பொறாமை


பொறாமை
x
தினத்தந்தி 14 Sep 2018 1:00 AM GMT (Updated: 13 Sep 2018 10:16 AM GMT)

பொதுவாக யார் பொய் சொல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாரோ, அதன் காரணமாக, அவரிடம் மற்ற கெட்ட குணங்களும் இருக்கும்.

 பொய்யினைப் போலவே பொறாமையும் மற்ற தீய குணங்களுடன் சேர்ந்தே ஒருவரிடம் குடி கொண்டுள்ளது.

செல்வம், அழகு, கல்வி, புகழ், அறிவு போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றோ, அல்லது  பலவோ ஒருவருக்கு அதிகமாகக் கொடுக்கப்படுவது இறைவனின் அருளாகும். இது அவரின் மீது மற்றவர்கள் பொறாமை கொள்ளக் காரணமாக அமைகிறது.

பொறாமைப்படுபவர்கள் தாம் பொறாமை கொள்ளும் மனிதர்கள் மீது பொறாமையின் காரணமாக முதலில் வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார்கள். வெறுப்பின் காரணமாக அவர்களின் மீது காரணமின்றி கோபம் கொள்கிறார்கள். இன்னும், தாங்கள் பொறாமை கொள்ளும் மனிதர்களைப் பற்றி வதந்தி மற்றும் அவதூறுகளைப் பரப்பி அவர்களின் நற்பெயரைக் கெடுப்பதற்கு தம்மால் ஆன எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வர்.

இன்னும் யார் மீது பொறாமை ஏற்படுகிறதோ அவர் மீதே முழு கவனமும் செலுத்துவர். அவர் குறித்த ஒவ்வொரு விஷயத்தையும் உற்று நோக்குவர். தங்களுக்கு நல்லது நடந்தால் அடையும் சந்தோஷத்தை விட  அவர்களுக்கு துன்பம் நேரும்பொழுது மகிழ்ச்சி கொள்வர்.

பொதுவாக நமக்குத் தெரிந்தவர்கள், இன்னும் கூடவே இருப்பவர்கள்தாம் பொறாமை கொள்பவர்களாக இருக்கிறார்கள். பள்ளிகளில், கல்லூரிகளில் மற்றும் வேலை செய்யும் இடங்களில் கூட பொறாமை கொள்பவர்கள் இருக்கிறார்கள்.

நபி யாகூப் (அலை) தன் மகன்களில், நபி யூசுப் (அலை) அவர்களை அதிகம் நேசிப்பதாகக் கருதிய மற்ற சகோதரர்கள், பொறாமையின் காரணமாக, யூசுப் (அலை) அவர்களை பாழும் கிணற்றில் தள்ளி விட்டதை திருமறையின் அத்தியாயம் யூசுப் நமக்கு விளக்குகிறது.

நண்பர்களுக்குள் இந்த பொறாமை ஏற்பட்டாலும், பெரும் தீங்கை விளைவிக்கிறது. நட்பில் விரிசலை உண்டாக்குகிறது. நண்பர்கள் போல் இருந்து கொண்டே பொறாமை கொள்ளும் மனிதர்கள், நட்பு கொண்ட மனிதர்களிடம் உறவாடி அவர்களின் குடியைக் கெடுக்கிறார்கள்.

இந்த மாதிரியான ‘முகமூடி’ நண்பர்களிடம் பழகுபவர்கள் அவர்களைப் பற்றி அறிந்து கொண்டு அவர்களை, தங்களிடம் இருந்து விலக்கிக் கொள்வதே அவர்களுக்கு நன்மை பயக்கும். கடுமையான எதிரியை நம்பலாம். இப்படிப்பட்டவர்களை எந்த காலத்திலும் நம்புதல் கூடாது.

பொறாமையினால் விளையும் கேடுகள் மற்றும் பொறாமை குணம் கொள்ளாதிருத்தலால் விளையும் நன்மைகள் குறித்தும் திருவள்ளுவர் ‘அழுக்காறாமை’ என்ற அதிகாரத்தில் விளக்கியுள்ளார்.

கூடவே இருந்தோ அல்லது விலகி இருந்தோ பொறாமை கொள்பவர்களின் தீய எண்ணங்கள் அவர்கள் பொறாமை கொள்ளும் மனிதர்களைப் பாதிக்கும். பொறாமை மாதிரியான கெட்ட எண்ணங்களை சைத்தானே மனதில் போட்டு மனிதர்களைத் தவறு செய்யத் தூண்டுகிறான்.

எனவே நாம் இறைவனிடம் பொறாமைத் தீங்கிலிருந்து அடிக்கடி பாதுகாப்புத் தேடிக் கொள்பவர்களாக இருக்க வேண்டும். இத்தகைய மக்களின் தீங்கில் இருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ் தன் வசனங்களை அருளியுள்ளான்.

‘’பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கை விட்டும் பாதுகாக்கக் கோருகின்றேன்’’ (திருக்குர்ஆன் 113:5)

எல்லாவிதமான தீங்குகளிலிருந்தும் பாதுகாப்புப் பெறுவதற்கு இறைமறையின் கடைசி மூன்று அத்தியாயங்களை அடிக்கடி ஓதி வருதல் நலம்.

விறகினை நெருப்பு எரித்து சாம்பலாக்குவதைப் போல் மற்றவர்கள் மீது பொறாமை கொள்பவர்களின் நல்ல அமல்களை அவர்களின் பொறாமைக் குணம் அழித்து விடும் என்பது நபி (ஸல்) அவர்களின் வாக்காகும்.

பொறாமை தீய குணம் என்றாலும், இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்வது கூடாது.

1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனின் அறிவை வழங்கியுள்ளான். அவர் அதை காலையும், மாலையும் ஓதி வருகிறார். (இதைக் காணும்) மற்றொருவர் இவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது போன்று எனக்கும் கொடுக்கப்பட்டிருந்தால் இவர் செய்வதைப் போன்று நானும் செய்திருப்பேன் என்று (ஆதங்கத்துடன்) சொல்கிறார்.

2. மற்றொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கியுள்ளான். அவர் அதை உரிய வழியில் செலவிடுகிறார். (இதைக் காணும்) மற்றொருவர் இவருக்குக் கொடுக்கப்பட்டதைப் போன்று எனக்கும் கொடுக்கப்பட்டிருந்தால் இவர் செய்வதைப் போன்று நானும் செய்திருப்பேன் என்று (ஆதங்கத்துடன்) சொல்கிறார், என அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்.

வாழ்க்கையின் எல்லா நலன்களையும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு, தான் விரும்பிய வண்ணம் குறைவாகவோ அல்லது நிறைவாகவோ அளிக்கிறான். நமக்கு கொடுக்கப்பட்டவைகளைப் பற்றி அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டு அவனுக்கு நன்றி செலுத்தக் கூடிய மக்களாக நாம் இருக்க வேண்டும்.

நம்மிடம் இல்லாதவை மற்றவர்களிடம் இருப்பதைப் பார்க்கும்பொழுது எந்நிலையிலும் அவர்கள் மீது பொறாமை கொள்ளாமல், அவர்களாவது நன்றாக இருக்கட்டும் என்று நினைப்பதுடன், அவர்களின் நல்வாழ்வுக்காக நாம் இறைவனிடம் பிரார்த்தனை புரிய வேண்டும்.

எல்லா நல்ல குணங்களும் நம்மிடம் இருந்தாலும், பொறாமை என்னும் தீய குணத்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாவதுடன், அவன் அருளைப் பெறுவதில் இருந்தும் நம்மை நாமே தடுத்துக் கொள்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பொறாமை என்னும் தீய குணத்தில் இருந்து நம்மைக் காத்து, நமது நல்ல அமல்களின் பலன்களை, நம்மைப் படைத்த இறைவனிடம் இருந்து பரிபூரணமாகப் பெற்றுக் கொள்வதற்கு இறைவனின் அருளை வேண்டுவோமாக.

- ம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை-84.

Next Story