நீதித்தலைவர்கள்


நீதித்தலைவர்கள்
x
தினத்தந்தி 19 Feb 2019 8:47 AM GMT (Updated: 19 Feb 2019 8:47 AM GMT)

விவிலிய நூல்களில் ஏழாவதாக வருகின்ற நூல் இந்த நீதித்தலைவர்கள் எனும் நூல். இது பழைய மொழிபெயர்ப்பில் ‘நியாயாதிபதிகள்’ என அழைக்கப்பட்டு வந்தது.

தலைப்புக்கு ஏற்ப இந்த நூலில் நீதித்தலைவர்களின் வாழ்க்கை வரலாறு ஆன்மிகப் பார்வையில் குறிக்கப்பட்டுள்ளது. பதினைந்து நீதித் தலைவர்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளனர். இந்த நீதித்தலைவர்கள் இஸ்ரயேல் மக்களை வழிநடத்தியவர்கள்.

இந்த நூலை எழுதியவர் இறைவாக்கினர் சாமுவேல் என்பது மரபுச்செய்தி. ஆனால் முழுமையாக அவர் எழுதியிருக்க முடியாது என்றும், நூலின் சில பாகங்களை அவர் எழுதியிருக்கலாம் எனவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இஸ்ரயேலர்களின் வரலாற்றின் நானூற்று எண்பது ஆண்டு கால வாழ்க்கை இந்த சுருக்கமான நூலில் காணக்கிடைக்கிறது. இந்த நூலில் 21 அதிகாரங்களும் 618 வசனங்களும் இடம் பெற்றுள்ளன.

இஸ்ரயேல் மக்கள் கானான் நாட்டைக் கைப்பற்றிய காலம் தொடங்கி, அவர்களிடையே அரச வரலாறு தொடங்கியது வரையிலான நிகழ்வுகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

இந்தக் காலகட்டத்தில் இறைவனே மக்களை நேரடியாக வழிநடத்தி வந்தார். அவர் களுக்கு அரசர்கள் இல்லை. நீதித் தலைவர்கள் எனும் ஆன்மிக வழிகாட்டிகள் மூலமாக மக்களை இறைவன் வழி நடத்தி வந்தார்.

இந்த நீதித்தலைவர்களில் பலர் 40 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். நாற்பது என்பது விவிலியத்தில் ஒரு சிறப்பான எண். தெபோராள், பாராக், கிதியோன், ஒதானியேல், ஏகூத் என எல்லோரும் நாற்பது ஆண்டுகள் நீதித்தலைவர்களாய் இருந்தனர்.

இந்த ஆன்மிகத் தலைவர்கள் ஞானம் நிறைந்தவர்களாகவும், இறைவனோடு நேரடித் தொடர்பு கொண்டவர்களாகவும், சிலர் வலிமை மிக்கவர்களாகவும் இருந்தார்கள்.

இந்த நூலின் காலகட்டத்தில் சுமார் முன்னூற்று ஐம்பது ஆண்டுகள் இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு பயந்து அவருடைய வழியில் நடந்தார்கள். மிச்ச காலத்தில் இறைவனை விட்டு விலகிச் சென்றார்கள்.

இறைவனை விட்டு மக்கள் விலகிச் செல்லும்போது இறைவன் அவர்களைக் கண்டித்தும், தண்டித்தும் திருத்துகிறார். மனம் திரும்பி இறைவனிடம் வருகையில் அவர் பகையை மறந்து பரிவுடன் அரவணைக் கிறார். இந்த செய்திகளே இந்த நூலின் மையமாக அமைந்துள்ளன.

ஆண்டவரின் பார்வையில் தீமையானதைச் செய்வதும், கடவுள் அவர்களை எதிரி களிடம் ஒப்படைப்பதும், மக்கள் மனம் திருந்தி இறைவனை வேண்டுவதும், அவர்களை மீட்க இறைவன் ஒரு தலைவரை எழுப்புவதும், மீட்பிற்குப் பின் மீண்டும் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீமையானதைச் செய்வதும்… என இந்த வட்டம் சுழன்று கொண்டே இருப்பதை இந்த நூல் பதிவு செய்திருக்கிறது.

உண்மை இறைவனை விட்டு விட்டு பாகால் மற்றும் அஸ்தரோத்துகள் எனும் தெய்வங்களை மக்கள் நாடிச்செல்கின்றனர். ‘பாகால்’ என்பது அன்னியக் கடவுளுக்கான ஒரு பொதுப் பெயர் தான். பெரும்பாலும் மழையின் கடவுளை அது குறிப்பிட்டது. ‘அஸ்தரோத்துகள்’ நிலம் மற்றும் வளமைக்கான பெண் தெய்வங்களாக இருந்தன. இந்த தெய்வங்களை மக்கள் நாடிச் சென்றது தான் இறைவன் பார்வையில் மிகப் பெரிய பிழையாய் இருந்தது.

தெபோராள், சிம்சோன், கிதியோன், அபிமெலேக்கு, யப்தா உட்பட முக்கியமான பல தலைவர்களின் வரலாற்றை இந்த நூல் பதிவு செய்திருக்கிறது. அதில் தெபோராள் பெண். ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண்ணை இறைவன் நீதித்தலைவியாக ஏற்படுத்தி, அவர் மூலமாக இஸ்ரயேல் மக்களை மீட்ட செய்தி விவிலியத்தின் மிக முக்கியமான பகுதியாகும். அவர் இறைவாக்கு உரைத்தார், தலைமை ஏற்றார், நீதி வழங்கினார், போரை முன்னின்று நடத்தினார் என அவரது வரலாறு அற்புதமாக விவரிக்கப்பட்டுள்ளது.

அதே போல கிதியோனின் வாழ்க்கையும் மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறைத்தூதர் கிதியோனைச் சந்திப்பது, அவரை வாழ்த்துவது, கிதியோன் தான் தகுதியற்றவன் என தம்மைத் தாழ்த்துவது, ஆண்டவர் அவருக்கு தெளிவும் வலிமையும் கொடுப்பது, அடையாளங்களைக் கொடுப்பது, அவரை ஒரு மாபெரும் தலைவராக மாற்றுவது என நிகழ்வுகள் சிலிர்ப்பான வாசிப்புக்கு உத்தரவாதம் தருகின்றன.

இப்தா எனும் தலைவரின் வாழ்க்கை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. வெற்றியுடன் வருகையில் என் வீட்டு வாசலில் இருந்து என்னை நோக்கி முதலில் வரும் நபரை கடவுளுக்கு எரிபலியாக்குவேன் என நேர்ச்சை செய்கிறார் அவர்.

வெற்றியுடன் வருகையில் வருவதோ அவருடைய ஒரே மகள். இறைவனின் வாக்கை நிறைவேற்றுகிறார் இப்தா.

சிம்சோன் எனும் மாவீரன் எதிரிகளை சகட்டு மேனிக்கு அழிக்கும் ஆற்றல் படைத்த நீதித் தலைவன். அவன் எப்படி ஒரு பெண்ணால் வீழ்கிறான் எனும் வரலாறு பரபர திருப்பங்களுடனான ஒரு நாவல் போல இந்த நூலில் விவரிக்கப்படுகிறது.

வாசிப்புக்கு பரபரப்பும் சுவாரசியமும், வியப்பும், அதிர்ச்சியும் தரக்கூடிய ஒரு அற்புதமான நூலாக இந்த நீதித்தலைவர்கள் நூல் இருக்கிறது. உலகில் யார் ஆட்சியமைத்தாலும் இறைவனே அனைவருக்கும் தலையாய் இருக்கிறார் எனும் ஆறுதலையும் இந்த நூல் தருகிறது.

(தொடரும்)

Next Story