பொறுப்பாளர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது...


பொறுப்பாளர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது...
x
தினத்தந்தி 21 Nov 2019 12:51 PM GMT (Updated: 21 Nov 2019 12:51 PM GMT)

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70- க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘பொறுப்பாளர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது’ குறித்த தகவல்களை காண்போம்.

ஒருவரின் பொறுப்பிலும், அவரின் பராமரிப்பிலும், மற்றொருவர் வாழும்போது அவர் தமது பொறுப்பாளர்களுக்கு அவசியம் கட்டுப்பட்டுதான் நடக்க வேண்டும். இவ்வாறு கட்டுப்பட்டு நடப்பது இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.

இறைவனுக்கோ, இறைத்தூதருக்கோ கட்டுப்பட்டு நடப்பது மட்டும் இறைநம்பிக்கை அல்ல. அவ்விருவரையும் தாண்டி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவருக்கும் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.

இறைவனுக்கு நாம் அடியார்கள் எனும் விஷயத்தில் இறைவன் இட்ட கட்டளைக்கு, அவன் வகுத்த கடமைகளுக்கு, அவன் தடுத்த நடவடிக்கைகளுக்கு நாம் முழுமையாக அடிபணிந்து வருகிறோம்.

இறைவனின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் நாம் கட்டுப்பட்டு நடக்கிறோம். அவர், இறைசெய்திகளை மக்களுக்கு எடுத்துக்கூறி இப்படித்தான் நடக்க வேண்டும் என்கிறார். அவர் முழு மனித குலத்திற்கு வழிகாட்டி என்ற அடிப்படையில் அவர் காட்டிய நேரான வழியில் நாம் வெற்றி நடைபோடுகிறோம். இவ்வாறு மற்றவர்களுக்கும் அவர்கள் வகிக்கும் பொறுப்புகளின் கீழ் கட்டுப்பட்டு பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். இதை இறைவனே ஆதரித்து திருக்குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகிறான்:

‘இறைவனுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; உங்களில் பொறுப்பு(ம் அதிகாரமும்) உடையோருக்கும் கீழ்ப்படியுங்கள்’. (திருக்குர்ஆன் 4:59)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எனக்குக் கீழ்ப்படிந்தவர் இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவராவார். எனக்கு மாறுசெய்தவர் இறைவனுக்கு மாறுசெய்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்கு மாறுசெய்தவர் எனக்கு மாறுசெய்தவராவார்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

‘உலர்ந்த திராட்சை போன்ற (சுருங்கிய) தலையுடைய அபிசீனிய (கருப்பு நிற) அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் (அவரின் சொல்லைக்) கேளுங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

ஒரு பொறுப்புக்குத் தலைமை தாங்குபவர் அவர் பெரிய மனிதராக இருக்க வேண்டிய அவசியமில்லை. சொல்வாக்கு, செல்வாக்கு, பணபலம், மக்கள் பலம் பெற்று விளங்கியவராக இருக்க வேண்டிய கட்டாயமும் கிடையாது.

விளிம்பு நிலையில் இருக்கும் ஒருவர் தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்பட்டாலும் அவர் வகிக்கும் பொறுப்புக்கு, அவருக்குக் கீழ் இயங்குபவர்கள் கீழ்ப்படிந்தே ஆக வேண்டும். அவர் ஒரு கருப்பு நிற அடிமையாக இருந்தாலும் சரியே.

இறைவனுக்கு மாறுசெய்யும்படி தலைமை அறிவிக்கும் போது அந்த விஷயத்தில் மட்டும் எந்தத்தலைமைக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

இது அல்லாத மற்ற விஷயங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான, விருப்பமில்லாத விஷயங்களாக இருந்தாலும் தலைமையின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

‘இறைவனுக்கு மாறுசெய்யும்படி கட்டளையிடப்படாத வரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும், விருப்பமில்லாத விஷயத்திலும் தலைமையின் கட்டளையைச் செவியேற்பதும், அதற்குக்கீழ்ப்படிவதும் கடமையாகும். இறைவனுக்கு மாறுசெய்யும்படி கட்டளையிடப்பட்டால் அதைச்செவியேற்பதோ, அதற்குக் கட்டுப்படுவதோ கூடாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

தலைமைக்கு கட்டுப்படுவது என்பது நாட்டுத் தலைமையிலிருந்து வீட்டுத்தலைமை வரைக்கும் பொருந்தும். அரசியல் தலைமையில் ஆரம்பித்து ஆன்மிகத் தலைமை வரைக்கும் கீழ்ப்படிந்து நடப்பது இஸ்லாமிய கோட்பாடாகவும், இறைநம்பிக்கையின் உடல் சார்ந்த செயல் திட்டமாகவும் அமைந்துள்ளது.

அதே சமயம் பொறுப்பாளர்கள் இறைவனுக்கு மாறுபுரியுமாறு தமக்குக் கீழ் உள்ளவர்களுக்கு கட்டளை பிறப்பித்தால், இவர்கள் தங்களின் பொறுப்புகளுக்கு அப்பால் தலையிடுவதாக அர்த்தம். இந்த தலையீடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை. அவை பெற்றோரின் புறத்திலிருந்து வந்தாலும் சரி. மற்றவர்களின் புறத்திலிருந்து வந்தாலும் சரி.

இதுகுறித்த திருக்குர்ஆன் வசனம் வருமாறு:

“தனது தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து(க் கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள். (பிறந்த) பிறகும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவனுக்குப் பால் மறக்கடித்தாள். ஆகவே, நீ எனக்கும் நன்றி செலுத்து; உன்னுடைய தாய் தந்தைக்கும் நன்றி செலுத்து. முடிவில் நீ நம்மிடமே வந்து சேர வேண்டியதிருக்கின்றது”.

“எனினும், (இறைவன் என்று) நீ அறிந்துகொள்ளாத யாதொரு பொருளை எனக்கு இணைவைக்கும்படி அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ் விஷயத்தில்) நீ அவர்களுக்கு வழிபட வேண்டாம். ஆயினும், இவ்வுலக விஷயத்தில் நீ அவர்களுக்கு (நீதமாக) உதவி செய்து (அன்பாக) நேசித்துவா. எவ்விஷயத்திலும் என்னையே நோக்கி நிற்பவர்களின் வழியை நீ பின்பற்றி நட. பின்னர், நீங்கள் அனைவரும் நம்மிடமே வரவேண்டியதிருக்கின்றது. நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி அச்சமயம் நான் உங்களுக்கு அறிவுறுத்துவேன்” (என்று கூறினோம்). (திருக்குர்ஆன் 31:14,15)

மேற்கூறப்பட்ட வசனம் நபித்தோழர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் சம்பந்தமாக இறங்கியது. அதுகுறித்து அந்த நபித்தோழர் கூறியிருப்பதாவது:

‘என் தாயார் உம்முசஅத், நான் எனது இஸ்லாமிய மார்க்கத்தை நிராகரிக்காத வரை என்னுடன் பேசமாட்டேன்; உண்ணமாட்டேன்; பருகமாட்டேன் என சத்தியம் செய்துவிட்டார். மேலும், அவர் ‘உன் பெற்றோரிடம் நீ நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு இறைவன் உன்னை அறிவுறுத்தியுள்ளான் என்று நீ கூறுகிறாய். நான் உன் தாய். நான் தான் இந்த மார்க்கத்தை கைவிடுமாறு கட்டளையிடுகின்றேன். அதற்கு நீ கட்டுப்பட வேண்டும்’ என்று கூறினார். இவ்வாறு என் தாய் மூன்று நாட்கள் உண்ணாமலும், பருகாமலும் இருந்து பசியால் மயக்கமுற்றுவிட்டார். அப்போது உமாரா எனப்படும் அவரின் மகன் எழுந்து அவருக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் குடித்தார். அப்போது என் தாய் எனக்கெதிராகப் பிரார்த்தித்தார். அந்த வேளையில் இந்த இறைவசனம் இறங்கியது’. (நூல்: முஸ்லிம்)

“ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தமது தாயாரின் நிலைகண்டு, ‘என் தாயே! நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு நூறு உயிர்கள் இருந்து, அதிலிருந்து ஒவ்வொரு உயிராக நீங்கள் வெளியேற்றினாலும் இதற்காக நான் ஒரு போதும் இஸ்லாமிய மார்க்கத்தை விடமாட்டேன். நீங்கள் நாடினால் சாப்பிடுங்கள்; அல்லது சாப்பிடாமல் போங்கள்’ என்றார். பிறகு அவரின் தாயார் தமது நிலையிலிருந்து பின்வாங்கி சாப்பிட்டார்”. (அறிவிப்பாளர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), நூல்: தப்ரானீ).

கீழ்ப்படிதல் என்பது எவ்வாறு இருக்கவேண்டும் என்று நபிகளார் கூறியதாக அலீ (ரலி) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி, அவர்களுக்கு அன்சாரித்தோழர்களில் ஒருவரைத் தளபதியாக்கி, அவருக்குக் கட்டுப்பட்டு நடக்கும்படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

அந்த அன்சாரித் தளபதி ஒரு கட்டத்தில் படைவீரர்களின் மீது கோபம் கொண்டு, ‘நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லையா?’ என்று கேட்டார். அவர்கள் ‘ஆம்’, என்றனர்.

அவர், ‘விறகுகளைச் சேகரித்து, நெருப்பை மூட்டி அதில் புகுந்து விடும்படி உங்களுக்கு நான் உத்தரவிடுகிறேன்’ என்றார். அவ்வாறே அவர்கள் விறகுகளைச் சேகரித்து நெருப்பை மூட்டினர்.

அதில் நுழைய நினைத்த போது ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றனர். அவர்களில் ஒருவர், ‘(நரக) நெருப்பிலிருந்து தப்பிக்கத்தானே நாம் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றினோம். அவ்வாறிருக்க, அதில் நாம் நுழைய வேண்டுமா?’ என்று கேட்டார். இதற்கிடையே நெருப்பும் அணைந்தது; அவரின் கோபமும் தணிந்தது.

பிறகு நபிகளாரிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அதில் மட்டும் அவர்கள் புகுந்திருந்தால் அதிலிருந்து ஒரு போதும் வெளியேறியிருக்க மாட்டார்கள்; கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்’ என்றார்கள். (நூல்: புகாரி)

நன்மையான காரியங்களில் மட்டும்தான் பொறுப்பாளர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும், கட்டுப்பட்டு நடக்க வேண்டும். தீமையான காரியங்களில், இணைவைப்பான செயல்களில், கெடுதலான விஷயங்களில் யாரும் யாருக்கும் கட்டுப்பட வேண்டியதில்லை.

(நம்பிக்கை தொடரும்)

Next Story