பைபிள் கூறும் வரலாறு : நாகூம்
‘நா கூம்’ என்பதற்கு ‘ஆறுதல்’ என்று பொருள். ‘நெகேமியா’ எனும் பெயருக்குப் பதிலாக சுருக்கமாக ‘நாகூம்’ என வைப்பதும் அக்கால வழக்கம். இது வெறும் மூன்று அதிகாரங்கள் அடங்கிய மிகச் சிறிய நூல்.
நாற்பத்து மூன்று வசனங்கள், 1285 வார்த்தைகள் என சட்டென வாசித்து முடிக்கக் கூடிய நூல் இது. இறைவாக்கினர் நாகூமுக்கும், இறைவாக்கினர் யோனாவுக்கும் சில நெருங்கிய தொடர்புகள் உண்டு. இருவருமே வட நாடான இஸ்ரேலில் உள்ளவர்கள்.
இருவருமே இறைவனால் அழைக்கப்பட்டவர்கள். இருவருமே நினிவே நகரத்துக்குச் செல்ல அனுப்பப்பட்டவர்கள். நினிவே, அசீரியாவின் தலைநகர்.
நினிவே மக்கள் பாவிகளாக இருந்ததால் எச்சரிக்கைக் குரலாக யோனா சென்றார். அப்போது மக்கள் மனம் திரும்பினார்கள். எனவே இறைவன் அந்த நாட்டை அழிக்காமல் மன்னித்து விட்டார்.
அதன் பின் மீண்டும் அசீரியா பாவத்தின் வழிகளில் நடக்கத் தொடங்கியது. யோனாவுக்குப் பின் நூறு ஆண்டுகள் கடந்தபின் நாகூம் அங்கே இறைவாக்குரைத்தார். அதற்கும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் நினிவே நகர் அழிந்தது. அதாவது, யோனா இறைவாக்குரைத்தபின் 150 ஆண்டுகளில் நினிவே இறைவனின் கோபப்பார்வையால் அழிந்தது.
அசீரியர்களின் ஆட்டம் இஸ்ரேலுக்கும், யூதாவுக்கும் எதிரானதாக இருந்தது. ஒரு முறை இஸ்ரேலுக்கு எதிராக வந்த அசீரியர்கள் 1,85,000 பேரை கடவுளின் தூதர் ஒரே இரவில் வெட்டிச் சாய்த்திருந்தார். இருந்தாலும அசீரியா திருந்தவில்லை.
நாகூம் இறைவாக்குரைத்தது தான் நினிவேயின் கடைசி சாவு மணி. நினிவேவுக்குக் கடவுள் கொடுத்திருந்த மன்னிப்பின் காலம் முடிந்து விட்டிருந்தது. கடவுளின் கோபம் கொழுந்து விட்டெரிந்த காலம் அது. கடவுளின் கோபத்தை எதிர்கொள்ள யாராலும் முடியாது. அப்படிப்பட்ட கோபம் எழுகையில், ‘நிலமே எங்களை விழுங்கி விடு’ என மக்கள் கதறுவார்கள் என திருவெளிப்பாடு நூல் கூறு கிறது.
இப்போது நினிவே மன்னன் மனம் திரும்ப வாய்ப்பே கொடுக்கப்படவில்லை. ‘உனது புண் ஆறாது. உன் காயத்துக்கு மருந்தில்லை’ என நினிவேயின் அழிவை தீர்க்கமாக உரைக்கிறார் நாகூம். அசீரியர்களின் அழிவு பிற மக்களுக்கான நற்செய்தியாக மாறும் என்பதை அவரது இறைவாக்கு தெளிவாக்குகிறது.
நினிவே அழியும் எனும் இறைவார்த்தையை அப்போது யாரும் நம்பியிருக்க வாய்ப்பில்லை. காரணம் உலகின் வலிமை மிகுந்த சாம்ராஜ்யமாக அது நிலைபெற்றிருந்தது. நகர் மிகப்பெரிய மதில் சுவர்களால் கட்டிப் பாதுகாக்கப் பட்டிருந்தது. அந்த மதிலின் மேல் பாகம் மூன்று தேர்கள் ஒரே நேரத்தில் சீறிப் பாயுமளவுக்கு அகலமாய் இருந்தது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
அந்த மதில் சுவரைச் சுற்றி நூற்று ஐம்பது அடி அகலமும், அறுபது அடி ஆழமும் உடைய அகழி வெட்டப்பட்டிருந்தது. எதிரிகள் நுழையவே முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தன. அப்படியே நினிவே முற்றுகையிடப்பட்டாலும் சுமார் இருபது ஆண்டுகள் வரை மக்கள் உயிரைக் காத்துக்கொள்ளுமளவுக்கு பொருட்கள் நகரிலேயே இருந்தன.
மனிதன் என்ன தான் பாதுகாப்பாய் இருந்தாலும், இறைவனின் கோபத்துக்கு முன் எதுவுமே ஒன்றுமில்லை. இறைவாக்கு நிறைவேறியது. நினிவே அழிந்தது.
‘உடைத்துக்கொண்ட குளம்போல ஆனது நினிவே நகர்’ எனும் நாகூம் வாக்குக்கிணங்க, நதி பெருக்கெடுத்து நகரின் மதிலை உடைத்தது. பாபிலோனியர்கள் நுழைந்தனர். நகரை தீக்கிரையாக்கினர். கி.மு. 612-ல் நகர் அழிந்து சாம்பலானது. அதன் பின் அது கட்டியெழுப்பப்படவே இல்லை. இன்று அது பாலை நிலமாய் இருக்கிறது. கி.பி. 1820-ல் இந்த இடத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர் என்கிறது வரலாற்றுப் பதிவு.
மிகுந்த இலக்கியச் சுவை வாய்ந்த இந்த நூல் கவிதை நடையில் அமைந்துள்ளது. முதல் அதிகாரம் ‘அக்ரோஸ்டிக்’ எனப்படும் எபிரேய எழுத்து வரிசையில் அமைந்த கவிதை. யூதாவின் மகிழ்வையும், நினிவேயின் அழிவையும் இது மாறி மாறி பதிவு செய்து கொண்டே பயணிக்கிறது. முதல் அதிகாரத்தை அறிவித்தல், அல்லது பிரகடனப்படுத்துதல் எனலாம்.
இரண்டாவது அதிகாரம், நினிவேயின் அழிவு எப்படி நடக்கும் என்பதை மிகத் துல்லியமாகப் பதிவு செய்கிறது. எதிர்காலத்தில் நடக்கப் போகும் அழிவை நாகூம் தூய ஆவியின் வெளிப்படுத்தலால் மிகத் தெளிவாகக் கண்டு எழுது கிறார்.
மூன்றாவது அதிகாரம் ஏன் இந்த அழிவு என்பதை விளக்கக் கூடியதாக அமைகிறது. மனிதநேயமற்ற அசீரியாவின் செயல்களே அதன் அழிவுக்குக் காரணமாய் அமையும் என அறுதியிட்டுச் சொல்கிறார் நாகூம்.
நினிவேவுக்கு இறைவாக்கு உரைக்கச் சென்ற நாகூம் அதன் பின்னர் நாடு திரும்பவில்லை. அவர் அங்கேயே இறந்து அடக்கம் செய்யப்பட்டார். நாகூம் இறைவாக்கினரின் பெயரால் ஒரு ஊர் அழைக்கப்படுகிறது. அது தான் ‘கப்பர் நாகூம்’. ‘கப்பர்’ என்பதற்கு ‘கிராமம்’ என்பது பொருள். ‘நாகூர் கிராமம்’ என்பதே ‘கப்பர் நாகூம்’. அங்கே தான் இறைமகன் இயேசு போதித்துத் திரிந்தார் என்பது நாம் அறிந்த செய்தி.
(தொடரும்)
Related Tags :
Next Story