுமார் 650 ஆண்டு களுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படுகிறது.

கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார்கோவில் எனும் திருநறையூர் பகுதியில் உள்ள வளையல் விற்கும் ஒரு வாணிபக் குழுவினர் இருந்தனர். அவர்கள் ஒரு நாள் இரவு, திருச்சி சமயபுரத்தில் தங்கள் வளையல் வியாபாரத்தை முடித்து, சமயபுரம் மாரியம்மனை தரிசித்து விட்டு, பிறகு அங்கேயே தங்கி இருந்தனர். அன்று இரவில் அந்த வளையல் விற்கும் குழுவில் இருந்த பெரியவர் ஒருவரின் கனவில் கன்னிப்பெண் வடிவில் வந்தாள் சமயபுரம் மாரியம்மன்.

தூக்கத்தில் இருந்த பெரியவரை தட்டி எழுப்பிய அந்தப்பெண் தமக்கு வளையல் போட்டுவிடும்படி கூறி, தமது திருக்கரங்களை பெரியவர் முன்பு நீட்டினாள். அப்பெண்ணின் தெய்வீக முக ஒளியின் தாக்கத்தால் கவரப்பட்ட அந்த பெரியவரும், உடனே தமது வளையல் பொதியை பிரித்து விரித்து, ஒவ்வொரு வளையலாக அப்பெண்ணின் கைகளில் மாட்டி விட்டார். ஆனால் அந்த வளையல்களில் ஒன்றுகூட பொருந்தாமல் அனைத்தும் உடைந்து போயின. உடனே அந்தப் பெண் மறைந்து போனாள்.

இதையடுத்து கனவு கலைந்து எழுந்த பெரியவர், கனவில் கண்டது போலவே பொதி மூட்டை பிரிக்கப்பட்டு, வளையல்கள் அனைத்தும் உடைந்து கிடப்பதைக் கண்டு ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தார். அதோடு அவரோடு வந்திருந்த அத்தனை பேருக்கும் உடம்பில் அம்மை முத்துக்கள் வந்திருந்தன. திகைப்புற்று நின்ற பெரியவரின் கண்களில் நேற்று இரவில் கனவில் வந்து தம்மிடம் வளையல் மாட்டிவிடச் சொன்ன அந்தப் பெண்ணின் முகம் வந்துபோனது.

‘வந்தது யார்?’ என்று பெரியவர் குழம்பி இருந்த அதே வேளையில், அவர் முன்பாக சமயபுரம் மாரியம்மன் கோவில் பூசாரி, கையில் பெரிய தாம்பாளத்துடன் நின்றிருந்தார். அவர் பெரியவரைப் பார்த்து, ‘அய்யா! இன்று அதிகாலை என் கனவில் வந்த சமயபுரத்தாள், உங்கள் இருப்பிடத்தையும், அடையாளங்களையும் சொல்லி, தம்முடைய தங்க நகைகள் சிலவற்றைக் குறிப்பிட்டு அதனை உங்களிடம் கொடுக்கச் சொன்னாள். அன்னை உங்களின் வளையல்கள் அனைத்தையும் உடைந்து போகத் செய்ததாகவும் கூறினாள். தாம் வந்து போனதற்கு அடையாளமாக உங்கள் குழுவினருக்கு அம்மை முத்துக்கள் பதித்ததாகவும் தெரிவித்தாள். தவிர அவர்களின் அம்மை நோய் நீங்க தமது விபூதியையும், உடைந்து போன வளையல்களுக்கு ஈடாக அன்னையின் தங்க நகைகளையும் உங்களிடம் ஒப்படைத்து வர என்னை இங்கு அனுப்பி வைத்துள்ளாள்’ என்றார்.

தொடர்ந்து கோவில் அர்ச்சகர், அங்கிருந்த அனை வருக்கும் சமயபுரத்தாளின் விபூதியைக் கொடுக்க அனைவரின் அம்மை நோயும் அகன்றது. அனைவரும் சமயபுரத்தாளின் ஆலயம் நோக்கி வான் பார்த்து தொழுதனர். அப்போது வானில் சமயபுரம் மாரியம்மன் தோன்றி, ‘உங்கள் பக்தியால் உங்களுடன் சிறிது விளையாடி உங்களை ஆட்கொள்ளவே யாம் வந்தோம்' என்று கூற, உடனே அங்கிருந்த வளையல் விற்கும் குழுவினர் அனைவரும், ‘மகமாயி! எங்களுக்கு இங்கு கிடைத்த இந்த பெரும்பேறு, எங்கள் சந்ததிகளுக்கும், உலகத்தவருக்கும் வரும் காலத்தில் கிடைக்க வேண்டும். அதுமட்டுமல்ல எங்கள் ஊரான திருநறையூர் நாச்சியார்கோவிலிலும் தாங்கள் எழுந்தருளி, எங்களை எப்போதும் காத்துநிற்க வேண்டும்' என்று இறைஞ்சினர்.

அவர்களின் அன்புக்கு கட்டுப்பட்ட அன்னை சமய புரத்தாள், ‘ஆண்டு தோறும் வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து 13 நாட்கள், சமயபுரத்தில் இருந்து ஆகாய வழியாக யாம் எழுந்தருளி, உங்களது ஊருக்கு வடக் கிலுள்ள அரசலாற்றில் எலுமிச்சைப் பழமாக வந்து இருப்பேன். அப்பழத்தினைக் குடத்தில் இட்டுத் தண்ணீருடன் எடுத்துச்சென்று பத்து நாட்கள் விழா நடத்துங்கள். அந்த நாட்களில் உங்கள் ஊரான திருநறையூர் நாச்சியார்கோவிலில் யாம் இருப்போம். 14-ம் நாள் அங்கிருந்து மீண்டும் சமயபுரம் வந்திருந்து அருள்வேன்' என்று அருளினாள்.

அன்று முதல் இன்று வரை சமயபுரம் மாரியம்மன் ஆண்டு தோறும் வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து 13 நாட்கள் சமயபுரத்தில் இருந்து ஆகாய வழியாக நாச்சியார்கோயில் எழுந்தருளுதலும், பின்பு 14-ம் நாள் நாச்சியார்கோயிலில் பக்தர்கள் அன்னையை வழியனுப்பி வைக்க மீண்டும் சமயபுரத்தில் வந்தமர்ந்து அருளுவதாக ஐதீகம். சமயபுரத்தில் இருந்து அம்மன் ஆகாய மார்க்கமாக நாச்சியார்கோயிலுக்கு எழுந்தருளியதால் நாச்சியார்கோயிலில் சமயபுரத்தாளை ‘ஆகாச மாரியம்மன்’ என்று அழைக்கிறார்கள்.

வைகாசி மாதம் திருவிழா சமயம் தவிர, மற்ற நாட்களில் இங்கு கருவறையில் அணையா ஜோதி வடிவிலேயே சமயபுரத்தாள் காட்சி கொடுத்து அருள்கிறாள். வைகாசி அமாவாசைக்கு அடுத்துவரும் வெள்ளிக் கிழமை அன்று தொடங்கி, தொடர்ந்து பதினான்கு நாட்கள் நடைபெறும் விழாவுக்காக சமயபுரம் மாரியம்மன் திருவுருவம் செய்து வழிபடுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை சமயபுரத்தில் இருந்து அம்மன் வருகையை ஒட்டி உற்சவம் ஆரம்பிக்கிறது. சமயபுரத்தில் இருந்து அம்மன் இங்கு வந்து தங்கும் நாட்களில் அம்மனுக்கு வளையல் காணிக்கையே பக்தர்கள் செய்கிறார்கள்.

இங்கு வைகாசி பெருவிழா நாட்களில் அன்னைக்கு கண்ணாடி வளையல் சாத்தி வழிபட்டால் திருமணம், குழந்தைபாக்கியம், வேலைவாய்ப்பு, பதவி உயர்வு கிட்டும் என்பது நம்பிக்கை. உடல்நோய், மன நோய், பில்லி, சூன்யம் அகல்வதாக ஐதீகம். அம்பாளுக்கு வளையல் காணிக்கை செலுத்தி எந்த வேண்டு தலை வைத்தாலும், அது உடனடியாக நிறைவேறுகிறதாம்.

வைகாசி அமாவாசைக்கு அடுத்துவரும் வெள்ளிக்கிழமை, அரசலாற்றில் எலுமிச்சைப் பழ வடிவில் சமய புரம் மாரியம்மன் எழுந்தருளும் போது, ஒரு மந்திர ஒலி சத்தம் முதலில் தோன்றுமாம். பின்னர் அந்த ஒலி எழுந்த குறிப்பிட்ட இடத்தில் ஒரு எலுமிச்சைப் பழம் மிதந்துவருமாம். அந்த எலுமிச்சையில் உறைந்துதான் ஆகாய மார்க்கமாக சமயபுரம் மாரியம்மன் இங்கு எழுந்தருள்கிறாள். அதுசமயம் ஆலயத்தில் தர்ப்பையால் உருவாக்கப்பட்ட சமயபுரம் மாரியம்மனை வழிபடுகிறார்கள். விழாவின் கடைசி நாள் அன்று அம்மனுக்கு விடையாற்றிக் கொடுத்து, மீண்டும் சமயபுரம் மாரியம்மனை சமயபுரத்துக்கு வழி அனுப்புவதோடு அந்த ஆண்டுக்கான விழா நிறைவடைகின்றது.

இந்த ஆண்டுக்கான விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 27-5-18 (ஞாயிற்றுக்கிழமை) பெருவிழா நடைபெறுகிறது. அன்று பக்தர்கள் மாவிளக்கு பிரார்த்தனை, காவடி நேர்ச்சைக்கடன் செலுத்தி வழிபடுவர். 30 மற்றும் 31-ந் தேதிகளில் அம்மன் தேர் திருவிழாவில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கி விட்டு, மீண்டும் சமயபுரத்துக்கு எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும்.

- சிவ.அ.விஜய் பெரியசுவாமி

Next Story