இறைவனின் அற்புத படைப்புகள்


இறைவனின் அற்புத படைப்புகள்
x
தினத்தந்தி 18 Dec 2018 12:14 PM GMT (Updated: 18 Dec 2018 12:14 PM GMT)

அல்லாஹ் மூன்று வகையான படைப்புகளை தன் ஆற்றலின் மூலமாக படைத்தான். அவற்றில் முதல் வகை படைப்புகள், சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் மற்றும் விண்வெளியில் சுற்றிவரும் பிற கோள்கள். அடுத்தது, மலக்குகள் மற்றும் ஜின்கள்.

மலக்குகளை ஒளியினாலும், ஜின்களை கொழுந்து விட்டு எரியும் நெருப்பு ஜூவாலைகளாலும் இறைவன் படைத்தான்.

மூன்றாவது, உயிரினங்கள். இதில் மனிதன், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என பூமியில் மட்டுமின்றி இந்த அண்டத்தில் வாழும் அனைத்து உயிரினங்களையும் இறைவன் படைத்தான்.

இந்த மூன்று படைப்புகளும் இறைவனின் கட்டளைப்படி அவனை வணங்கி, தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றன.

இதன்படி, அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து, அவனை எந்த நிலையிலும் வணங்குபவர்களாகவும், தொடர்ந்து அவனைப் புகழ்ந்தவர்களாகவும் மலக்குகள் உள்ளனர். அந்த மலக்குகளில் சிறந்த மலக்குகளை அல்லாஹ் தேர்ந்தெடுத்து, சில குறிப்பிட்ட பணிகளை அவர்களிடம் கொடுத்து, அதனை செய்யுமாறு கட்டளையிட்டுள்ளான்.

அத்தகைய சிறப்பு பெற்ற மலக்குகளில் குறிப்பிடத்தக்கவர் ஜிப்ரில் (அலை). நபிகளுக்கு ‘வஹி’யை (இறைச்செய்தியை) அறிவிக்கும் பணியை இவர் செய்தார்.

மனிதர்களின் உயிரை கைப்பற்றுவதற்காக நியமிக்கப்பட்ட மலக்கின் பெயர் இஸ்ராயில். மறுமைநாள் ஏற்படுவதை அறிவிக்க ‘சூர்’ என்ற குழல் ஊதுபவராக இஸ்ராபீல் என்ற மலக்கும், காற்று மழையை கட்டுப்படுத்துபவராக மீக்காயீல் என்ற மலக்கும் இறைவனால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அன்றாடம் மனிதன் செய்யும் பாவ புண்ணியங்களை எழுதும் பணியை கிராமுன், காத்தீபன் என்ற மலக்குகளிடமும், ஒரு மனிதன் மரணித்த பின் மண்ணறையில் அவனிடம் கேள்வி கேட்கும் பணியை முன்க்ர், நக்கீர் என்ற மலக்குகளிடமும் இறைவன் ஒப்படைத்துள்ளான்.

மலக்குகளைத் தொடர்ந்து, ஜின்களை அல்லாஹ் படைத்தான். ஜின்களின் தலை வனாக ‘இப்லீஸ்’ என்ற ஜின்னை நியமித்து, அவனுக்கு பல சிறப்பு அம்சங்களைக் கொடுத்தான்.

ஜின்களைத் தொடர்ந்து, முதல் மனிதரான ஆதமை களிமண்ணினால் அல்லாஹ் படைத்தான். அவரின் வழித்தோன்றலாய் ஆண்-பெண் கொண்ட மனித இனத்தை உருவாக்கினான். எல்லா மலக்குகளையும், ஜின்களையும் மனிதனுக்கு சிரம் பணிந்து வணங்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டான்.

அல்லாஹ்வின் ஆட்சியின் கீழ் இருந்த போதிலும், தன் கர்வத்தின் காரணமாக இதை ஏற்க ஜின்களின் ஒருவனான இப்லீஸ் மறுத்தான். இதையடுத்து, அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி சொர்க்கத்தை விட்டு தூக்கி எறியப்பட்டான்.

இதுகுறித்த திருக்குர்ஆன் வசனங்கள் வருமாறு:-

“காய்ந்தபின் ‘கன் கன்’ என்று சப்தம் கொடுக்க கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால், நிச்சயமாக நாமே உங்கள் மூலப் பிதாவாகிய முதல் மனிதனைப் படைத்தோம்” (திருக்குர்ஆன் 15:26).

“அதற்கு முன்னதாக ஜின்களை கொடிய உஷ்ணமுள்ள நெருப்பிலிருந்து படைத்தோம்” (திருக்குர்ஆன் 15:27)

“அவ்வாறே வானவர்கள் அனைவரும் அவருக்கு மரியாதை செலுத்த சிரம் பணிந்தார்கள், இப்லீஸைத் தவிர. அவன் சிரம் பணிந்தவர்களுடன் சேர்ந்து சிரம் பணியாது விலகிக் கொண்டான்” (திருக்குர்ஆன் 15:30,31).

“அதற்கு உமது இறைவன் இப்லீஸை நோக்கி, இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடன் சேர்ந்து நீயும் சிரம் பணியாத காரணமென்ன? என்று கேட்டான்” (திருக்குர்ஆன் 15:32)

“அதற்கு அவன், ‘காய்ந்த பின் சப்தம் கொடுக்க கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் நீ படைத்த மனிதனுக்கு, நெருப்பால் படைக்கப்பட்ட நான் சிரம் பணிய தயாரில்லை. ஏனென்றால் நான் அவனை விட மேலானவன்’ என்று கூறினான்” (திருக்குர்ஆன் 15:33).

‘தான்’ என்ற கர்வம், இப்லீசை அழிவுப் பாதையில் தள்ளியது. இறைக்கட்டளைக்கு மாறு செய்ததால் ‘சைத்தான்’ என்ற பெயர் அவனுக்கு கிடைத்தது.

மனிதர்கள் போன்றே ஜின் வர்க்கத்திலும் நல்லவர்கள் கெட்டவர்கள் உண்டு. மனிதர் களுக்கென பூமியை இருப்பிடமாக படைத்த இறைவன் ஜின்களுக்கென இருப்பிடம் எதனையும் படைக்காமல் மரங்களிலும், மலை களிலும், வானவெளிகளிலும் சஞ்சரிக்க கூடியதாக அமைத்தான்.

அதே சமயம் மனிதனை விட ஜின்களை அதிக ஆற்றலும், சக்தியும் கொண்டவர் களாக இறைவன் படைத்தான். காற்று, ஒளியை விட மிக விரைவில் தான் விரும்பிய இடங்களுக்குச் செல்லும் ஆற்றலை அவர்களுக்கு அல்லாஹ் அளித்திருந்தான்.

மூஸா நபி காலத்திலும், சுலைமான் நபி காலத்திலும் ஜின்கள் மனிதர்களுக்கு கட்டுபட்டவர்களாக, அவர்கள் இடும் கட்டளைக்கு அடி பணிந்தவர்களாகவும் இருந்தனர்.

மூஸா நபி காலத்தில் பரவலாகவும், வெளிப்படையாகவும் ஜின்கள் பற்றிய விவரங்களை மக்கள் அறிந்திருந்தனர். ஆனால், ஜின்களை பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை அறிந்து கொள்ளவே பலரும் முயன்றனர். இறுதியில் அவர்களை தெய்வங்களாக வணங்கவும் முற்பட்டனர். இறை சக்தியில்லாத ஒன்றுக்கு இறைவன் அந்தஸ்த்தை கொடுத்து இணை வைத்தனர். அதனையும் திருக்குர்ஆன் மிக கடுமையாக கண்டித்தது. இதுபற்றிய திருக்குர்ஆன் வசனம் வருமாறு:-

“எங்கள் இறைவனே, நீ மிக பரிசுத்தமானவன். நீதான் எங்கள் பாதுகாவலன். மாறாக அவர்கள் ஜின்னை வணங்கி கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், அந்த ஜின்களையே நம்பிக்கை கொண்டும் இருந்தார்கள் என்று வானவர்கள் கூறுவர்” (திருக்குர்ஆன் 34:41).

ஜின்களிலும் அல்லாஹ்வை அறிந்து கொண்ட நல்லவர்களும், மனித இனத்தை கெடுக்கும் தீமைகளைச் செய்யும் தீயவர்களும் இருந்தனர். அந்த நல்லவர்கள், திருக்குர்ஆன் வசனங்களை செவியுற்று தன் இனத்தாருக்கு அறிவுரை வழங்கியதாகவும் திருக்குர்ஆன் இவ்வாறு அறிவிக்கிறது:

“நபியே! இந்த குர்ஆனை கேட்கும் பொருட்டு ஜின்களில் சிலரை நாம் உம்மிடம் வருமாறு செய்து, அவர்கள் வந்த சமயத்தில், அவர்கள் தங்கள் மக்களை நோக்கி, ‘நீங்கள் வாய்பொத்தி இதைக் கேட்டுக்கொண்டு இருங்கள்’ என்று கூறினார்கள். இது ஓதி முடிவு பெறவே தங்கள் இனத்தாரிடம் சென்று அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய முற்பட்டனர்” (திருக்குர்ஆன் 46:29)

அதுமட்டுமல்ல, ‘திருக்குர்ஆன் உண்மையான வேதம், அதன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்’ என்று ஜின்கள் தன் இனத்தாருக்கு அறிவுரை வழங்கியது. அது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“எங்கள் இனத்தாரே, நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தை செவியுற்றோம். அது மூஸாவிற்கும் பின்னர் அருளப்பட்டிருக்கிறது. அது தனக்கு முன்னுள்ள வேதத்தையும் உண்மைப்படுத்துகிறது. அது சத்தியத்திலும் நேரான வழியிலும் செலுத்துகிறது” (திருக்குர்ஆன் 46:30),

“எங்கள் இனத்தாரே அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் அவரை நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களை காப்பாற்றுவான்” (திருக்குர்ஆன் 46:31).

திருக்குர்ஆனை ஏற்றுக் கொண்டு, அதன்படி நடந்து, நல்ல செயல்களைச்செய்யும் ஜின்கள் மற்ற ஜின்களுக்கு இந்த அறிவுரைகளை வழங்கி திருக்குர்ஆனை ஏற்றுக்கொண்டு, நேர்வழியில் வருமாறு வேண்டின.

ஜின்கள் அல்லாஹ்வை ஈமான் கொண்ட நிகழ்வு ‘சூரத்துல் அல்ஜின்னு’ என்ற அத்தியாயத்தில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று செய்தியின் மூலம் ஜின் இனத்தாரிலும் நல்லவர்கள், கெட்டவர்கள் உண்டு. அவர்கள் அல்லாஹ்வையும், திருக்குர்ஆனையும், அண்ணல் நபிகளையும் தங்கள் வாழ்க்கையில் பின்பற்றி நடந்து நற்கதி அடைந்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது.

(தொடரும்)

Next Story