சிங்கம்புணரி அருகே பெரியகாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் பக்தர்கள் சாமி தரிசனம்


சிங்கம்புணரி அருகே பெரியகாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 27 Nov 2020 3:54 PM GMT (Updated: 27 Nov 2020 3:54 PM GMT)

சிங்கம்புணரி அருகே பெரியகாண்டி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட முசுண்டப்பட்டி ஊராட்சியில் காணப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபெரிய காண்டி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 6 மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்றன. திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் யாக சாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று யாக சாலையில் இருந்து தீர்த்தக்குடங்களை எடுத்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். அதன்பின்னர் கோவில் கோபுர கலசத்திற்கு அந்த தீர்த்தக்குடத்தில் இருந்து புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார்கள்.

பக்தர்கள் திரண்டனர்

அப்போது திரளான பக்தர்கள் திரண்டிருந்து கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர். பின்னர் தீர்த்தக்குடத்தில் இருந்து புனித நீரை பக்தர்கள் மீது தெளித்தனர். கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றிய போது கருட பகவான் வானில் வட்டமிட்டது பக்தர்களை பரவசப்படுத்தியது.

பின்னர் மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் மகா அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது. பின்னர் 7 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய கருப்பன், மாவட்ட கவுன்சிலர் பொன்னடப்பட்டி பொன்மணி பாஸ்கரன், ஒன்றிய குழு உறுப்பினர் செல்வராஜ், முசுண்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அடைக்கலசாமி, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மணப்பாறை சந்திரசேகர், தொழிலதிபர்கள் கரிகாலன், கருப்பையா கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீபெரிய காண்டி அம்மன் கோவில் பங்காளிகள் வகையறாக்கள், கவுண்டம்பட்டி, காணப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, வேப்பம்பட்டி, ஆலம்பட்டி, புதுப்பட்டி, குட்டுபட்டி கார்ணாப்பட்டி ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்தனர். 

Next Story