நபிகளாரின் தியாக வாழ்வு


நபிகளாரின் தியாக வாழ்வு
x
தினத்தந்தி 30 Aug 2019 11:58 AM GMT (Updated: 30 Aug 2019 11:58 AM GMT)

இஸ்லாமிய ஆண்டுக்கு ‘ஹிஜ்ரி ஆண்டு’ என்று பெயர். இச்சொல் ‘ஹிஜ்ரத்’ என்ற மூலச்சொல்லில் இருந்து முளைத்ததாகும்.

‘ஹிஜ்ரத்’ என்ற இந்த அரபுச்சொல்லுக்கு ‘இடம் மாறுதல்’, ‘புலம் பெயர்தல்’, ‘ஊர் விட்டு ஊர்செல்லுதல்’, ‘குற்றங்களை களைதல்’, ‘பாவங்களை விட்டுவிடுதல்’, ‘தீமைகளை வெறுத்தல்’ என்றெல்லாம் பொருள் பல உண்டு.

இஸ்லாமிய ஆண்டின் பொதுப்பெயருக்கே இவ்வளவு அர்த்தங்கள் இருக்கும் என்றால் அது தோன்றிய வரலாறும் எவ்வளவு முக்கியத்துவமிக்கதாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம். அந்த வரலாறை அறிந்துகொள்வோம் வாருங்கள்...

அது உமர்(ரலி)யின் உன்னதமான ஆட்சிகாலம். கடிதங்கள் பல திசைகளிலிருந்து வருவதும், போவதுமாய் இருந்தன. அன்றொருநாள் கூஃபா நகரின் ஆளுநர் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்து கடிதம் ஒன்று வந்திருந்தது.

அதில் இப்படி எழுதப்பட்டிருந்தது: ‘ஆண்டுக்கணக்கு என்று எதுவும் நம்மிடம் இல்லாமல் இருப்பதால், அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகள் எதுவும் அது எந்த வருடம் நிகழ்ந்தது என்று தெரியாமல் அனைவரையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்திவிடுகிறது. எனவே, விரைவாக தாங்கள் இதற்கு நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’.

இதன் அடிப்படையில் ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களின் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், நபிகளார் பிறந்த தினம், மரணித்த தினம், நபி பட்டம் பெற்ற தினம், நபி ஹிஜ்ரத் செய்த தினம் என நபிகளாரின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு திருப்புமுனை தினங்கள் முன் மொழியப்பட்டு, இவற்றில் ஏதோ ஒன்றை நாம் தேர்வு செய்து அந்த நாளிலிருந்து நமது இஸ்லாமிய ஆண்டைத் தொடங்கலாமே என ஆலோசிக்கப்பட்டது.

அப்போது அவற்றில் அலி (ரலி) அவர் களின் கருத்தான ‘ஹிஜ்ரத் தினம்’ ஏக மனதுடன் தேர்வாகி அன்று முதல் இந்த ‘ஹிஜ்ரி ஆண்டு’ என்ற சொல் அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் உச்சரிப்புப் பெறத் தொடங்கிற்று. நபிகளார் மரணித்து சுமார் பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஹிஜ்ரியாண்டு உருவானது.

‘அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை, முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதர்’ என்ற திருவாசகத்தை நீங்கள் மனப்பூர்வமாக ஏற்று வாழ வேண்டும் என்று மக்கா நகரத்து மக்களிடம் நபி களார் சொன்னபோது, தினம் ஒரு தெய்வம் என்று வாழ்ந்து வந்த மக்காவாசி களால் அவ்வளவு சீக்கிரம் இக்கோட்பாட்டை மனதார ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதன் எதிர் விளைவாகத் தான் நபி களார், அவர்கள் பிறந்த ஊரிலிருந்தே விரட்டப்பட்டார்கள். அப்போது அவர்கள் அடைக்கலம் தேடி பயணப்பட்ட ஊர் தான் மதீனா. நபிகளாரின் அந்த புனிதப் பயணத்திற்குத் தான் ‘ஹிஜ்ரத்’ என்று பெயர். இது குறித்து திருக்குர்ஆன் வசனம் இவ்வாறு குறிப்பிடுகிறது:

‘இன்னும் எவர் அல்லாஹ்வின் பாதையில் நாடு கடந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் பெற்றுக்கொள்வார்; இன்னும், தம் வீட்டை விட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால், அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது. மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், பேரன்பு மிக்கவனாகவும் இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 4:100)

‘ஹிஜ்ரத்’ என்பது ஊர் விட்டு ஊர் செல்வதில் மட்டும் இல்லை. நாம் நமது அன்றாடப்பாவங்களை முற்றிலும் விட்டொழிப்பதிலும் இருக்கிறது என்கிறது இந்த நபிமொழி:

‘எவர் சின்னச்சின்ன குற்றங்களை, பாவங்களை விட்டு விடுகிறாரோ அவரே ஹிஜ்ரத் செய்தவராவார்’. (நூல்: மிஷ்காத்)

நாயகத் தோழர் ஒருவர் கேட்டார்: ‘தூதரே! ஹிஜ்ரத்தில் சிறந்தது எது?’

‘உன் ரப்பு உனக்கு எதை வெறுத்திருக்கிறானோ அதை நீயும் வெறுத்து விடு’ என்று பதிலளித்தார்கள் நபி (ஸல்) அவர்கள். (நூல்: அஹ்மது)

உங்களில் எவர் தீமையைக் காண் கிறாரோ முதலில் அவர் அதை தமது கையால் தடுக்கட்டும். இயலாவிடில் தன் நாவால் தடுக்கட்டும். அதற்கும் இயலவில்லையெனில், மனதளவில் வருத்தப் படட்டும். இதுதான் ஈமானின் மிகப்பலவீனமான நிலையாகும். இந்த நபிமொழி நமக்கான நல்வழியை அவரவர் சக்திக்கு ஏற்ப செயல்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறது.

இன்னொரு முக்கியச் செய்தியும் நமக்கு இன்னொரு நபிமொழியில் இப்படி இருக்கிறது:

‘எவர் குழப்பமான காலங்களில் நன் முறையில் வணக்கம் புரிகிறாரோ, அவர் என்னை நோக்கி ஹிஜ்ரத் செய்தவர் போன்றவர் ஆவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

‘இபாதத்’ (வணக்கம்) என்பது ஹஜ், ஜகாத், நோன்பு, தொழுகை மட்டுமல்ல. அதையும் தாண்டி நாம் செய்யும் எந்தவொன்றும் அது அந்த அல்லாஹ், ரசூலுக்கு விருப்பமானதாக, கட்டுப்பட்டதாக இருக்கும் நிலையில் நிச்சயம் அதுவும் ஒரு இறைவணக்கம் தான்.

‘புன்முறுவல் பூப்பது கூட ஒரு தர்மம்’ என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். இந்தச்செயல் வெளித்தோற்றத்தில் சிறியது தான். என்றாலும் அதன் உள் வீரியம் அழுத்தமானது; வணக்கம் என்ற நிலையில் வைத்துப் பார்க்கத்தக்கது என்ற செய்தியை இந்த நபி மொழி நமக்கு நன்கு தெரிவிக்கிறது.

‘ஹிஜ்ரத்’ என்பது வெறும் ஒரு இஸ்லாமியப் புத்தாண்டின் தொடக்கம் மட்டுமல்ல, அது ஒரு தியாகத்தின் தொடக்கம். அதனால் தான் ஆண்டின் ஆரம்பத்திலேயே நோன்பு வைக்கச் சொல்கிறது இனிய இஸ்லாம். அதற்கு ‘முஹர்ரம் நோன்பு’, ‘ஆசூரா நோன்பு’ என்று பெயர். ‘புத்தாண்டில் நீ புத்தம் புது சந்தோஷங்களோடு இருக்கலாம், அது தவறல்ல. ஆனாலும் நீ உன்னைச் சுற்றியுள்ள ஏழைகளின் பசியை என்றைக்கும் மறந்து விடாதே’, என்பது தான் அந்த நோன்பின் அடிப்படைத் தத்துவம். அதை நாம் என்றைக்கும் மறந்து விடக்கூடாது.

குறிப்பாக, ‘ஹிஜ்ரத்’ என்பதே நபிகளாரின் தியாக வாழ்க்கையைத் தானே முன்னிறுத்துகிறது. அந்த தியாகத்தை என்றைக்கும் நாம் நினைவு கூறிக்கொண்டே இருக்கவேண்டும். அதுவும் உடல், பொருள், ஆவி (உயிர்) என நம்மிடம் இருப்பவற்றில் இருந்தெல்லாம் தியாகம் செய்துகொண்டேயிருக்க வேண்டும். காரணம் நம்மிடம் இருப்பவை யாவுமே உண்மையில் நம்முடையதல்லவே. எல்லாம் அவனுடையது தானே. அவனுடையவைகளை அவனுக்காக கொடுப்பதில் நமக்கென்ன தயக்கம். அத்தகைய தியாகப்பண்பும், ஈகைத் தனமும், துறவு நிலையும் நமக்குள் வராதவரை நமது ஹிஜ்ரி வருடங்கள் அர்த்தமற்றவை தான்.

மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.

Next Story