ஆன்மிகம்

வடபழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் + "||" + At Vadapalani Murugan temple Thaipusa festival

வடபழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

வடபழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
சென்னை வடபழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
சென்னை,

முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். தை மாதத்தில் வரும் பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் கூடிய நாளை தைப்பூச திருநாளாக தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நவக்கிரகங்களில் சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் வடதிசை நோக்கி தன்னுடைய பயணத்தை தொடங்குகிறார்.


அத்தகைய மகத்துவம் மிக்க தைப்பூசத்தையொட்டி முருகபெருமானின் அறுபடை வீடுகளிலும், தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சென்னை வடபழனி முருகன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கடுமையான பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல், அதிகாலையிலேயே குடும்பத்துடன் வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

காவடி எடுத்தப்படி பக்தி பரவசத்துடன் வந்த பக்தர்கள், கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் தீ மிதித்தனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பால் குடம் ஏந்தியபடி ஊர்வலமாக வந்தும், அலகு குத்தியபடியும், தேர்களை அலகு குத்தியவாறு இழுத்தபடியும் வந்து தங்களுடைய நேர்த்திக் கடன்களை செலுத்தினர். ‘கந்தனுக்கு அரோகரா’, ‘முருகனுக்கு அரோகரா’ என்ற பக்தி கோஷங்கள் விண் அதிர ஒலித்தன.

அலகு குத்தியபடி வந்தவர்களிடம் சாலையின் இரு புறங்களிலும் நின்ற பக்தர்கள் வணங்கி ஆசி பெற்றனர்.

இதேபோல சென்னை பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் என்று அழைக்கப்படும் கந்தசாமி கோவில், பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோவில், சைதாப்பேட்டையில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பட பல்வேறு இடங்களில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவில்களில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முருகபெருமானை தரிசனம் செய்தனர். சென்னையில் முருகன் கோவில்களில் தைப்பூசம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

எர்ணாவூர் காமராஜர் நகரில் உள்ள திருமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டி விரதம் இருந்த 1008 பக்தர்கள், எண்ணூர் அனல் மின்நிலைய குடியிருப்பு வளாகத்தில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் இருந்து தலையில் பால் குடம் ஏந்தி ஊர்வலமாக எர்ணாவூர் திருமுருகன் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் முருகனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

மாதவரம் பொன்னியம்மன்மேடு பிரகாஷ் நகரில் உள்ள பாலமுருகன் கோவிலில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடம் ஏந்தி வந்து பாலாபிஷேகம் செய்தனர். இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.