திருக்குர்ஆன் வாசிப்பது


திருக்குர்ஆன் வாசிப்பது
x
தினத்தந்தி 18 July 2019 12:08 PM GMT (Updated: 18 July 2019 12:08 PM GMT)

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘திருக்குர்ஆன் வாசிப்பது’ குறித்த தகவல்களை காண்போம்.

திருக்குர்ஆன் வாசிப்பது நாவு சார்ந்த இறைநம்பிக்கை. திருக்குர்ஆன் வாசிப்பது, ஒருவர் வாசிக்கும் போது மற்றவர் கேட்பது, தொழுகையில் வாசிக்கப்படும் போது செவி தாழ்த்தி கேட்பது யாவும் இறைநம்பிக்கையை பலப்படுத்தும்.

மேலும் வாசிப்பவருக்கும், கேட்பவருக்கும் நன்மை கிடைக்கும். திருக்குர்ஆனை பொருள் விளங்கி ஓதினாலும் நன்மை உண்டு. பொருள் விளங்காமல் ஓதினாலும் நன்மை உண்டு. சரளமாக ஓதினாலும், திக்கித்திணறி ஓதினாலும் நன்மை உண்டு.

‘எவர் ஒருவர் இந்த இறைவேதத்திலிருந்து ஒரு எழுத்தை வாசிக்கிறாரோ அவருக்கு அதனால் ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மைக்கு அதுபோன்று பத்து மடங்கு நன்மை கிடைக்கும். அலிப், லாம், மீம் ஒரு எழுத்து என்று கூறமாட்டேன். இதில் அலிப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்து ஆகும். (இதை வாசிக்கும் போது முப்பது நன்மைகள் கிடைக்கும்) இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: திர்மிதி)

‘குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள், வாய் மூடுங்கள், நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்’. (திருக்குர்ஆன் 7:204)

‘எவர் இறைவேதமாகிய திருக்குர் ஆனிலிருந்து ஒரு வசனத்தை செவி மடுக்கிறாரோ அவருக்கு பன்மடங்கு நன்மை எழுதப்படுகிறது. எவர் திருக்குர்ஆனை வாசிக்கிறாரோ அது அவருக்கு மறுமையில் ஒளிமயமாக ஆகிவிடுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: அஹ்மது)

ஒருவர் குர்ஆனை வாசித்தாலோ, அல்லது ஒருவர் வாசிப்பதை பிறர் செவிமடுத்தாலோ அத்தகைய இரு வருக்கும் இறைநம்பிக்கை மென்மேலும் அதிகரிக்கும்.

நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் ஆரம்பத்தில் இஸ்லாமிய கொள்கையை போதிக்கும் போது ஆரம்பமாக இறைவேதமான திருக்குர்ஆனைத்தான் வாசித்துக் காட்டுவார்கள். அதன் ஒலி வடிவம் கேட்டு, அதன் அழகிய, ஆழமான, கவர்ச்சியான கருத்துருவாக்கத்தால் ஈர்க்கப்பட்டு, இசைந்து இதயப்பூர்வமாக பலர் இஸ்லாத்தில் இணைந்தனர். இறைநம்பிக்கையை ஏற்றனர். மற்றும் சிலர் அதன் ஒலி வடிவத்தை கேட்டு, இஸ்லாத்தில் இணைந்து விடக் கூடாது என்பதற்காக தமது காதுகளில் பஞ்சை அடைத்து திரிந்தனர். அதையும் தாண்டி அதன் ஒலி அவர்களின் உள்ளத்தில் ஊடுருவி அவர்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தது.

இஸ்லாத்தின் இரண்டாம் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்து, அதில் இணைய வைத்ததே பின்வரும் திருக்குர்ஆனின் அழகிய திருவசனங்களை செவிதாழ்த்தி கேட்டதுதான்.

‘நான்தான் அல்லாஹ் (இறைவன்). என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எனவே என்னை வணங்குவீராக, என்னை நினைப்பதற்காக தொழுகையை நிலை நாட்டுவீராக’. (திருக்குர்ஆன் 20:14)

‘நம்பிக்கை கொண்டோர் யாரெனில் இறைவனைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறை வனையே சார்ந்திருப்பார்கள்’. (திருக்குர்ஆன் 8:2)

இஸ்லாம் வாசிப்புக்கு அதிமுக்கியத்துவம் வழங்கியுள்ளது. இறைவேதமான திருக்குர்ஆன் வாசிப்பதை இறைநம்பிக்கை சார்ந்த விஷயமாக அது பாவிக்கிறது. நபிமொழிகளை வாசிப்பதும் இறைநம்பிக்கை என்று சொல்ல முடியும். இதன் தொடர்ச்சியாக இறைநம்பிக்கையூட்டும் மார்க்க சம்பந்தப்பட்ட, இஸ்லாமிய ஆன்மிக சம்பந்தப்பட்ட அனைத்து நூல்களையும் வாசிப்பது நாவு சார்ந்த இறைநம்பிக்கை ஆகும்.

வாசிப்பு விஷயத்தில் நாம் தேர்ந்தெடுக்கும் அணுகுமுறை வைத்துதான் அது இறை நம்பிக்கை சார்ந்ததா? இல்லையா? என்பதை தீர்மானிக்க முடியும். மார்க்கத்திற்கு முரணான, ஆபாசமான, பாவகரமான, பயங்கரமான வாசிப்புகள் யாவும் ஒருவரை இறைநிராகரிப்பில் தள்ளிவிடும். இத்தகைய வாசிப்புகளைத் தவிர்த்து மற்ற வாசிப்புகள் யாவும் இஸ்லாத்தின் பார்வையில் வரவேற்கப்பட வேண்டியவைகள்தான்.

இறைவேதமான திருக்குர்ஆனில் முதன்முதலில் இடம்பெற்ற திருவசனம் வாசிப்பு குறித்துதான் என்பது கவனிக்கத்தக்கது.

‘(முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக. அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக, உமது இறைவன் கண்ணியமானவன்’. (திருக்குர்ஆன் 96:1,2,3)

வாசிப்பு என்பது கல்வியின் வாசலாக உள்ளது. வாசிப்பு ஒருவரின் சிந்தனைத் திறனை அதிகரிக்கச் செய்கிறது. வாசிப்பு ஒருவனை அறிஞனாக, கவிஞனாக, ஆசானாக, விஞ்ஞானியாக, ஆன்மிகவாதியாக, பண்பட்ட மனிதனாக மாற்றிவிடுகிறது. அதிலும், குறிப்பாக குர்ஆனை வாசிப்பவர் இறைநேசராக மாறிவிடுகிறார். அவர் இறைவனின் அருளில் நிழல் பெறுகிறார்.

இறை நம்பிக்கையாளர்களில் திருக்குர்ஆனை வாசிப்பவர் எத்தனை பேர்? எத்தனையோ இஸ்லாமியர்களின் இல்லங்களில் அலமாரியில் அழகு சாதன பொருட்களின் வரிசையில் திருக்குர்ஆன் திறக்கப் படாத, வாசிக்கப்படாத அழகு சாதனமாக காட்சிப் படுத்தப்படுகிறது.

இன்னும் சில இறைநம்பிக்கையாளருக்கு வாசிக்கவே தெரியாது. சிலருக்கு வாசிக்கத் தெரிந்தாலும் வாசிப்பதும் கிடையாது. திருக்குர்ஆனை தினம் தினம் ஒரு வசனமாவது வாசிக்க வேண்டும். அதன் கருத்தை உணர்ந்து வாசிக்க வேண்டும். அது கூறும் கூற்றுப்படி வாழ்வை அமைத்திட வேண்டும்.

‘திருக்குர்ஆனை வாசித்து, அதன்படி செயல்படக்கூடிய இறை நம்பிக்கையாளர் எலுமிச்சை போன்றவர்; அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று. திருக்குர்ஆனை ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருபவர், பேரீச்சம்பழம் போன்றவர். அதன் சுவை நன்று; ஆனால், அதற்கு மணமில்லை. திருக்குர்ஆனை ஓதுகிற நயவஞ்சகனின் நிலை துளசிச் செடியின் நிலைக்கு ஒத்துள்ளது. அதன் வாசனை நன்று; அதன் சுவை கசப்பானது. திருக்குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலை குமட்டிக்காய் போன்றது. அதன் சுவையும் கசப்பு; அதன் வாடையும் வெறுப்பானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூமூஸா (ரலி), நூல்: புகாரி)

‘ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ‘குர்ஆனை எனக்கு வாசித்துக் காட்டுங்கள்’ என்று கூறினார்கள். நான், ‘தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் வாசித்துக்காட்டுவதா?’ என்று கேட்டேன். ‘பிறரிடமிருந்து அதை நான் செவியேற்க விரும்புகிறேன்’ என்று கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னுமஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி)

‘குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக’. (திருக்குர்ஆன் 73:4)

திருக்குர்ஆனை தினமும் ஓதவேண்டும். திருத்தமாக ஓதவேண்டும். அதிகமாகவும் ஓதவேண்டும்.

பாத்திமா (ரலி) அவர்கள் கூறியதாவது: “எனது தந்தை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ‘ரகசியமாக, வானவர் ஜிப்ரீல் (அலை) என்னை ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை குர்ஆனை ஓதச் செய்து வந்தார்கள். இந்த ஆண்டு மட்டும் அவர்கள் என்னை இரு முறை அதை ஓதச் செய்தார்கள். என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்துவிட்டதைக் குறிப்பதாகவே அதை நான் கருதுகிறேன்’ என்று தெரிவித்தார்கள்”. (நூல்: புகாரி)

‘திருக்குர்ஆனை ஓதுங்கள். ஏனெனில் அது நாளை மறுமைநாளில் அதனுடையவர்களுக்கு சிபாரிசு செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஉமாமா (ரலி), நூல்: முஸ்லிம்)

திருக்குர்ஆனை ஓதும்போது சில ஒழுக்கங்களை பேணி ஓத வேண்டும். அவை:

1) சுத்தமாக இருந்து, தொழும் திசையை நோக்கி அமர்ந்து மரியாதையுடன் ஓத வேண்டும், 2) ஓதும் முறையை பேணி, நிதானமாக, இனிமையாக ஓத வேண்டும், 3) முகஸ்துதி, பிறருக்கு இடையூறு ஏற்படும் என்ற சந்தேகம் வருமாயின் மெதுவாக ஓத வேண்டும், இல்லையென்றால் சப்தமாக ஓதலாம், 4) இந்த வேதத்தின் மகத்துவத்தை மனதால் புரிந்து ஓத வேண்டும், 5) வேதத்தை வழங்கிய இறைவனின் பெருமை, தூய்மை, உயர்வு ஆகியவற்றை மனதில் நிலைநிறுத்தி ஓத வேண்டும்,

6) ஊசலாட்டங்கள், சந்தேகங்கள் ஆகியவற்றிலிருந்து மனதை தூய்மையாக்கி ஓத வேண்டும், 7) கருத்துகளை உணர்ந்து ஓத வேண்டும், 8) வசனங்களின் கருத்துகளுக்கு தக்கபடி அருள் கூறும் வசனம் ஓதும்போது மனமகிழ்ச்சியும், தண்டனைகள், எச்சரிக்கைகள் குறித்து வரும் போது மனம் நடுங்கவும் வேண்டும், 9) இறைவனுடன் பேசுகிறோம் என்ற முறையில் கவனமாக ஓத வேண்டும், 10) சிரசை தாழ்த்துமாறு வசனம் வரும் போது சிரசை தாழ்த்த வேண்டும். இவ்வாறு ஓதும்போது இறைநம்பிக்கை அதிகமாகும், 11) திருக்குர்ஆனை ஓதும்போது ‘அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்’ என்று கூறி தொடங்க வேண்டும்.

(நம்பிக்கை தொடரும்)

Next Story