இறை நம்பிக்கையின் உச்சம்


இறை நம்பிக்கையின் உச்சம்
x
தினத்தந்தி 21 Nov 2018 11:37 AM GMT (Updated: 21 Nov 2018 11:37 AM GMT)

நபிகள் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களை, தன் பெற்றோரை விட மிக அதிகமாக நேசித்தவர், அதிகம் பாசம் கொண்டவர்- அஷ்ரத்துல் முபஷ்ஷரா ஸாத் இப்னு அபீ வக்காஸ் (ரலி).

நபிகளாரின் ஏகத்துவ பிரச்சாரம் தொடங்கிய காலத்தில் ஆரம்ப நிலையிலேயே தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்ட நபித்தோழர்களில் முதன்மையானவர், மிக முக்கியமானவர் ஸாத் இப்னு அபீ வக்காஸ் (ரலி). அதுபோல, நபி (ஸல்) அவர்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.

மக்கா மாநகரில் தன் செல்வத்தாலும், செல்வாக்காலும் மிகவும் பிரசித்தி பெற்றவர் ஸாத் (ரலி). இஸ்லாத்தில் இணைந்த அந்த இளமைப் பருவத்திலேயே மிகவும் துடிப்போடும், துணிவோடும் ஏக இறைத் தத்துவத்தை எடுத்தியம்புவதில் வல்லமை பெற்றிருந்தார்.

பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து வந்த காரணத்தால் அவருக்கு வெளியில் எதிர்ப்புகள் அவ்வளவு கடுமையானதாக இல்லை. அதே சமயம் சொந்த குடும்பத்தில் அவர் சொல்லொண்ணா வேதனைகளையும், எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. அவர் கடைப்பிடித்து வந்த ஏக இறைக்கொள்கைக்கு மாற்றமாக அவரது பெற்றோர்கள் இருந்தனர்.

தன் பெற்றோர் மீது அதிக அன்பும், பாசமும் கொண்டிருந்த காரணத்தால் அவர்களை கடிந்து கொள்ள மனமின்றி, அதே சமயம் அண்ணலாரின் சமதர்ம மார்க்கத்தையும் விட்டுக்கொடுக்காமல் இருந்தார். ஒரே வீட்டில் தன் பெற்றோருடன் வசித்தாலும், தாமரை இலை தண்ணீர் போன்று ஒட்டுதல் இருந்தும் இல்லாமல் ஒரு விசித்திர வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

ஸாத் (ரலி) தன் தாயார் மீது அளவு கடந்து பிரியம் வைத்திருந்தார். தாயாரும் தன் அன்பு மகனை எந்த நிலையிலும் இழந்து விட மனமில்லாதவராக இருந்தார்.

இதனால், மகனை பல முறை கண்டித்தார். ஆனால், ஸாத் (ரலி) ஈமானை இழக்கத் தயாராக இல்லை.

‘ஸாதே! உன்னைப் பெற்றெடுத்த தாய் சொல்கிறேன். நம்முடைய முன்னோர்கள் நமக்கு செல்வங்களை மட்டும் விட்டுச் செல்லவில்லை. நம்முடைய குலப் பெருமையையும் அவர்கள் வழிபட்ட வணக்க வழிபாடுகளையும் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் சென்ற பாதையிலிருந்து திரும்பி நீ உனக்கென தனி வழியை ஏற்படுத்திக் கொள்ளலாமா? அது நம் குடும்ப பெருமைக்கு இழுக்கையல்லவா ஏற்படுத்தும். நீ சொல்கின்ற புதிய மார்க்கத்தை விட்டு நீ எங்களோடு இணையவில்லை என்றால் இந்த கணம் முதல் நான் உண்ண மாட்டேன், பருக மாட்டேன். என் உயிர் போயினும் சரியே. நான் உன்னை நம் பழைய மார்க்கத்தில் இணைக்காமல் விட மாட்டேன், இது சத்தியம். அப்படி எனக்கு ஏதாவது ஏற்படுமாயின் தாயைக் கொன்ற தனயன் என்ற பழிச்சொல் உன் வாழ்நாள் முழுவதும் உன்னை இழிவுபடுத்தி கொண்டிருக்கும். அந்த அவப்பெயரை உன்னால் எந்த நிலையிலும் துடைத்தெறிய முடியாது’ என்று கூறிவிட்டு தன் உண்ணா நோன்பை தொடங்கினார்.

சில நாட்கள் கழிந்தன. தாயாரின் பிடிவாதம் கொஞ்சம் கூட தளர்ந்த பாடில்லை. ஸாத் (ரலி) அண்ணலார் மீது கொண்ட அன்பும், இஸ்லாமிய மார்க்கம் மீது கொண்ட பற்றும் தாய்ப்பாசத்தை விட அதிகமாக இருந்தது. இதனால் அவர் தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டார். இருந்தும் தாய் மீது இருந்த அன்பும் பாசமும் அவரை வேதனை அடையச் செய்தது.

‘அன்னையே! உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள். என் பொருட்டால் நீங்கள் உங்களை வருத்திக் கொள்வதில் எந்தவித பயனும் விளையப் போவதில்லை. உங்கள் உயிரைக் காத்துக் கொள்வதற்காக ஏதாவது கொஞ்சமேனும் உண்ணுங்கள்’ என்று ஸாத் (ரலி) தன் தாயிடம் கெஞ்சினார்.

‘நீ நம்முடைய பழைய மார்க்கத்திற்கு வரவேண்டும், இல்லையெனில் என் உயிர் இப்படியே பிரிய வேண்டும், எதை விரும்புகிறாய் என்பதை நீயே முடிவு செய்து கொள்’ என்று கூறி அவரது தாயார் மறுத்துவிட்டார்.

தாயாரின் உறுதியை கண்ணுற்ற ஸாத் (ரலி), “அன்பு தாயே! என் நபி மீது நான் என் அன்னையை விட ஏன் என் உயிரைவிட அதிக அன்பு செலுத்தவில்லையானால் நான் முழுமை பெற்ற மூமினாக முடியாது. அந்த தத்துவத்தை தான் அவர்கள் எங்களுக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள். நீங்கள் தவறான வழியில் இருப்பதை கண்ணுற்றும் உங்களை சத்தியத்தின் பக்கம் கொண்டு சேர்க்கவில்லை என்றால் நாளை மறுமையில் நானும் இறைவன் முன் குற்றவாளியாகத்தான் நிற்க வேண்டியதிருக்கும். ஆனால் நீங்களோ என்னை இறைவனுக்கு இணை வைத்தலின் பக்கம் அழைக்கிறீர்கள், நான் எப்படி அதற்குச் செவிசாய்க்க முடியும்? அல்லாஹ் மீது ஆணையாக ஒன்றை மட்டும் சொல்கிறேன். உங்களுக்கு ஓர் உயிர் என்ன? ஓராயிரம் உயிர் இருந்து அவை ஒவ்வொன்றாய் உங்களை விட்டுப் பிரிந்து சென்றாலும் நான் கொண்ட ஈமானை விட்டுவிட மாட்டேன்” என்றார்.

மேலும் தொடர்ந்து கூறும்போது, “தாயே, இது கடினமான செயல் தான். இருந்தாலும் நாளை மறுமையில் என் தாயை நரகத்திற்கு கொண்டு செல்லும் மாபெரும் கொடிய தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டியது என் தலையாய கடமை. அதனை ஒப்பிடும் போது இந்த தண்டனையை நான் மிக எளிதாகவே கருதுகிறேன்” என்றார்.

ஸாத் (ரலி) கடைப்பிடித்த இந்த உறுதியைக் கண்டு அல்லாஹ் அண்ணலாருக்கு ‘வஹி’ (இறைச்செய்தி) அனுப்புகிறான்.

“எனக்கு நன்றி செலுத்து, உன்னுடைய தாய்-தந்தைக்கும் நன்றி செலுத்து. எனினும், இறைவன் என்று நீ அறிந்து கொள்ளாத ஒரு பொருளை, எனக்கு இணை வைக்கும்படி அவர்கள் உன்னை நிர்பந்தித்தால், அவ்விஷயத்தில் நீ அவர்களுக்கு கீழ்படிய வேண்டாம். ஆயினும் இவ்வுலக விஷயத்தில் நீ அவர்களுக்கு நிதானமாக உதவி செய்து அன்பாக நேசித்து வா. எவ்விஷயத்திலும் என்னையே நோக்கி நிற்பவர்களின் வழியே நீ பின்பற்றி நட” (திருக்குர்ஆன் 31:14,15).

தன் பொருட்டால் இறக்கப்பட்ட இந்த இறைச்செய்தியை நபிகள் மூலம் கேள்வியுற்றதும் ஸாத் (ரலி) அகமகிழ்ந்து போனார். அந்த சம்பவத்திற்குப் பிறகு அவரது ஈமானின் பிடிப்பு மேலும் அதிகமானது.

திருக்குர்ஆனில் தன்னை எங்கெல்லாம் வணங்கச் சொல்கின்றானோ, அங்கெல்லாம் பெற்றோருக்கும் நன்றி செலுத்து என்று பல இடங்களில் இறைவன் கட்டளையிட்டு இருக்கின்றான். அப்படிப்பட்ட கட்டளை அமுலில் இருக்க, ஸாத் (ரலி) தனது பெற்றோருக்கு அடிபணியவில்லை என்பதை குற்றமாக கருதாமல், அவரது செயலை நியாயப்படுத்தி, அதன் மூலம் உலக மக்களுக்கும் ஒரு படிப்பினையை அல்லாஹ் வழங்கியிருக்கின்றான்.

எல்லாப் பாவங்களையும் மன்னிக்கின்ற அல்லாஹ், இணை வைத்தலை மன்னிப்பதில்லை என்பதையும் இந்த நிகழ்வின் மூலம் நமக்கு பாடமாய் சொல்லித் தருகின்றான்.

மு.முஹம்மது யூசுப், உடன்குடி.

(தொடரும்)

Next Story