மண்டல பூஜை: சபரிமலையில் பாதுகாப்பு பணியில் 2,700 போலீசார்..!


மண்டல பூஜை: சபரிமலையில் பாதுகாப்பு பணியில் 2,700 போலீசார்..!
x

சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது.

திருவனந்தபுரம்,

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந்தேதியில் இருந்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து சாமியை தரிசனம் செய்ய நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தபடி உள்ளனர். இதனால் கூட்டம் அலைமோதுகிறது.

இந்தநிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளனர். சபரிமலையில் மட்டும் 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இது குறித்து டி.ஐ.ஜி. ராகுல் ஆர்.நாயர் கூறியதாவது:- அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலில் போலீசார் அதிக முனைப்புடன் செயல்பட வேண்டும். பக்தர்களை மிகுந்த கண்ணியத்துடன் நடத்த வேண்டும். போலீசார் உரிய நேரத்தில் பணிக்கு வருகைதர வேண்டும். தற்போது சபரிமலைக்கு வரும் பக்தர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதால் போலீசாரின் பொறுப்பு அதிகரித்து வருகிறது.

சபரிமலையில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தலைமையில் 10 பிரிவுகளாக 35 இன்ஸ்பெக்டர்கள், 105 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோரின் மேற்பார்வையில் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அனைவருக்கும் சாமி தரிசனம் கிடைக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். பக்தர்கள் போலீசாரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story