நாளை கருட பஞ்சமி.. அதிகாலையில் கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும்
கருட பஞ்சமியன்று பெண்கள் கவுரி அம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பு இருந்து பூஜை செய்வது மிகவும் நல்லது.
ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி நாளில் கருட பஞ்சமியும் நாக பஞ்சமியும் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆடி மாதம் அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்களில் கருட பஞ்சமியும் ஒன்று. இந்த ஆண்டு கருட பஞ்சமி நாளை (9.8.2024) கொண்டாடப்படுகிறது.
கருடன் சாதாரண பறவை மட்டுமல்ல அது மகாவிஷ்ணுவின் வாகனமாக உள்ளது. மகா விஷ்ணு பள்ளிகொள்ளும் ஆதிசேஷனையும், அவருடைய வாகனமாகிய கருடாழ்வாரையும் வழிபட சிறந்த நாள் நாக, கருட பஞ்சமி. இந்த நாளில் கருட பகவானையும் பெருமாளையும் வழிபடுவது மிக சிறப்பு வாய்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் செய்வது இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
ஆண் வாரிசு இல்லாதவர்கள் இந்த நாளில் விரதமிருந்து வழிபட்டால் கருடனைப் போல பலசாலியான, புத்திசாலியான, ஆண் வாரிசு கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம். பெண்கள் கருட பஞ்சமியன்று கவுரி அம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பு இருந்து பூஜை செய்வது மிகவும் நல்லது. அதிகாலை நேரத்தில், கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும். அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று கருடனை வழிபட்டு வர நாக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
இந்த நாளில் வாகனம் வாங்குதல், புதிய தொழில் தொடங்குதல், விஷத்தை முறித்தல், மருத்துவம் செய்தல், அறுவை சிகிச்சை செய்தல் மற்றும் எல்லாவித சுபகாரியங்களையும் செய்யலாம். சீமந்தம் செய்வதற்கு சிறந்த திதி பஞ்சமி திதியாகும். இந்த நாளில் மருந்துகள் சாப்பிட நோய்கள் விரைவில் மறையும் என்பது ஐதீகம்.