மகா சிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் சிவ ஆலய ஓட்டம் தொடங்கியது


மகா சிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் சிவ ஆலய ஓட்டம் தொடங்கியது
x
தினத்தந்தி 7 March 2024 11:59 AM GMT (Updated: 7 March 2024 12:26 PM GMT)

மகா சிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவ ஆலயங்களும் விழா கோலம் பூண்டுள்ளது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் விளவன் கோடு, கல்குளம் தாலுகா பகுதிகளில் வரலாற்று சிறப்பு மிகுந்த 12 சிவ ஆலயங்கள் உள்ளது. இந்த ஆலயங்களில் சைவ ,வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் சிவ ஆலய ஓட்டம் வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. நமது நாட்டில் குமரி மாவட்டத்தில் மட்டும்தான் 12 சிவ ஆலயங்களையும் ஓடி தரிசிக்கும் நடைமுறை உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில், சிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முன் சிறை திருமலை மகாதேவர் ஆலயத்திலிருந்து சிவ பக்தர்கள் கோவிந்தா கோபாலா என்ற கோஷத்துடன் சிவா ஆலய ஓட்டத்தை தொடங்கினர். இந்த ஓட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சிவ ஆலய ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கடந்த ஏழு தினங்களுக்கு முன்பாக மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இவர்கள் காலையிலும், மாலையிலும் இரண்டு நேரம் குளித்துவிட்டு சிவ ஆலயங்களில் சென்று சிவ நாமம் பாடி விரதம் இருந்து வந்தார்கள். இந்த விரத நேரத்தில் சைவ உணவையே சாப்பிடுவார்கள் என்பது உண்மை.

மேலும் இவர்கள் ஏகாதசி விரதம் இருந்தனர். இந்த விரதத்தில் தீயினால் சுட்ட பொருட்கள் எதையும் சாப்பிட மாட்டார்கள். நீர் உணவுகள் மட்டுமே பருகுவார்கள். இந்த சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ள கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் ஏராளமானோர் முன்சிறை மகாதேவர் கோவிலுக்கு வரத் தொடங்கினர்.

ராமாயணம், மகாபாரதம் காவியத்தோடு தொடர்புடைய திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து இன்று காலையில் வழக்கம்போல் ஏராளமான பக்தர்கள் ஓட தொடங்கினார்கள். பிற்பகல் முதல் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

பக்தர்கள் விசிறி ,விபூதி, பொட்டலத்துடன் முன் சிறையில் இருந்து காப்பிக்காடு, சென்னித்தோட்டம் ,பல்லன் விளை, மார்த்தாண்டம் வழியாக திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு சென்று தரிசித்தனர். அங்கிருந்து புறப்பட்டு, அருமனைகளியல் வழியாக 14 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திற்பரப்பு வீரபத்திரர் கோவிலையும், அங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநந்திக்கரை கோவிலையும், திருநந்திக்கரையில் இருந்து குலசேகரம் வழியாக 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பொன்மனை மகாதேவர் கோவிலையும், அங்கிருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பண்ணிப் பாகம் கோவிலையும், தரிசிப்பர்.

அங்கிருந்து கிழக்காக ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கல்குளம் நீலகண்ட சுவாமியை தரிசித்து, அங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேலாங்கோடு கோயிலுக்குச் சென்று வழிபடுவர். அங்கிருந்து புறப்பட்டு ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருவிடைக்கோடு சடையப்பர் கோவிலுக்கு சென்று தரிசிப்பர். அங்கிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவிதாங்கோடு கோவிலிலும், அங்கிருந்து புறப்பட்டு 9 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருப்பன்றி கோடு மகாதேவர் கோவிலில் தரிசித்து, அங்கிருந்து பள்ளியாடி வழியாக 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலுக்கு சென்று தரிசிக்கின்றனர்.

அங்கு நாளை இரவு முழுவதும் தூங்காமல் நோன்பிருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இவ்வாறு சுமார் கால்நடையாக 110 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று 12 சிவ ஆலயங்களை தரிசிப்பார்கள். மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவபக்தர்கள் அதிகமாக வருவதால் மார்த்தாண்டம் -தேங்காய் பட்டணம் சாலையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவா ஆலயங்களும் விழா கோலம் பூண்டுள்ளது. பக்தர்கள் செல்லும் அனைத்து சிவ ஆலய பகுதிகளிலும் சைவ உணவுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.


Next Story