திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்போற்சவ விழா இன்று தொடக்கம்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்போற்சவ விழா இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 20 March 2024 4:04 AM GMT (Updated: 20 March 2024 6:23 AM GMT)

தெப்போற்சவத்தை முன்னிட்டு ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 24-ந்தேதி வரை 5 நாட்கள் தெப்போற்சவ விழா நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை ராமச்சந்திர மூர்த்தியுடன், சீதா, லட்சுமண, ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் புஷ்கரணியில் தெப்பத்தேரில் எழுந்தருளி 3 முறை பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

2-வது நாளான நாளை (வியாழக்கிழமை) சத்தியபாமா, ருக்மணியுடன் ஸ்ரீகிருஷ்ணர் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 3-வது நாளான 22-ந்தேதி உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

4-வது நாளான 23-ந்தேதி உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி 5 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். 5-வது நாளான 24-ந்தேதி உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

தெப்போற்சவத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் சஹஸ்ர தீப அலங்கார சேவை, வருகிற 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ரதீப அலங்கார சேவைகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.


Next Story