தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா; புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்த வராகி அம்மன்


தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவின் நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூா் பெரியகோவிலிலுள்ள வராகி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாள்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில், அம்மனுக்கு நாள்தோறும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும்.

இதன்படி, நிகழாண்டு ஆஷாட நவராத்திரி விழா கடந்த 28 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து வராகி அம்மனுக்கு இனிப்பு அலங்காரமும், 29 ஆம் தேதி மஞ்சள் அலங்காரமும், 30 ஆம் தேதி குங்கும அலங்காரமும், ஜூலை 1 ஆம் தேதி சந்தன அலங்காரமும், 2 ஆம் தேதி தேங்காய்பூ அலங்காரமும், 3 ஆம் தேதி மாதுளை அலங்காரமும், 4 ஆம் தேதி நவதானிய அலங்காரமும், 5 ஆம் தேதி வெண்ணெய் அலங்காரமும், 6 ஆம் தேதி கனி அலங்காரமும், 7 ஆம் தேதி காய்கறி அலங்காரமும் நடைபெற்றது.

நிறைவு நாளான இன்று வராகி அம்மன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியை காண பக்தர்கள் தஞ்சை பெரிய கோவிலில் குவிந்தனர்.

அதை தொடர்ந்து இரவு நாகசுரம், கரகாட்டம், ஒயிலாட்டம், வாண வேடிக்கையுடன் நான்கு ராஜ வீதிகளிலும் வீதி உலாவும் நடைபெற்றது.


Next Story