ஏற்கிறோமா, மறுக்கிறோமா?


ஏற்கிறோமா, மறுக்கிறோமா?
x
தினத்தந்தி 28 Sep 2018 8:14 AM GMT (Updated: 28 Sep 2018 8:14 AM GMT)

இறைவனைக் காண வேண்டும், அவர் என் வாழ்க்கையில் ஏதோ ஒரு புள்ளியில் வந்து என்னை சந்திக்க வேண்டும் என்பது தான் ஒவ்வொரு மனிதனின் ஆசையாக இருக்க முடியும்.

அப்படி அவர் நம்மை சந்திக்கும் போது, நாம் அவரை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதை பொறுத்தே அற்புதங்கள் நம் வாழ்வில் நடக்கின்றன.

இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் அவரை சந்தித்தவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள், அதனால் என்னவிதமான நன்மைகள் பெற்றுக்கொண்டார்கள் என்று வேதத்திலே ஏராளமான நிகழ்வுகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஒருநாள் இயேசு கெனசரேத்து கடற்கரையில் நின்றுகொண்டிருக் கிறார், அநேக மக்கள் அவர் பேசுவதைக் கேட்க வந்திருந்தனர். அங்குமிங்கும் பார்க்கிறார் இயேசு. அருகிலிருந்த படகு ஒன்றை சற்று தள்ளும்படி சொல்லி அதில் அமர்ந்து மக்களோடு பேச ஆரம்பிக்கிறார்.

அந்த படகு சீமோனுடையது, அந்த சீமோன் ராத்திரி முழுவதும் உழைத்தும் ஒன்றும் கிடைக்காத வெறுமை நிலையில் இருந்தார். எனினும், அதனை வெளிக்காட்டாமல் இயேசு பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

மக்களிடம் பேசி முடித்த இயேசு, சீமோனைப் பார்த்து “ஆழத்திலே உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்று சொன்னார்.

ராத்திரியின் ஏமாற்றம் ஒரு புறம். தச்சு தொழில் செய்யும் குடும்பத்திலிருந்து வந்த இயேசுவை விட, கடலோடு தனக்குள்ள அனுபவம் பெரிது எனும் எண்ணம் மறுபுறம். எனினும், இயேசுவை இறைமகனாக கண்டு, அவர் வார்த்தையில் நம்பிக்கை வைத்து, அவருடைய வார்த்தையின் படி மீன் பிடிக்கச் சென்றார். வலைகள் கிழியத்தக்கதாய் மீன்களைப் பிடித்தார்.

இப்பொழுது தான் சீமோனுக்கு ஒரு உண்மை உறைக்கிறது. இத்தனை ஆண்டுகள் நான் மீன் பிடித்த கடல், எனக்கு மிகவும் பழக்கமான கடலும் கூட, என்னால் ஒரு இரவு முழுவதும் உழைத்தும் ஒன்றும் பிடிக்கமுடியவில்லை. ஆனால், இவரால் என் வலைகள் கிழியக்கூடிய அளவுக்கு மீன்கள் இந்த கடலில் எங்கிருக்கிறதென்று சொல்ல முடிகிறது. அப்படியெனில் இவரால் என் மனதிலிருக்கும் அழுக்கையும் கண்டுபிடிக்க முடியும் என்று உணர்ந்தார்.

இயேசுவின் கால்களில் விழுந்து “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார். இயேசு சீமோனை நோக்கி “பயப்படாதே, இதுமுதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்றார். தனக்கு கிடைத்த மீன்களையும், படகையும் விட்டுவிட்டு சீமோன் உடனடியாக இயேசுவைப் பின்பற்றினார்.

இன்னொரு நாள் இயேசு அவரது சீடர்களோடு கெரசேனர் என்னும் பகுதிக்கு சென்றார். அங்கே பேய் பிடித்திருந்த ஒருவரைக் கண்டு, அவரிடம் பேசுகிறார். அவர் தன் பெயர் இலேகியோன் என்று கூறினார்.

இலேகியோன் என்பது உரோமப்படையின் 6 ஆயிரம் போர் வீரர்கள் கொண்ட பெரும் படைப் பிரிவு - அவருக்குள் பல பேய்கள் புகுந்திருந்தன என்பதே அதன் பொருள்.

தங்களை பாதாளத்துக்கு துரத்தவேண்டாம் என்றும், துரத்துவதென்றால், அருகில் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருக்கும் பன்றிகளிடம் புக அனுமதிக்க வேண்டுமென்றும் பேய்கள் இயேசுவை கேட்டுக்கொண்டன. இயேசுவும் அனுமதிக்க, பேய்கள் பன்றிகளில் புகுந்தன. பன்றிக்கூட்டம் பாறையிலிருந்து கடலில் விழுந்து இறந்தது.

இதை அறிந்து ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், நடந்தவற்றை கேட்டு பயப்பட்டு, தங்களை விட்டுப் போகுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்.

இரண்டு நிகழ்வுகள்- இரண்டிலும் இயேசு தாமாக சென்று அற்புதம் செய்கிறார். சீமோன், அந்த அற்புதத்தின் வழியாக தன் குறையை உணர்ந்தார். இவர் என்னருகிலிருந்தால் தொழில் ரீதியாக லாபமீட்ட முடியும் என்று நினைக்காமல், இவருக்கு அருகில் நிற்கவும் நான் தகுதியற்றவன் என்று அவரை போக சொல்கிறார்.

ஆனால் இயேசுவோ, தன்னிலை உணர்ந்த சீமோனிடம் தன்னைப் பின்பற்றி வர அழைக்கிறார். தனக்குக் கிடைத்த பெரிய லாபத்தையும் விட்டு விட்டு இயேசுவுக்கு பின்சென்றார் சீமோன்.

அன்று வரை மீன் பிடித்து, அது செத்தபின் அதை விற்று வாழ்க்கை நடத்தியவர். அன்றிலிருந்து, நடை பிணமாக, உயிரற்ற நிலையிலிருக்கும் ஆன்மாக்களை இயேசுவிடம் அழைத்து வருபவனாக மாற்றம் பெற்றான்.

ஆனால் இரண்டாவது நிகழ்வில் வரும் கெரசேனர் பகுதி மக்களோ தங்களுக்கு இயேசுவால் இழப்பு என்று அறிந்ததும், இயேசுவையே தங்கள் ஊர் எல்லையிலிருந்து துரத்தி விட்டனர்.

இருளில் இருக்கும் மக்கள் வெளிச்சம் பெற மனுமகனாய், உலகிற்கு ஒளியாய் வந்த இயேசு - தன் ஒளியை பிறர் பிரதிபலிக்க வேண்டுமென்றே விரும்புகிறார்.

அப்படி நாம் ஒளியின் அருகில் செல்லும்போது, நம்மிலிருக்கும் அழுக்குகள் தெளிவாக தெரியத் தொடங்கும். அப்பொழுது, நாம் நம் அழுக்கை போக்குவதற்கான முயற்சியை எடுக்கிறோமா, அல்லது, இந்த ஒளி, என் அழுக்கை வெளிக்காட்டுகிறது, எனவே இந்த வெளிச்சம் எனக்கு தேவையில்லை என்று சொல்கிறோமா என்பதில் தான் நம் வாழ்க்கையின் குறிக்கோள் அடங்கிஇருக்கிறது.

- சகோ. ஹெசட் காட்சன், சென்னை. 

Next Story