ஞானத்தின் தேவன் அற்புதம் செய்வார்


ஞானத்தின் தேவன் அற்புதம் செய்வார்
x
தினத்தந்தி 21 Feb 2020 9:51 AM GMT (Updated: 2020-02-21T15:21:27+05:30)

‘அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்’. (I கொரிந்தியர் 1:31) நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொரு வருக்கும் ஞானத்தின் தேவனாயிருக்கிறார்.

தம்மிடத்தில் வருகிற ஒருவரையும் அவர் புறம்பே தள்ளாமல் தம்மை விசுவாசிக்கிற அனைவருக்கும் பலத்த அற்புதங்களை செய்கிறார். உங்கள் வாழ்வில் ஆண்டவர் பலத்த அற்புதங்களைச் செய்ய விரும்புகிறார். அவரால் கூடாதது ஒன்றுமேயில்லை. 

உங்களுடைய தேர்வை குறித்தோ அல்லது உங்கள் சரீர பலவீனங்களைக் குறித்தோ பயந்து கலங்கிக் கொண்டிருந்தால் ஆண்டவராகிய இயேசுவை மனப்பூர்வமாய் நம்பி ஆண்டவருக்குள் சந்தோஷமாயிருங்கள். தொடர்ந்து நீங்கள் வாசிக்கும் ஆலோசனைகளுக்கு உங்களை அர்ப்பணியுங்கள்.

தேவனுக்குப் பயப்படுங்கள்

‘கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம், மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்’. (நீதிமொழிகள் 1:7)

இவ்வசனம் சொல்லுகிறது, ‘நாம், நம்மை உண்டாக்கின ஆண்டவருக்கு முதலாவது பயப்படவேண்டும். என்னை உண்டாக்கின ஒரு தெய்வம் இப்பூமியில் இருக்கிறார். அவர் தான் ஆண்டவராகிய இயேசு நாதர். அவருக்கு விரோதமாக ஒன்றையும் செய்யக்கூடாது’ என்கின்ற ஒரு பயம் எப்போதும் உங்கள் உள்ளத்தில் இருக்க வேண்டும்.

நம்மில் அநேகர் மனிதனுக்கு பயந்து, பயந்து, வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆண்டவர் சொல்லு கிறார், ‘அவருக்கு நாம் பயந்திருக்க வேண்டும்’. இப்படிப்பட்ட ஆலோசனையை மூடர்கள் அறியாமல் இருக்கிறார்கள்.

உங்களுடைய தேர்வை குறித்தோ அல்லது மற்ற எந்த காரியங்களைக் குறித்தோ பயப்படுவதை நிறுத்தி தேவனுக்குப் பயப்படுங்கள். இது தேவனை கனம் பண்ணுவதற்கு அடையாளம்.

அனுதினமும் ஜெபியுங்கள்

“உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.” யாக்கோபு 1:5

மேற்கண்ட வசனத்தில் நாம் தெளிவாய் வாசிக்கிறோம். நமக்கு ஞானம் இல்லாவிட்டால் ஜீவனோடு இருக்கிற ஆண்டவரை நோக்கி பிரார்த்தனை செய்ய வேண்டும். ஏன் என்றால் அவரே நமக்கு ஞானமாயிருக்கிறார். உங்கள் பாடங்களை படிக்கும் போது அநேக காரியங்கள் உங்களுக்கு விளங்கிக் கொள்ள முடியாமல், புரிந்து கொள்ள முடியாமல் கலக்கத்தோடு இருக்கலாம் இதற்கு ஞானம் வேண்டுமல்லவா?

யோவான் 14:14-ல் ஆண்டவர் சொன்னார், “என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்.” இது ஆண்டவருடைய வாக்குத்தத்தம். அதே வேளையில் நாமும் ஆண்டவரை நோக்கி விசுவாசத்தோடு ஜெபம் பண்ண வேண்டும். இப்படி ஜெபம் பண்ணும்போது சந்தேகம் அவநம்பிக்கை உங்களுக்குள் உண்டாகலாம். இதைக் கொண்டு வருகிறவன் பிசாசு. ஆகவே பிசாசுக்கு இடங்கொடாமல் தினந்தோறும் ஜெபத்தோடு உங்கள் பாடங்களை கருத்தாக படியுங்கள். கட்டாயம் ஆண்டவர் உங்கள் ஜெபத்தைக் கேட்டு அற்புதங்களைச் செய்வார்.

வேதத்தை தியானியுங்கள்

“இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக, இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக, அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்”. யோசுவா 1:8

“கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்மாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.” சங்கீதம் 19:7

ஞானமில்லாத உங்களுக்கு வேதமே ஞானத்தின் பொக்கிஷமாகும். ஆகவே தேர்வுக்கு ஆயத்தப்படுவதற்கு முன்பாக காலையில் வேதத்தை எடுத்து வசனத்தை வாசித்து சில நிமிட நேரம் தியானியுங்கள். அதற்கு பிறகு உங்கள் பாடங்களை படிக்கத் தொடங் குங்கள். தேவன் அற்புதமாய் உங்களுக்குள் கிரியைச் செய்வார். வேதத்தை ஒருநாளும் நீங்கள் மறக்கக்கூடாது.

ஆண்டவரை விசுவாசியுங்கள்

“அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.” ஆதியாகமம் 15:6

நீங்கள் செய்ய வேண்டிய மற்றொரு முக்கியமான காரியம் ஆண்டவரை நீங்கள் மனப்பூர்வமாய் விசுவாசிக்க வேண்டும். எப்படியெனில் இயேசு கிறிஸ்து எனக்காக சிலுவையிலே அடிக்கப்பட்டார், ரத்தம் சிந்தினார், எனக்காக மரித்தார். மூன்றாவது நாள் உயிரோடு எழும்பினார். இன்றைக்கும் அவர் ஜீவிக்கிறார். அவர் தான் எனக்கு அற்புதங்களைச் செய்கிற தேவன் என்று முழு நிச்சயமான நம்பிக்கையோடு அவரை விசுவாசிக்க வேண்டும்.

ஆபிரகாம் நூறு வயது முதியவராயிருந்தபோது ஈசாக்கை பெற்றெடுத்தார். காரணம் அவர் ஆண்டவரை மட்டும் விசுவாசித்தார். ஆகவே நீங்களும் உங்கள் தேர்வில் அற்புதங்களை காண ஆண்டவரை மாத்திரம் நம்பிக்கையோடு விசுவாசியுங்கள். உங்களுக்கு அற்புதம் நிச்சயம்.

பிரயாசப்படுங்கள்

“சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு, உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.” நீதிமொழிகள் 14:23

இறுதியாக ஆண்டவருடைய கிருபையினால் நான் உங்களுக்கு கூறும் முக்கிய ஆலோசனை என்னவென்றால், விடா முயற்சியோடு பிரயாசப்படுங்கள். இது முக்கியம். நாம் ஜெபித்தாலும், வேதம் வாசித்தாலும் படிக்க வேண்டிய நேரத்தில் கருத்தாக பாடங்களைப் படிக்க வேண்டும். இது நம்முடைய கடமை. நாம் செய்ய வேண்டியதை கட்டாயம் நாம் தான் செய்ய வேண்டும்.

சில நேரங்களில் எனக்காக என் பெற்றோர், என் போதகர் ஜெபம் பண்ணுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு சரிவர பாடங்களை படிக்காமல் விட்டு விட்டால் அது மிகுந்த குழப்பத்தை உண்டாக்கிவிடும். நம்பிக்கையற்ற தன்மை உங்களுக்குள் வந்து விடும். ஆகவே ஆண்டவரை முற்றிலும் நம்பி பிரயாசப்படுங்கள். உங்கள் பிரயாசத்திற்கு மிகுந்த பலன் உண்டு. மேலும் நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் அதிகமான மதிப்பெண்களை நீங்கள் பெற்று கட்டாயம் தேர்ச்சியடைவீர்கள்.

ஞானமுள்ள தேவன் உங்களை சகல ஞானத்தினாலும் நிரப்புவாராக.

சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், சென்னை-54.

Next Story