துன்பங்கள் நீக்கியருளும் திருவெண்ணெய் நல்லூர்


துன்பங்கள் நீக்கியருளும் திருவெண்ணெய் நல்லூர்
x
தினத்தந்தி 18 Feb 2020 10:18 AM GMT (Updated: 18 Feb 2020 10:18 AM GMT)

சிவபெருமானின் திருப்பாதம் பதிந்த பெரும் புனிதமான புராதனமான திருத்தலம், திருவெண்ணெய்நல்லூர்.

ஒருமுறை திருக்கயிலாயத்தில், பளிங்கு போல் காட்சியளித்த பனிப்படலத்தில் தன் கண்களைத் திறந்து நோக்கினார், சிவபெருமான். அதில் அவரது பிம்பம் தெரிந்தது. தன் எதிரில் பிரதிபலித்த அந்த பிம்பத்தின் அழகில் மயங்கிய ஈசன், அதை நோக்கி “சுந்தரா வா” என்றார். உடனே அந்த பிம்பம் உயிர் பெற்று, சிவபெருமானை நோக்கி வந்தது. அவருக்கு சுந்தரர் என்று பெயரிட்டு, அணுக்கத் தொண்டராய் அருகில் அமர்த்திக் கொண்டார் சிவன்.

திருப்பாற்கடல் கடைந்தபோது, அதில் இருந்து வெளிப்பட்ட ஆலகால விஷத்தை, பந்து போல உருட்டி சிவபெருமானிடம் கொண்டு வந்து கொடுத்தவர், சுந்தரர்தான். அதனால்தான் அவரது பெயர் ‘ஆலால சுந்தரர்’ என்றானது.

சிவபெருமான் சாப்பிட்ட விஷம் அவரது கழுத்தில் நின்றது. அது வெம்மையை தராமல் இருக்க, பெண்ணை ஆற்றின் கரையில் பசுவின் வெண்ணெயால் கோட்டை அமைத்து, அதனுள் பஞ்சாக்கினி வளர்த்து, அதன் நடுவில் தவம் இயற்றினார். அந்த திருத்தலமே ‘திருவெண்ணெய் நல்லூர்’ என்றானது.

ஒருநாள் சிவபூஜைக்காக பூப்பறிக்க, கயிலையில் இருந்த நந்தவனத்திற்கு சென்றார் சுந்தரர். அப்போது அங்கே பார்வதியின் தோழியர்களான கமிலினி, அனிந்ததை ஆகியோர் மீது சுந்தரருக்கு ஈர்ப்பு உண்டானது. இதனை அறிந்த ஈசன், தம் அடியவர்களான ஆலால சுந்தரர், கமிலினி, அனிந்ததை ஆகிய மூவரையும் பூலோகத்தில் பிறப்பெடுத்து காதல் வாழ்வை வாழ்ந்து, பின்னர் திருக்கயிலாயம் வந்தடையும்படி அருளினார்.

உடனே சுந்தரர் ஈசனை வேண்டி, “தன்னை பூலோகத்தில் தக்கச் சமயத்தில் தடுத்தாட்கொள்ள வேண்டும்” என்று வேண்டினார். ஈசனும் அதற்கு இசைந்தார்.

இதையடுத்து திருநாவலூரில் சடையனார் - இசைஞானியார் தம்பதிகளுக்கு ஆதிசைவ மரபில் நம்பிஆரூரர் எனும் திருநாமத்தில் சுந்தரர் பிறந்தார். சிறு வயதில் சுந்தரரை பார்த்த, அந்தப் பகுதி மன்னனான நரசிங்கமுனையர், அவரை தன்னுடைய அரண்மனையிலேயே வளர்த்து வந்தார். சுந்தரருக்கு 16 வயதான போது, புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை அவருக்கு மணம் செய்து வைக்க பேசி முடித்தனர்.

சுந்தரருக்கு கொடுத்த வாக்கின்படி, அவரை தடுத்தாட்கொள்ள வேண்டிய தருணம் சிவபெருமானுக்கு வந்தது. அதன்படி திருமணம் நடைபெற இருந்த இடத்திற்கு ஓர் அந்தணக் கிழவராக உருவெடுத்து வந்தார் சிவபெருமான்.

அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையில் நம்பி ஆரூரரை காட்டி, “இவன் என் அடிமை. இவனை என்னோடு அனுப்புங்கள். மணம் செய்து வைக்காதீர்கள். இவன் பாட்டன் எழுதிக் கொடுத்த ஓலையில், அவனும், அவனது வழிவழி சந்ததியினரும் இந்த திருவெண்ணெய் நல்லூர் அந்தணனுக்கு அடிமை” என்று கூறியதோடு, அதற்கான ஓலையையும் காட்டினார்.

அதைக் கேட்ட சுந்தரர், “உமக்கு என்ன பித்து பிடித்திருக்கிறதா?” என்று கேட்டவாறே, முதியவரின் கையில் இருந்த அடிமை ஓலையை பிடுங்கி, படித்துக்கூட பார்க்காமல் கிழித்து எறிந்தார்.

முதியவருக்கும், சுந்தரருக்கும் வழக்கு மூண்டது. “இங்கே எனக்கு நீதி கிடைக்காது. எனது ஊரான திருவெண்ணெய் நல்லூருக்குச் செல்வோம். அங்கு வழக்காடு மன்றத்தில் மறையோர்கள் முன்னிலையில் உண்மையை நிரூபிக்கிறேன்” என்று கூறி சுந்தரரை தன்னுடன் அழைத்துச் சென்றார் முதியவர்.

சுந்தரரோ, “அப்படியோர் வழக்கு இருக்குமெனில், அதை முடித்த பின்னரே இங்கு வந்து மணம் முடிப்பேன்” எனச் சபதம் இட்டு முதியவருடன் சென்றார்.

பின்னர் வழக்கு திருவெண்ணெய்நல்லூரில் மறையவர்கள் முன்னிலையில் நடந்தது. அப்போது சுந்தரரின் பாட்டனார் கையெழுத்திட்ட பழைய ஓலைச் சுவடிகளை கொண்டுவந்து சரிபார்த்தனர். முதியவர் காண்பித்த அடிமை ஓலைச் சுவடியில் உள்ள சுந்தரரின் பாட்டனார் கையெழுத்தும், இதுவும் பொருந்திப்போயின. எனவே அங்கிருந்த மறையவர்கள், சுந்தரரை அந்த முதியவருக்கு அடிமை என தீர்ப்பளித்தனர்.

இதனால் வழியின்றி அந்த முதியவருடன் சென்றார், சுந்தரர். வழியில், “ஐயா.. என்னை எங்கு அழைத்துச் செல்கிறீர்? உமது வீடு எங்கு இருக்கிறது?” என வினவினார்.

உடனே அந்த முதியவர், “அன்பனே! நமது வீடு அதோ இருக்கிறது” என திருவெண்ணெய்நல்லூர் ஆலய அருட்துறையை கைகாட்டி அழைத்துச் சென்றார்.

சுந்தரருக்கு ஒன்றும் புரியவில்லை. “ஐயா.. அங்கே தெரிவது திருவெண்ணெய்நல்லூர் ஆலயம் அல்லவா? நான் கேட்டது, உமது வீடு எங்கிருக்கிறது என்றுதானே” என்றார் சுந்தரர்.

முதியவர் வேடத்தில் வந்த சிவபெருமான் மீண்டும் திருவெண்ணெய்நல்லூர் ஆலய அருட் துறையை கைகாட்டி, சுந்தரரை ஆலயக் கருவறைக்குள் கைப்பிடித்து அழைத்துச் சென்றார். அங்கு சிவலிங்கத்திற்கு முன்பாக தமது பாதக் குறடுகளைக் கழற்றி விட்டுவிட்டு, சிவலிங்கத்திற்குள் சென்று மறைந்தார், முதியவர்.

சுந்தரர் திகைப்பில் ஆழ்ந்து போனார். அப்போது கருவறைக்குள் இருந்து சிவபெருமான் தோன்றி, சுந்தரரின் முற்பிறவியையும், இப்போதைய பிறவியையும் பற்றி விளக்கிவிட்டு மறைந்தார்.

இதையடுத்து சிவபெருமானின் மீது, ‘பித்தா பிறை சூடி..” தன்னுடைய முதல் பதிகத்தை பாடினார் சுந்தரர்.

சுந்தரருடன் பஞ்சாயத்துச் சபையில் ஈசன் வழக்காடிய மண்டபம் இன்றும் திருவெண்ணெய்நல்லூரில் உள்ளது. தீராத வழக்குகளில் வெற்றி கண்டிட இத்தல வழிபாடு பெரிதும் கைகொடுக்கும் என் கிறார்கள். சடையப்ப வள்ளல், கவிச்சக்கரவர்த்தி கம்பரை ஆதரித்துப் போற்றிய பவித்திரமான புண்ணியபூமி இதுவாகும். சந்தான குரவரான மெய்கண்டார், ‘சிவஞான போதம்’ அருளிய திருத்தலமும் இதுதான். மெய்கண்டாருக்கு அவரது ஐந்தாம் வயதில் ஞான உபதேசம் செய்த பொல்லாப் பிள்ளையார் இங்கு அருள்கிறார்.

இத்தல மங்களாம்பிகை அம்மன் சன்னிதியில் வழிபட செல்வம், வீடு, வாசல், கல்வி, நன்மக்கட்பேறு, நீண்ட ஆயுள் அனைத்தும் கிடைக்கும். இங்கு அம்பாள் சன்னிதியில் ஸ்ரீசக்கரம், சங்கநிதி, பதுமநிதி அமைந்துள்ளது சிறப்பாகும். அறுபத்து மூவர், சப்தகன்னியர் சன்னிதிகளும் உள்ளன.

இத்தல ஈசனின் திருநாமம் ‘கிருபாபுரீஸ்வரர்’ என்பதாகும். சுந்தரரை தடுத்தாட்கொள்ள ஈசன் வந்தபோது அணிந்திருந்த பாதக்குறடுகள் இன்றும் இங்கு உள்ளது. இத்தல இறைவனுக்கு ‘தடுத்தாட்கொண்ட நாதர்’ என்ற பெயரும் உண்டு.

வழிபாட்டு பலன்

இத்தல ஈசனின் சன்னிதியில் 11 திங்கட்கிழமைகள் கருவறை தீபத்தில் பசுநெய் சேர்த்து வந்தால், நம்முடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். இங்குள்ள ஈசனின் பாதக்குறடுகளுக்கு வில்வார்ச்சனை செய்து வழிபட வேண்டும் என்றும் சொல் கிறார்கள். இத்தல ஈசனை அர்ச்சுனன், இந்திரன், திருமால் வழிபட்டுள்ளனர். விஜயலிங்கம் என்ற பெயரில் அர்ச்சுனன் வழிபட்ட லிங்கமும், சுந்தர லிங்கம் எனும் பெயரில் இந்திரன் வழிபட்ட லிங்கமும் இங்குள்ளது. திருமால் வழிபட்ட லிங்கத்திற்கு, ‘சங்கரலிங்கம்’ என்று பெயர். நவக்கிரகங்கள் வழிபட்ட ஜோதிலிங்கமும் காணப்படுகிறது.

இத்தல பலிபீடத்தின் நேர் உயரத்தில், சுந்தரருக்கு ஈசன் ரிஷபாரூடராகக் காட்சிகொடுத்த விமானக் கோவில் உள்ளது. அதற்கு எதிரில் கீழே கையில் ஓலைச்சுவடியுடன் சுந்தரர் உள்ளார். ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தில் சுந்தரர் குருபூஜை விழா இங்கு இரண்டு நாட்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். விழா நாளில் சுந்தரரின் திருமண உற்சவம், ஈசன் சுந்தரரின் திருமணத்தை தடுத்தாட்கொண்டது, அவிநாசியில் முதலை உண்ட பாலகனை மீட்டது, சுந்தரருக்கு ஈசன் காட்சி கொடுத்தது, திருக்கயிலாயம் செல்லுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.

மகாசிவராத்திரி அன்று இத்தலத்தில் நடைபெறும் திருமுறை பாராயணம் சிறப்பானது. மகாசிவராத்திரி நாளில் விரதமிருந்து இத்தலத்தில் தங்கியிருந்து ஈசனை மனமுருகி வழிபட்டால் வாழ்வில் தீவினைகள் அகன்று நல்லனவெல்லாம் வந்தடையும். சிவராத்திரி அன்று நள்ளிரவில் இத்தல மூலவர் கருவறைச் சுற்றின் பின்புறமுள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது.

அமைவிடம்

விழுப்புரத்தில் இருந்து அரசூர் செல்லும் வழியில் 19 கிலோமீட்டர் தூரத்தில் திருவெண்ணெய்நல்லூர் அமைந்துள்ளது. இத்தலத்தின் அருகில் அப்பரின் பாடல்பெற்ற திருத்தலமான திருமுண்டீஸ்வரம் சிவலோகநாதர் திருக்கோவிலும் அமைந்துள்ளது.

- சிவ.அ.விஜய் பெரியசுவாமி

Next Story