திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமான்; பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது


திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமான்; பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது
x
தினத்தந்தி 18 Nov 2023 11:50 AM GMT (Updated: 18 Nov 2023 12:03 PM GMT)

திருச்செந்தூரில் சூரசம்ஹார விழாவையொட்டி, 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஒவ்வோர் ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி அதிகாலை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது.

கந்தசஷ்டி திருவிழாவையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் வரும் பக்தர்கள், கோவிலில் தங்கி விரதம் மேற்கொண்டனர். கோவிலின் வளாகத்தில் மேம்பாட்டுப்பணிகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் கோவிலின் வெளிவளாகத்தில் தங்கி விரதம் இருந்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை கடற்கரையில் நடைபெற்றது. சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கடற்கரையில் தீயணைப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கடற்கரை உள்ளிட்ட இடங்களில் 12 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் பெரிய எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட ஊர்களில் இருந்து திருச்செந்தூருக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோவில் வளாகத்தில் குடிநீர், சுகாதாரம், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சுவாமி ஜெயந்திநாதர் இன்று மாலை சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளினார். முதலில் யானை முகமாகவும், பின்னர் சிங்க முகமாகவும் அடுத்தடுத்து உருமாறி போரிடும் சூரபத்மனை முருகப்பெருமான் வேல் கொண்டு வதம் செய்யும் நிகழ்வு கோலாகலமாக நடந்தது. அப்போது கடற்கரையில் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆணவம் மிகுந்த சூரனை முருகப்பெருமான் 6 நாள் போருக்குப்பின் சம்ஹாரம் செய்தார். சூரசம்ஹாரத்தின்போது சூரபத்மன் மீது முருகப்பெருமானின் வேல் பாய்ந்ததும், அவனிடம் இருந்த அஞ்ஞானம் மறைந்து மெய்ஞானம் வரப்பெற்றான். உடனே அவனை அழிக்காமல் சேவலாகவும், மயிலாகவும் முருகப்பெருமான் ஆட்கொண்டார். சேவலை தனது கொடியாகவும் மயிலை வாகனமாகவும் மாற்றினார்.


Next Story