தமிழர் எழுதிய 'ஹரிவராசனம்'


தமிழர் எழுதிய ஹரிவராசனம்
x

“ஹரிவராசனம் பாடலுக்கு முன்பு வரை, சபரிமலையில் புல்லாங்குழல் இசைத்து நடைசாத்துவதுதான் நடைமுறையில் இருந்திருக்கிறது”

இந்தியாவில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில், கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு முக்கிய இடம் உண்டு. கார்த்திகை மாதம் மாலையிட்டு, தை 1-ந் தேதி பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியை தரிசிப்பதற்காக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்தியா முழுவதும் இருந்து ஐயப்பனுக்கு மாலை அணிந்து, விரதம் இருந்து இருமுடி கட்டி வரும் பக்தர்கள் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்வார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு தளர்த்தப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் என்றதும், அங்கு தினமும் கோவில் நடை சாத்தப்பட்டதும் ஒலிக்க விடப்படும் 'ஹரிவராசனம் விஸ்வமோகனம்..' என்ற பாடல் நினைவுக்கு வராமல் இருக்காது. இது ஐயப்பனுக்கான தாலாட்டு பாடல் ஆகும். இந்தப் பாடலை எழுதியவர் ஒரு தமிழர். அவர் தமிழ்நாட்டின் தென் பகுதியில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி என்ற ஊரை பூர்வீகமாகக் கொண்ட, கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர் என்பவராவார்.

முன்னொரு காலத்தில் வசதி வாய்ப்பில்லாத குடும்பமாக இருந்தாலும், தன் வீட்டின் வழியாக செல்பவர்களை பசியாற்றி அனுப்பும் குடும்பமாக கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயரின் பரம்பரை இருந்துள்ளது. பந்தளத்து ராஜாவின் மகனாக வளர்ந்த மணிகண்ட சுவாமியான ஐயப்பன், தாயின் தலைவலி போக்க புலிப் பால் தேடி வனத்திற்குள் புகுந்தார். அப்போது அவர் இந்த வழியாக வந்ததாகவும், பசி மற்றும் களைப்புடன் இருந்த மணிகண்ட சுவாமிக்கு, அந்த வீட்டினர் கம்பு தானியம் கொண்டு கூழ் செய்து அளித்ததாகவும் ஐயப்ப புராணம் கூறுகிறது. கம்புக் கூழ் வழங்கியதால், இந்தக் குடும்பத்திற்கு 'கம்பங்குடி' என்ற பெயர் அமைந்ததாம்.

இந்த பரம்பரையைச் சேர்ந்த கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர், காலங்காலமாக ஐயப்பனை வழிபடும் குடும்பத்தில் வந்தவர். அவர் ஒரு முறை ஐயப்பனை தரிசித்துக் கொண்டிருந்த வேளையில், ஹரிவராசனம் பாடலை எழுதியிருக்கிறார். இவர் 1920-ம் ஆண்டு 'சாஸ்தா ஸ்துதி கதம்பம்' என்ற நூலை எழுதி பிரசுரித்தார். இந்த நூலில் ஐயப்பனைப் பற்றிய ஏராளமான கீர்த்தனைகள் உள்ளன. ஆனால் அவற்றில் முக்கியமானதாக இந்த 'ஹரிவராசனம்..' கீர்த்தனை போற்றப்படுகிறது.

1950-களில் சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் தீவிபத்து ஒன்று ஏற்பட்டது. அதன்பின்னர் தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டு, அடுத்த ஆண்டே கோவில் துரிதமாக புனரமைக்கப்பட்டது. அப்போது 'ஹரிவராசனம்..' பாடலை ஐயப்பனுக்கு அர்த்தஜாம பூஜை முடிந்து நடை சாத்தும் போது பாடும் பாடலாக இருக்கட்டும் என்று மாற்றியிருக்கிறார்கள். அதற்கு முன்பு வரை, புல்லாங்குழல் இசைத்து நடை சாத்துவதுதான் நடைமுறையில் இருந்துள்ளது.

1920-ல் பாடல் உருவாக்கம் பெற்று, அது சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை சாத்தப்படும் போது பாடப்படும் பாடலாக இருந்துவந்தாலும் கூட, அந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவும் வகையில் அதற்கு உயிர் கொடுத்தவர், பின்னணி பாடகரான கே.ஜே.ஜேசுதாஸ். 1975-ம் ஆண்டு தமிழ், மலையாள மொழிகளில் வெளிவந்த 'சுவாமி ஐயப்பன்' என்ற திரைப்படத்தில்தான் முதன் முறையாக இந்தப் பாடலைப் பாடினார், கே.ஜே.ஜேசுதாஸ். தேவராஜ் மாஸ்டர் என்ற இசையமைப்பாளரின் இசையில் மனதை உருக்கிய பாடலாக இது தயாரானது. இன்றும் இந்தப் பாடலைக் கேட்பவர்கள், ஒரு அமைதி நிலைக்குச் செல்வதை உணர முடியும்.

கடந்த 2020-ம் ஆண்டு, இந்தப் பாடல் உருவாக்கப்பட்டு நூற்றாண்டை எட்டியது. அப்போது கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டிருந்தது. அதனால் இந்த நூற்றாண்டு நிகழ்வை கொண்டாட முடியாமல் இருந்தது. ஆனால் தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தேசிய அளவில் 'ஹரிவராசனம்..' பாடலின் நூற்றாண்டு நிகழ்வைக் கொண்டாட சபரிமலை தேவஸ்தானம் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஹரிவராசனம் பாடல் வரிகள்..

ஹரிவராசனம் விஸ்வமோகனம்

ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்

அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

சரணகீர்த்தனம் பக்தமானஸம்

பரணலோலுபம் நர்த்தனாலயம்

அருணபாசுரம் பூதநாயகம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

பிரணயசத்யகம் பிராணநாயகம்

ப்ரணதகல்பகம் சுப்ரபாஞ்சிதம்

பிரணவமந்திரம் கீர்த்தனப்பிரியம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

துரகவாகனம் சுந்தரானனம்

வரகதாயுதம் தேவவர்ணிதம்

குருகிருபாகரம் கீர்த்தனப்பிரியம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

திரிபுவனார்ச்சிதம் தேவதாத்மகம்

திரிநயன பிரபும் திவ்யதேசிகம்

திரிதசப்பூஜிதம் சிந்திதப்பிரதம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

பவபயாபகம் பாவுகாவகம்

புவனமோகனம் பூதிபூசணம்

தவளவாகனம் திவ்யவாரணம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

களம்ருதுஸ்மிதம் சுந்தரானனம்

களபகோமளம் காத்ரமோகனம்

களபகேசரி வாஜிவாகனம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரிதம்

ச்ருதிவிபூஷணம் சாதுஜீவனம்

ச்ருதிமனோகரம் கீதலாலசம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா


Next Story