சூரியனுக்கு ஒளி வழங்கிய ஆதிரத்தினேஸ்வரர்


சூரியனுக்கு ஒளி வழங்கிய ஆதிரத்தினேஸ்வரர்
x

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோவிலைப் பற்றி இங்கே பார்ப்போம்.

சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 199-வது தலமாகும். பாண்டிய நாட்டு தலங்கள் 14-ல் 9-வது தலம்.

மூலவர்: ஆதிரத்தினேஸ்வரர், அஜகஜேஸ்வரர், ஆடானைநாதர்

அம்மன்: சிநேகவல்லி, அன்பாயிரவல்லி

தல விருட்சம்: வில்வம்

தீர்த்தம்: சூரிய தீர்த்தம், வருண தீர்த்தம், அகத்திய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், காமதேனு தீர்த்தம்.

வருண பகவானின் மகனான வாருணி, துர்வாச முனிவரின் தவத்தை கலைத்தான். அதனால் அவனை ஆட்டின் தலையும், யானை உடலுமாக மாறும்படி துர்வாசர் சாபமிட்டார். அந்த சாபம் நீங்குவதற்காக திருவாடானை வந்த வாருணி, இத்தல இறைவனை வேண்டி விமோசனம் பெற்றான். ஆடு + ஆனை என்பதே 'திருவாடானை' என்றானது.

இங்குள்ள சோமாஸ்கந்தமூர்த்தியை, பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன் நிறுவியதாக சொல்லப்படுகிறது. ஈசனை வேண்டி பாசுபத அஸ்திரத்தைப் பெற்றான் அர்ச்சுனன். ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று அவன் அறியவில்லை. அதை அறிவதற்காக இத்தலம் வந்து சிவனை வேண்டினான். சிவனும் கற்றுக்கொடுத்தார். அதற்கு நன்றியாகவே சோமாஸ்கந்த மூர்த்தியை நிறுவினான்.

சூரியனுக்கு தன்னுடைய பிரகாசமான ஔியால் கர்வம் உண்டானது. அந்த ஆணவத்தால் தன்னுடைய ஒளியை, சிவபெருமானின் முகத்தில் பாய்ச்சினான். அப்போது அந்த ஒளியை நந்தி உள்ளிழுத்துக்கொண்டார். இதனால் ஒளியை இழந்த சூரியன், நந்தியை வேண்டினாா். நந்திேயா, திருவாடானை இறைவனை வேண்டும்படி சொல்ல, நீல ரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டு, தன் ஒளியை மீண்டும் பெற்றார், சூரிய பகவான்.

இத்தல நாயகியான சிநேகவல்லி அம்மன், சுக்ரனுக்குரிய அதிதேவதை ஆவார். எனவே இந்த ஆலயம் சுக்ரனுக்குரிய பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது.

ஆதி என்னும் பெயர் கொண்ட சூரியன், நீல ரத்தினக்கல் கொண்டு ஆவுடை அமைத்து வழிபட்டதால், இத்தல இறைவனுக்கு 'ஆதிரத்தினேஸ்வரர்' என்று பெயர். இவர் உச்சிகாலத்தில் நடைபெறும் அபிஷேகத்தின் போது, நீல நிறத்தில் காட்சியளிப்பார்.

திருவண்ணாமலை, வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள், தங்களுக்கான பரிகாரத்தை இந்த ஆலயத்திற்கு வந்து செய்து கொள்கிறார்கள்.

இந்த ஆலயத்தில் அமைந்த 9 நிலை களுடன் கூடிய ராஜகோபுரம், 130 அடி உயரம் கொண்டது.

இத்தல இறைவனை சூரியன், அகத்தியர், மார்க்கண்டேயர், காமதேனு ஆகியோர் வழிபட்டு பேறுபெற்றுள்ளனர்.

இந்த ஆலயத்தில் வைகாசி வசந்த விழா 10 நாட்களும், ஆடிப்பூரத் திருவிழா 15 நாட்களும் விமரிசையாக நடைபெறும். அதே போல் நவராத்திரி, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி வழிபாடுகளும் சிறப்பாக நடத்தப்படும்.

இத்தல இறைவனை வேண்டிக்கொண்டால், முன்வினை நீங்கும். அம்மனுக்கு விசேஷ சுக்ர ஹோமம் செய்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். சுக்ரதிசை, சுக்ர புத்தி நடப்பவர்கள் இங்கு வழிபாடு செய்யலாம்.

மதுரையில் இருந்து தொண்டி செல்லும் வழியில் 100 கிலோமீட்டர் தொலைவில் திருவாடானை உள்ளது. சிவகங்கையில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்திலும், காரைக்குடியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், தேவகோட்டையில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த திருத்தலத்தை அடையலாம்.


Next Story