எதிரிகள் உருவாக யார் காரணம்?


எதிரிகள் உருவாக யார் காரணம்?
x
தினத்தந்தி 28 Feb 2020 11:28 AM GMT (Updated: 28 Feb 2020 11:28 AM GMT)

நம் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் சிறு வயதில் இருந்து தற்போதுவரை அந்தந்த பருவத்தில் குறைந்தபட்சம் யாராவது ஒருவர் எதிரியாக காணப்பட்டு இருப்பார்.

ஒருவனுக்கு எதிரிகள் ஏன் உருவாகின்றனர்? இது பக்தியற்றோர், பக்திக்குட்பட்டோர் எல்லாருக்குமே இயல்பாக நடக்குமா? பகை என்பது இறைவனால் ஒருவர் ஒருவருக்கு இடையே உருவாக்கப்படும் ஒன்றா? என்பதெல்லாம் ஆய்வுக்குரியவை.

எதிரிகள் உருவாவதில் இறைவனின் செயல்பாடு உள்ளதா? என்பதை பைபிள் கூறும் வரலாற்று சம்பவம் மூலம் அறியலாம்.

இஸ்ரவேலின் 12 கோத்திரங்களின் அரசனாக தாவீது இருந்தான். அவனது அரசாட்சியும், பக்திக்கேற்ற நடத்தையும் இறைவனுக்கு பிரியமாக இருந்தன. தண்டனையாக பல்வேறு பிரச்சினைகளை தாவீது சந்தித்தபோதும், இறைபக்தியில் இருந்து வழிவிலகாதபடி தன்னை காத்துக்கொண்டான். எனவே தாவீதின் மீதும் அவனது அரசாட்சியின் மீதும் இறைவனின் கருணை கடைசிவரை நீடித்தது.

தாவீதுக்குப் பின்பு அவனது மகன் சாலமோன் ஆட்சிக்கு வந்தான். உலகத்திற்கு தத்துவங்களையும், ஞானத்தையும் போதிக்கும் அளவுக்கு அவனை இறைவன் உயர்த்தினார். ஆனால் பெண்கள் மீதிருந்த அதீதமோகத்தின் காரணமாக பிற தெய்வ வழிபாடுள்ள பெண்களையும் தன்னிடம் சேர்த்துக்கொண்டான்.

தன்னை வணங்குவதற்காக பிரித் தெடுக்கப்பட்ட மக்கள், பிற தெய்வங்களை வணங்குவதை இறைவன் ஏற்பதே இல்லை. அந்த பெண்களால் தன்னைவிட்டு வேறு தெய்வ வழிபாட்டுக்கு சாலமோன் செல்லும் வாய்ப்பு ஏற்படும் என்பதை அவனுக்கு தரிசனம் மூலமாக எச்சரிக்கை செய்தார். ஆனாலும் அதை மீறியதால் இறைகோபத்துக்கு உள்ளானான். எனவே அவனை இறைவன் தண்டனைக்கு உட்படுத்தினார்.

பல்வேறு ஆசை, இச்சையின் காரணமாக இறைப்பாதையில் இருந்து விலகிச் செல்லும் பக்தனுக்கு எச்சரிக்கைகளை முதலில் இறைவன் அளிக்கிறார். இதயத்தை கசக்கச் செய்யும் அளவுக்கு மற்றவர்களின் கடின வார்த்தைகளை கேட்கச் செய்கிறார். அதிலும் மனம் மாறாவிட்டால், மகாகசப்பான சம்பவங்களுக்குள்ளாக நடத்தி, அதன் மூலம் எச்சரிக்கை செய்கிறார்.

ஆனாலும் அதிக உலகஆசை இருப்பதால், கசப்புகளை பக்தன் தனது திராணியைக் கொண்டு சமாளிப்பதோடு, இறைவனின் எச்சரிக்கையை புறக்கணிக்கிறான். அப்போதுதான் தண்டனையை நோக்கி அவன் அழைத்துச் செல்லப்படுகிறான். அவனவன் திராணிக்கு ஏற்ப தண்டனை விதிக்கப்படுகிறது.

பிற தெய்வ வழிபாடுள்ள பெண்களை சந்தோஷப்படுத்துவதற்காக அந்த தெய்வங்களுக்கு வழிபாட்டு மேடைகளை சாலமோன் கட்டினான். தாவீது போல மற்ற விவகாரங்களில் சிறப்பான அரசாட்சியை நடத்தியிருந்தாலும், பிற தெய்வ விவகாரங்களில் இறைகட்டளைகளை சாலமோன் முழுமையாக பின்பற்றவில்லை (1 ராஜா.11:6).

எச்சரிக்கை மீறினால் தண்டனை வரும். தண்டனை என்பதும் அழிப்பதற்கானது அல்ல. அவன் மீண்டும் தன் பாதைக்கு வர இறைவன் பயன்படுத்தும் ஆயுதமே அது. படிப்படியாக எச்சரிக்கை வருவது போல இறைத்தண்டனையும் படிப்படியாக வருகிறது.

தண்டனைகளில் இருந்து மீண்டெழுந்து இறைப்பாதைக்கு வரலாம். ஆனால் ஏகப்பட்ட இழப்புகளோடு அவமானம், வறுமை, வியாதி போன்றவற்றையும் கடந்து செல்ல வேண்டியதிருக்கும். எனவே எச்சரிப்பின் காலகட்டத்திலேயே மீண்டும் பக்திப் பாதைக்கு வருவது மேலானது.

சாலமோனுக்கு இரண்டு வகைகளில் தண்டனை அனுமதிக்கப்பட்டது. அவனுக்கு கீழ் பணியாற்றியவனையே எதிரியாக இறைவன் எழுப்பினார் (1 ராஜா.11:14, 23, 26). அந்த எதிரிக்கு ஆதரவாக பலரையும் இறைவனே சேர்த்தார். இது முதல் வகை.

அடுத்ததாக, சாலமோனின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த 11 கோத்திரங்களில் ஒரு கோத்திரம் தவிர மற்றவற்றை அவனிடம் இருந்து பிடுங்கி எதிரிகளிடம் இறைவனே அளித்தார். இது இரண்டாம் வகை தண்டனை.

எதிரிகளால் சாலமோன் சமாதானம் அற்றவனானான். எதிரிகளின் பலம் அவனுக்கு பயத்தையும் தந்தது. எனவே எதிரி களைக் கொலை செய்ய விரும்பினான். இறைவன் எழுப்பிய எதிரிகளை அவனால் கொலை செய்யவும் முடியவில்லை. மாறாக, எதிரிகளுக்கு ஆட்சிக்கான ஆசீர்வாதத்தையும் இறைவன் அனுப்பினார் (1 ராஜா.11:37,38).

நாம் செய்யும் தவறுகள், எதிரிகளையும் ஆட்சி பீடத்தில் அமரச் செய்துவிடுகிறது. சாலமோனிடம் இருந்த அதீதமோகம் போல, நம்மிடம் இருக்கும் பொருளாசை, அதிகார ஆசை, இச்சை போன்றவை சுயநலம், லஞ்சம், பொய், ஏமாற்றுதல், நியாயத்தை புரட்டுதல், நேர்மையானவர்களை அநியாயமாக குற்றம்சாட்டுதல் என எத்தனையோ பாவங்களுக்குள் இழுத்துச் சென்றுவிடுகின்றன.

இதன் விளைவாக, நமக்கு எதிராக நம்மிடம் இருந்தே எதிரிகளை இறைவன் உருவாக்குகிறார். இந்த எதிரிகளை அழிப்பதற்கு நாம் செய்யும் மூர்க்கமான முயற்சிகள் மேலும் பல பாவங்களை செய்ய வைக்கின்றன. இதனால் சம்பந்தமில்லாமல் பலரும் பல்வேறு பாதிப்படைகின்றனர்.

சாலமோனின் பாவநடவடிக்கைகளால்தான், அவனுக்கு எதிரிகள் உருவாகியதோடு, அவர்களுடன் சண்டை, மூர்க்கம், சமாதானக் குறைவு, கட்டுக்கடங்காத பகை என பல்வேறு இழப்புகள் அவனது நாட்டு மக்களுக்கும் உபரியாக சேர்ந்துகொண்டன.

ராஜாவாக இருந்தாலுமே சாலமோனுக்கு சமாதானமில்லை. இறைவனுக்காக தேவாலயம் கட்டுவது உட்பட பல நற்காரியங்களைச் செய்தாலும், பாவி என்றே அழைக்கப்பட்டான் (நெகே.13:26). பாவத்தினால் அடுத்த மோட்ச வாழ்க்கைக்கான ஆசீர்வாதங்களையும் அவன் இழந்தான். காணிக்கை கொடுப்பது போன்ற நற்காரியங்களால் பாவம் விலகிவிடாது.

எனவே எச்சரிக்கை செய்யப்படுவதை உணர்கிறவர்களும், தண்டனைக்குள் தள்ளப்பட்டதாக உணர்கிறவர்களும் வாய்ப்பு உணர்ந்து உடனடியாக மனந்திரும்பி இறைவழிகளுக்குள் வந்து மீட்படையுங்கள். அப்படி வந்தால், இனி உங்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் வைக்கப்பட்டு இருக்கும் வேறுபல ஆசீர்வாதங்களை பயமற்ற சமாதானம், திருப்தி, அமைதியுடன் அனுபவிக்கலாம்.

இல்லாவிட்டால், இப்போது இருக்கும் செல்வத்தாலும் திருப்தியும் சந்தோஷமும் கிடைக்காது. அடுத்த வாழ்க்கையிலும், மீட்பே இல்லாத வகையில் அநியாய தீமை களுக்கு ஆட்பட்டு அழுதுகொண்டே இருக்க வேண்டியதாகிவிடும். சிந்திப்போம்.

ஜெனட், காட்டாங்குளத்தூர்.

Next Story