மக்கா வெற்றி


மக்கா வெற்றி
x
தினத்தந்தி 29 Jan 2019 2:28 PM GMT (Updated: 29 Jan 2019 2:28 PM GMT)

அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு இடம் பெயர்ந்து (ஹிஜ்ரத் செய்து) மதீனா வந்தடைந்து ஆறு ஆண்டு காலம் நிறைவு பெற்றிருந்தது. அப்போது, யூதர்களைத் தவிர ஏனைய மதீனாவாசிகள் பலர் இஸ்லாத்தைத் தழுவியவர்களாக இருந்தார்கள்.

இந்த சமாதான சூழ்நிலையில் நபிகள் பெருமானாருக்கு மக்கா நகரின் நினைவும், இறை இல்லமான கஅபாவை காண வேண்டும் என்ற ஆவலும் மேலோங்கி நின்றது. இதையடுத்து மக்காவிற்கு ‘உம்ரா’ செய்ய முடிவு செய்தார். நபிகளாருடன் சேர்ந்து மக்கா செல்ல அவரது தோழர்களும் ஆயத்தமானார்கள்.

முதன்மையான நபித்தோழர்களான அபூபக்கர், உமர், உஸ்மான், அலி (ரலி) ஆகியோருடன் ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் நபிகள் நாதருடன் ஒன்று சேர்ந்து புறப்பட்டனர்.

அரேபிய குரைஷியர்கள் இந்த செய்தியை அறிந்தனர். நபிகள் தலைமையில் வரும் கூட்டம் போர் செய்யும் எண்ணத்தில் வரவில்லை என்றாலும், அவர்களை மக்கா நகருக்குள் அனுமதித்தால் அது நமக்கு பின்னடைவைத் தரும். இங்கிருக்கும் பாதி சொந்தங்கள் அவர்களோடு சென்று விடுவார்கள். எனவே அவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆலோசனை செய்தார்கள்.

இதன் அடிப்படையில் பேச்சாற்றல் மிக்க ஸஹது இப்னு அம்ர் என்பவரை நபிகளாரிடம் அனுப்பி சமாதான உடன்படிக்கை செய்ய திட்டமிட்டனர்.

ஸஹது இப்னு அம்ர், ஹூதைபிய்யா என்ற இடத்தில் நபிகளாரையும், அவரது கூட்டத்தையும் சந்தித்தார். இதற்கு மேல் தொடர்ந்து செல்ல நபிகளாரின் கூட்டத்துக்கு அனுமதி இல்லை என்று தடுத்தார். போர் புரிய வரவில்லை, கஅபாவை காணவே வருகிறோம் என்று நபிகள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் இதை ஏற்க ஸஹது இப்னு அம்ர் மறுத்தார்.

இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே ஒரு உடன்படிக்கை செய்துகொள்ள முடிவு செய்யப்பட்டது. உடன்படிக்கையின் அத்தனை விதிகளையும் நானே சொல்வேன் என்று ஸஹது இப்னு அம்ர் அடம் பிடித்ததையும் அண்ணல் எம்பெருமானார் (ஸல்) ஒப்புக்கொண்டார்கள். ஹூதைபிய்யா உடன்படிக்கை கையெழுத்தானது.

சமாதான உடன்படிக்கையின் அத்தனை ஷரத்துகளுமே மக்கா குரைஷியருக்கு சாதகமாகவே அமைந்திருந்தது. உமர் (ரலி) போன்ற வேகம் மிகுந்த சஹாபாக்கள், ‘நாமோ தலைசிறந்த வீரர்களாய் இருக்கிறோம். ஆனால் இந்த உடன்படிக்கையோ நமக்கு முழுவதும் பாதகமாக உள்ளது. இதனை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும். போருக்கு ஆணையிடுங்கள். ஸஹது இப்னு அம்ரின் தலையை கொய்து மக்காவை கைப்பற்றுவோம். உம்ரா செய்வோம்’ என்று சூளுரைத்தார்கள்.

அண்ணல் எம்பெருமானார் (ஸல்) புன்னகை பூத்தவர்களாக அவர்களை அமைதிப்படுத்தினார்கள். “மக்காவில் நம் சொந்தங்கள் இருக்கிறார்கள். இன்று இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், நாளை அவர்கள் இஸ்லாத்தைத் தழுவலாம். அவர்களை இழக்க நான் தயாரில்லை. மேலும் ரத்தம் சிந்தி மக்காவை வெற்றி கொள்ள என் மனம் மறுக்கிறது” என்றார்கள்.

சஹாபா பெருமக்கள் உள் மனதில் இதனை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று அறிந்த அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்:

“(நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக நாம் உங்களுக்கு (மிகப்பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம்”. (திருக்குர்ஆன் 48:1)

ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு, இந்த இடைப்பட்ட கால இடைவெளியில் மக்காவில் இருந்த சொந்தங்களும் பந்தங்களும், போரில்லாத சமாதான காலத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கருத்துகள் பரிமாறிக் கொண்டனர். சந்திக்கும் வாய்ப்புகளும் அதிகமாயின. மதீனாவைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பலரும் ஏகத்துவ கொள்கையை முழுமையாக அறிந்து இஸ்லாத்தை தழுவினர். மக்கத்து குரைஷிகளின் பலம் மிகவும் பாதிக்கப்பட்டது.

உடன்படிக்கையின் காலக்கெடுவும் முடிவடைந்தது. மீண்டும் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் ‘உம்ரா’ செய்ய எண்ணினார்கள். இப்போது நபித்தோழர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரமாக பெருகி இருந்தது. ஒட்டகங்கள், குதிரைகள் மீது பயணித்தும், நடந்தும் அந்த பெருங்கூட்டம் மக்காவை நோக்கி புறப்பட்டது. நபிகளாரின் இந்த பெரும்படை வருவதை அறிந்து எதிரிகள் பயந்து ஓடி ஒளிந்து கொண்டனர்.

அண்ணலாரின் பேரணி அமைதியாய் மக்கா நகரில் நுழைந்தது. ஒரு சொட்டு ரத்தம் சிந்தவில்லை, போர் முரசு கொட்டப்படவில்லை. அகிம்சையாய் மக்கா வெற்றி கொள்ளப்பட்டது.

ஹூதைபிய்யா உடன்படிக்கையின் போது இறக்கிய வசனத்தின் மூலம் உறுதி செய்த வெற்றியை அல்லாஹ் அருளினான். மேலும் இதற்கு நன்றி செலுத்தும்படியும் திருக்குர்ஆன் வசனம் இறங்கியது:

“(அதற்காக நீங்கள் உங்களது இறைவனுக்கு நன்றி செலுத்துவீராக! அதனால்,) உங்களது முன் பின்னுள்ள தவறுகள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்துத் தனது அருட்கொடையையும் உங்கள் மீது முழுமைபடுத்தி வைத்து, உங்களை அவன் நேரான வழியிலும் நடத்துவான்” (திருக்குர்ஆன் 48:2)

இப்படி ஒரு மகத்தான வெற்றியைத் தந்து விட்டு, பலமிகுந்து விட்டதால் அகம்பாவம் உள்ளத்தில் குடி கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கையும் செய்கின்றான் இறைவன். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“(நபியே! உங்களுக்கு) அல்லாஹ்வுடைய உதவியும், (மக்காவின்) வெற்றியும் கிடைத்து,

அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதையும் நீங்கள் கண்டால்,

(அதற்கு நன்றி செலுத்துவதற்காக) உங்களது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து, அவனுடைய (அருளையும்) மன்னிப்பையும் கோருவீராக. நிச்சயமாக அவன் (பிரார்த்தனைகளை அங்கீகரித்து) மன்னிப்புக் கோருதலையும் அங்கீகரிப்பவனாக இருக்கின்றான். (திருக்குர்ஆன் 110:1-3)

மக்காவில் நுழைந்ததும் கஅபாவில் உள்ள சிலைகள் அனைத்தும் உடைத்து எறியப்பட்டு கஅபா சுத்தம் செய்யப்பட்டது.

பிலால் (ரலி) அவர்களை அழைத்து கஅபாவின் மேல் ஏறி “பாங்கு” சொல்லி அனைவரையும் தொழுகைக்காக அழைப்பு விடுக்குமாறு சொன்னார்கள்.

அடுத்து மக்கத்துவாசிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. யார் யார் என்னென்ன தீமைகளை முஸ்லிம்களுக்கு செய்திருந்தாலும் அனைவரும் இன்று முதல் மன்னிக்கப்பட்டு விட்டனர் என்ற முதல் அறிவிப்பு மக்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.

குரைஷியர் தலைவர் அபூசுபியானும் அவன் மனைவி ஹிந்தா, ஹம்ஸா (அலை) அவர்களை கொலை செய்த வம்சி மற்றும் அங்கு அடைக்கலமாய் இருந்த அனைவரும் மறைவிடத்தில் இருந்து வெளியில் வந்து அண்ணலார் கரம் பற்றி பாவமன்னிப்பு பெற்று இஸ்லாத்தைத் தழுவினர். அன்று நபிகள் நாதர் சொன்னார்களே, நாளை இவர்களும் இஸ்லாத்தில் இணைவார்கள் என்ற நம்பிக்கை உண்மையானது.

அடுத்து கஅபாவின் சாவியை யாரிடம் ஒப்படைப்பது என்ற பெரும் கேள்வி எழுந்தது. நபி பெருமானார் (ஸல்) கஅபாவை விட்டு இடம் பெயர்ந்து செல்லும் போது, ‘கஅபாவின் சாவியைக் கொடுங்கள். நான் இரண்டு ரக்காத் தொழுது விட்டு செல்கிறேன்’ என்று கேட்டபோது, ஆணவமாய் மறுத்த உஸ்மா பின் தல்ஹாவை அழைத்து அவர் கையில் சாவியை ஒப்படைத்து, ‘உலகம் உள்ளளவும் இவரது சந்ததியினரே கஅபாவின் சாவியை வைத்திருப்பார்கள்’ என்று நன்மாராயம் சொன்னார்கள். இதன் மூலம் அவரின் சந்ததி, உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும் என்ற முன்னறிவிப்பையும் சொன்னார்கள். இன்று வரை அந்த குடும்பத்தினரிடமே அந்த சாவி உள்ளது என்பது நபிகளாரின் முன்னறிவிப்பை உண்மைப்படுத்துகிறது.

அன்று ஏற்றப்பட்ட ஏகத்துவ கொள்கைக்கொடி இன்று வரை பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கிறது. வெற்றியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

(நிறைவு பெற்றது)

Next Story