இளைஞருக்கான இறைவனின் அழைப்பு


இளைஞருக்கான இறைவனின் அழைப்பு
x
தினத்தந்தி 14 Feb 2020 9:52 AM GMT (Updated: 14 Feb 2020 9:52 AM GMT)

எந்த ஒரு மாற்றத்துக்கும் விதையாக இருப்பவர்கள் இளைஞர்களே. சரியான சிந்தனைகளை, சரியான செயல்களோடு செயல்படுத்தும் இளைஞர்களே இல்லத்தையும், நாட்டையும் கட்டியெழுப்புகின்றனர்.

பணிவாழ்வில் நுழைந்த போது இயேசு ஒரு இளைஞர். அவரது இளமை துடிப்பும் கடவுளின் அருளும் அவர் நினைத்த காரியங்களை வெற்றியோடு முடிக்க வழிவகுத்தன. அவர் தனது விண்ணகத் தந்தையோடு எப்போதும் செபத்தில் நிலைத்திருந்தார். மண்ணகப் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்திருந்தார்.

இப்போதைய காலக்கட்டத்தில் தெய்வபக்தி உடைய இளைஞர்களை காண்பது அரிதாக மாறிவிட்டது. இளைஞர்கள் கடவுளைப் பின்பற்றுவதை விட்டு விட்டுப் பிரபலங்களைப் பின்பற்றுகிறார்கள். பெற்றோருக்குக் கீழ்ப்படியும் குணாதிசயமும் அவர்களிடம் குறைந்து வருகிறது. அவர்கள் உலகத்தின் வசீகரங்களுக்குக் கீழ்ப்படிகின்றனர்.

இரவில் உறங்கும் முன்பும் பகலில் எழுவதற்கு முன்பும் விவிலியத்தை வாசிப்பதற்கு பதிலாக சமூக வலைதளத்தில் நேரத்தை செலவு செய்கின்றார்கள். பெற்றோரோடு நேரம் செலவிடுவதற்கு பதிலாக ஸ்மார்ட்போன் செயலிகளோடு நேரத்தை செலவிடுகிறார்கள். இவையெல்லாம் இக்கால இளைஞர்கள் தம் வாழ்க்கையையும் நேரத்தையும் வீணான செயல்களில் செல வழிக்க வழிவகுக்கிறது.

இவையெல்லாம் அவர்களைத் தவறான வழிக்கும் அழைத்துச் செல்கின்றது. இயேசு இளைஞராக ஆன பின் அவரிடம் இருந்த அந்த வேகம் அவர் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற உதவியது. அந்த வேகமும் சிந்தனையும் நம்மிடமும் உள்ளது. அதை சரியான இடத்தில் ஒருமுகப்படுத்துகிறோமா என்பது தான் கேள்வி.

இன்றைக்கு, திருச்சபையின் மீது காட்டவேண்டிய ஈடுபாட்டை இளைஞர்கள் தேவையற்ற இடங்களில் காட்டுகின்றனர். அவை அவர்களுடைய ஆன்மிக வாழ்க்கைக்கோ, சமூக முன்னேற்றத்துக்கோ எந்த வகையிலும் உதவுவதில்லை. இவ்வுலகில் அன்பையும் அமைதியையும் பரப்ப வேண்டிய முக்கிய பொறுப்பு இளைஞர்களின் கைகளில் உள்ளது. ஏனெனில் இவ்வுலகம் இளைஞர்களால் நிரம்பி வழிகிறது.

இளைஞர்கள் சரியான பாதையில் வழி நடத்தப்பட்டால் கடவுள் விரும்பும் அமைதியின் இல்லமாக உலகம் மாறும் விவிலியம் வாசித்தல், தேவாலயத்தில் நேரம் செலவிடுதல், சுற்றாரோடு நல்ல உறவு கொண்டிருத்தல் ஆகியவற்றை கடைபிடித்தால் போர்களாலும் பிரிவினைகளாலும் சுக்குநூறாகியிருக்கும் இவ்வுலகம் சீராகும். காரணம் உறவுகளால் கட்டப்படும் எதுவும் அழிவதில்லை.

இறைவன் தன் படைப்புகள் அனைத்தையும் அர்த்தமுள்ளதாகவே படைத்துள்ளார். வெப்பத்தை தணிக்க மழை. இருளைப்போக்க சூரியன். அது போலவே மனிதனையும் படைத்துள்ளார். அதுவும் அவருடைய சாயலிலேயே படைத்துள்ளார் என்றால் கேட்கவா வேண்டும். அந்த மனிதனின் இளமைப் பருவம் மிகவும் முக்கியமானது.

இளமைக்காலத்தில் உடலிலும் மனதிலும் ஏற்படும் மாற்றங்கள் அவனது வாழ்க்கையைக் கட்டமைக்கின்றன. அந்தப் பருவத்தில் தான் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அந்த பருவத்தில் உள்ளவர்கள் கடவுளிடம் தங்களை முழுமையாக ஒப்பு கொடுத்துவிட்டால் அவர்கள் கவலைப்படு வதற்குரிய அவசியம் இல்லாமல் போய்விடும். முக்கியமான முடிவுகளை எடுக்கும் நேரத்தில் அவர்கள் பதற்றப்படவேண்டிய தேவையிருக்காது.

நாம் பெற்றோருக்கு நல்ல பிள்ளைகளாகவும், உடன்பிறப்புகளுக்கு நல்ல சகோதரன், சகோதரியாகவும், நண்பர்களுக்கு நல்ல தூண்டுகோலாகவும் விளங்க, இயேசு உதவுகின்றார். பல தடைகளையும் இன்னல்களையும் தாண்டி இளமைக்காலத்தை நல்ல முறையில் நாம் செலவிடவும் அவர் நமக்கு துணை செய்கின்றார்.

இறைமகன் இயேசு கொண்டிருந்த பொறுப்புணர்வு பெரியது. அவர் தனக்கு அடுத்துள்ள மக்கள் நல்ல நிலையை அடைய வேண்டும் என அயராது பாடுபட்டார். பிறரை மன்னித்தார். இன் றைக்கு பழிவாங்குதல் நமது வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. பாவம் செய்பவர்களை இறைவன் மன்னிக்காமல் இருந்தால் நரகத்தில் கூட இடமில்லாமல் போய் விடும். எவ்வளவு பாவம் செய்தாலும் கடவுளிடம் உருக்கமாக மன்றாடினால் அவர் நிச்சயம் நம்மை மன்னிப்பார். கூடவே, நாம் அந்தப் பாவத்தை விட்டு விலகி வெளிவர, நல்லதொரு பாதையை அமைத்து தருவார்.

ஒரு குற்றம் செய்தவுடன் அதை விட கொடூரமான குற்றத்தை பழிக்குப் பழியாய் செய்வதை இன்றைய தலைமுறையினர் பெருமையாக கருதுகிறார்கள். அது தவறு, மன்னிப்பே முக்கியமானது.

பிறர் தங்களை பற்றி உயர்வாக எண்ண வேண்டும் என்பதற்காக தங்கள் பெற்றோர், உறவினர், ஏன் கடவுளை கூட பழிக்க இளைஞர்கள் தயாராக உள்ளனர். அது இறைவனின் சித்தத்துக்கு எதிரானது.

இந்த உலகமானது தங்களுக்கு மட்டு மானது என்ற உணர்வோடு மனிதநேயமற்ற முறையில் திரிகிறார்கள். அது தவறானது. உலக வாழ்க்கை நிலையற்றது, விண்ணக வாழ்வே நிலையானது.

இளைஞர்கள் தங்கள் பாதைகளைச் சரியாக தேர்வு செய்ய வேண்டும். அவர்கள் சரியான வழியில் நடக்க முயலும் போது இறைவன் அவர்களுக்குத் துணையாய் இருக்கிறார். அந்தப் பாதை குறுகலானது. அந்தப் பாதை மேடு பள்ளம் நிறைந்தது. அந்தப் பாதை, முட்களும் பாறைகளும் நிரம்பியது. எனினும் அன்பினால் அதைக் கடந்து செல்ல வேண்டும். அதுவே இளைஞருக்கான இறைவனின் அழைப்பு. இதுவே, அவரது திருவுளம்.

- சகோ. ஆல்ஸ்டன் பெனிட்டோ வின்சென்ட், யூதா ததேயு ஆலயம், திருநெல்வேலி.

Next Story