ராமர் வழிபட்ட ஸ்படிக லிங்கம்


ராமர் வழிபட்ட ஸ்படிக லிங்கம்
x

ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்படிக லிங்கத்தை ராமரும், சீதையும் பூஜித்தனர் என்பது தல வரலாறு.

தன்னருகில் வைக்கப்படும் பொருட்களின் தன்மையை பிரதிபலிக்கக்கூடியது என்பதால், ஸ்படிகம் மங்கலகரமான ஒன்றாக கருதப்படுகிறது. அந்த ஸ்படி கத்தில் செய்யப்பட்ட லிங்கத்திற்கு கூடுதல் சிறப்புண்டு. ஒரு முறை கயிலாய மலையை நோக்கி ஆதிசங்கரர் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் அவருக்கு காட்சி கொடுத்த சிவபெருமான், அவரிடம் ஐந்து ஸ்படிக லிங்கங்களையும் கொடுத்தனுப்பினார்.

முக்தி லிங்கம், வர லிங்கம், மோட்ச லிங்கம், போக லிங்கம், யோக லிங்கம் ஆகிய அந்த ஐந்து ஸ்படிக லிங்கங்களையும், சிவபெருமானின் ஆணைப்படி, ஐந்து இடங்களில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தார். அவற்றில் முக்தி லிங்கம் கேதார்நாத்திலும், வர லிங்கம் நேபாளத்தில் உள்ள நீலகண்டத்திலும், மோட்ச லிங்கம் சிதம்பரத் திலும், போக லிங்கம் கர்நாடகா மாநிலம் சிருங்கேரியிலும், யோக லிங்கம் காஞ்சிபுரத்திலும் அமைக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் சிதம்பரம் ஆலயம், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயம், ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயங்களில் உள்ள ஸ்படிக லிங்கங்கள் சிறப்புக்குரியவை. இதில் ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்படிக லிங்கம் கூடுதல் சிறப்பு கொண்டது. இந்த ஸ்படிக லிங்கம் விபீஷணனால் இலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்டது. அதை ராமரும், சீதையும் பூஜித்தனர் என்பது தல வரலாறு. ராமேஸ்வரத்தில் அதிகாலை 4 மணிக்கு இந்த ஸ்படிக லிங்கத்தை தரிசித்து விட்டு, கோவிலில் இருக்கும் அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடினால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதேபோல் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில், சங்கரன்கோவிலில் உள்ள சங்கரனார் கோவில் ஆகியவற்றிலும் ஸ்படிக லிங்க வழிபாடு பிரசித்தம்.


Next Story