மகாபலியை வரவேற்கும் ஓணம் திருநாள் - 8-9-2022 ஓணம் பண்டிகை


மகாபலியை வரவேற்கும் ஓணம் திருநாள் - 8-9-2022 ஓணம் பண்டிகை
x

கேரள மக்கள் எந்தவிதமான மத பாகுபாடும் பார்க்காமல் கொண்டாடும் பண்டிகையில், ‘ஓணம் பண்டிகை’ முக்கியமானது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்பட்டாலும், வாமனராக வந்த மகாவிஷ்ணு, மகாபாலி சக்கரவர்த்தியிடம் மூன்று அடி மண் கேட்டு அவரது ஆணவத்தை அடக்கிய நிகழ்வுகளின் ஒரு பகுதியாகவே இந்த ஓணம் பண்டிகை பார்க்கப்படுகிறது.

கேரளாவை ஆட்சி செய்த மகாபலி மன்னன், அந்த மக்களின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தான். அசுர குலத்தில் பிறந்திருந்தாலும், பிரகலாதனின் வழிவந்த மகாபலி சக்கரவர்த்திக்கு, மகாவிஷ்ணுவின் மீது பக்தியும் உண்டு. அதே நேரம் அசுர குலத்திற்கே உரிய, தேவர்களை அழிக்க வேண்டும் என்ற கோபமும் உண்டு. ஒரு முறை மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்த மகாபலி முன்வந்தான். அந்த யாகத்தில் கலந்துகொள்பவர்களுக்கு, கேட்கும் தானங்களை வழங்கவும் அவன் முடிவு செய்தான். இந்த யாகம் நிறைவு பெற்றால் இந்திரனின் பதவிக்கு ஆபத்து வரும் என்பதால், அதனை தடுத்து நிறுத்த தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர்.

இதையடுத்து அவர், வாமனர் என்னும் குள்ள உருவம் எடுத்து, மகாபலி சக்கரவர்த்தி நடத்திய யாகத்திற்குச் சென்றார். அவரிடம் மகாபலி மன்னன், "என்ன தானம் வேண்டும்?" என்று கேட்க, அதற்கு வாமனர் "எனக்கு மூன்று அடி மண் கொடுத்தால் போதும்" என்று கூறினார்.

வாமனரின் குள்ளமான உருவத்தைக் கண்டு, "தங்களுக்கு மூன்று அடி மண் போதுமா?" என்று நகைப்புடன் கேட்டான், மகாபலி சக்கரவர்த்தி. பின்னர் நீர் வார்த்து மூன்று அடி நிலத்தை வழங்க முன்வந்தான். அப்போது குள்ளமாக இருந்த வாமனர், தன்னுடைய உருவத்தைப் பெரியதாக்கி, பூமிக்கும் வானுக்குமாக உயர்ந்து நின்றார்.

பின்னர் தன்னுடைய ஒரு அடியால் பூமியையும், இரண்டாவது அடியால் வானத்தையும் அளந்தார். இப்போது மூன்றாவது அடியை வைக்க இடம் இல்லை. "மகாபலியே.. மூன்றாவது அடியை எங்கே வைப்பது?" என்று மகாவிஷ்ணு கேட்க, "என்னுடைய தலையில் வையுங்கள்" என்றான், மகாபலி சக்கரவர்த்தி. அதன்படியே தனது மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்த மகாவிஷ்ணு, அவனை பாதாள உலகத்திற்குள் தள்ளினார். அகந்தை அகன்ற மகாபலி, மகாவிஷ்ணுடம், "இறைவா.. நான் ஆண்டுக்கு ஒரு முறை என்னுடைய மக்களை சந்திக்க அனுமதி வழங்க வேண்டும்" என்று கேட்டார். மகாபலியின் கோரிக்கையை வாமனர் ஏற்றார். அதன்படியே திருவோண நாள் அன்று, மகாபலி மன்னனை வரவேற்கும் பொருட்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஐதீகம்.

இந்த திருவோணத் திருநாளானது, கேரளாவின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் தொடங்கும். அன்று முதல் திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் இந்த விழா கொண்டாடப்படும்.

திருவோண திருநாள் கேரளத்தின் சிங்கம் மாதத்தில் அதாவது தமிழில் ஆவணி மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும்.அன்று முதல் திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படும். ஒவ்வொரு நாளும் வீடுகள் முன்பு, பெண்கள் அத்தப்பூ கோலமிடுவார்கள். அறுசுவை உணவும் பரிமாறப்படும். ஆண்களும், பெண்களும் ஆட்டம், பாட்டம் என்று இந்த விழா களைகட்டும். விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் படகுபோட்டி மிகவும் பிரசித்திப் பெற்றது.

ஓணம் சத்யா

கேரளாவின் உணவு வகைகள் வித்தியாசமாக இருக்கும். காலை உணவாக புட்டு, பயறு, அப்பளம் என்று, அங்குள்ள ஓட்டல்களில் உணவு பண்டம் விற்பனை செய்யப்படுவதை காணலாம். ஓணம் விழாக் காலத்தில் கேரள பாரம்பரிய உணவு வகைகள் விற்கப்படும். அதோடு வீடுகளிலும் இத்தகைய உணவுகள் தயாரிக்கப்படும். அறுசுவை உணவு பற்றி நாம் அறிவோம். ஆனால் கேரளாவில் ஓணத்தை ஒட்டி 64 வகையான உணவுகள் தயாரிக்கப்படுவது சிறப்பாகும். இதற்கு 'ஓணம் சத்யா' என்று பெயர். இந்த விருந்தில் அடை, அவியல், கிச்சடி, பச்சடி, தோரன், சர்க்கர புரட்டி, இஞ்சிப் புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிகாய் பச்சடி என கூட்டு வகைகளும், ரசம், பருப்பு, நெய் சாம்பார், மோர்குழம்பு என குழம்பு வகைகளும் பிரதானமாக இடம்பெறும். சமைத்த உணவுகளை, மக்கள் முதலில் கடவுளுக்கு படைத்து விட்டு, பின்னர் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வழங்கி மகிழ்வார்கள்.

1 More update

Next Story