திருமணத் தடை நீக்கும் திருவாய்மூர்நாதர்


திருமணத் தடை நீக்கும் திருவாய்மூர்நாதர்
x

திருவாரூர் மாவட்டம் திருவாய்மூர் என்ற இடத்தில் உள்ளது, பாலின் நன்மொழியாள் உடனாய வாய்மூர்நாதர் திருக்கோவில். பல்லவர் மற்றும் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

தேவாரப் பாடல்கள் இடம்பெற்ற சிவபெருமானின் 274 சிவாலயங்களில் இது 188-வது ஆலயமாகும். மேலும் தேவாரப் பாடல்கள் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 124-வது தலமாகும். சிவபெருமான், தேவலோகத்தில் வீற்றிருக்கும் வடிவமே, 'விடங்க வடிவம்' ஆகும். இந்த வடிவம் பூலோகத்திலும் இருக்க வேண்டும் என்று சிவபெருமான் விரும்பினார். அதற்காக ஒரு திருவிளையாடலை அவர் நிகழ்த்தினார். அதுவே இந்த ஆலயத்தின் தல வரலாறாகவும் அமைந்திருக்கிறது. அதைப் பார்ப்போம்.

தல வரலாறு

தேவலோகத்தின் அதிபதியான இந்திரன், ஒரு முறை சிவபெருமானிடம் விடங்க வடிவத்தை யாசித்தான். அப்போது சிவன், "இந்த லிங்கத்தை போக வாழ்வு நிறைந்த இந்திரலோகத்தில் வைத்து பூஜை செய்வது கடினம்" என்று கூறினார். இருப்பினும் இந்திரன் விடாமல் வற்புறுத்தியதால், சிவன் விடங்க வடிவத்தை அவனிடம் கொடுத்தார். அதன் சிறப்பை உணர்ந்த இந்திரன், அந்த லிங்கத்திற்கு நல்ல முறையில் பூஜைகளை செய்வித்து வந்தான். இந்த நிலையில் முசுகுந்த சக்கரவர்த்தி என்பவர், பூலோகத்தை ஆட்சி செய்து வந்தார். அப்போது மக்கள் பலரும் மிருகங்களால் துன்பப்பட்டனர். இதனால் அவர் வனத்திற்குள் வேட்டைக்குச் சென்று மிருகங்களை கட்டுப்படுத்த எண்ணினார். அதன்படி வேட்டையாடுவதற்காக காவிரி கரைக்கு வந்தாா்.ஒரு நாள் சிவராத்திரி இரவில் முசுகுந்த சக்கரவர்த்தி, வனத்தில் வேட்டையாடிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சில முனிவர்கள் சென்றனர். அவர்களிடம் மன்னன், 'எங்கு செல்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு, அந்த முனிவர்கள், "நாங்கள் சிவராத்திரி பூஜைக்காக வில்வாரண்யம் எனப்படும் பகுதிக்கு சென்று சிவலிங்க பூஜை செய்யப் போகிறோம்" என்று கூறினர். சிவராத்திரி அன்று மிருகங்களை வேட்டையாட சாஸ்திரம் அனுமதிப்பதில்லை என்றும் அவர்கள் கூறினர். இதனால் வருத்தம் அடைந்த முசுகுந்த மன்னன், தன்னுடைய ராஜ உடையை களைந்து, முனிவர்களின் உடையை தரித்து, அந்த முனிவர்களுடனேயே, சிவ பூஜை செய்வதற்காகச் சென்றார். தன் தவறை உணர்ந்த முசுகுந்த சக்கரவர்த்திக்கு, சிவபெருமான் காட்சி கொடுத்து அருள் செய்தார். அப்போது ஈசன், "இந்திரனிடம் இருக்கும் விடங்க வடிவ சிவலிங்கத்தை எப்படியாவது வாங்கி வந்து, பூலோகத்தில் வைத்து வழிபாடு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று முசுகுந்த சக்கரவர்த்தியிடம் தெரிவித்தார். அந்த சமயத்தில் வாலாசுரன் என்ற அசுரனை கொல்பவர்களுக்கு, தன்னிடம் உள்ள ஐராவத யானை, வெண்குடை தவிர எதைக் கேட்டாலும் தருவதாக இந்திரன் அறிவித்திருந்தான். எனவே வாலாசுரனைக் கொன்று, விடங்க லிங்கத்தை இந்திரனிடம் இருந்து பூலோகத்திற்கு கொண்டு வரும்படி, சிவபெருமானே மன்னனுக்கு யோசனையும் கூறினார்.

உடனே முசுகுந்த சக்கரவர்த்தி, "இறைவா.. அப்படியே செய்கிறேன். ஆனால் இந்திரன் விடங்கரைப் போலவே உள்ள வேறு ஏதாவது ஒரு லிங்கத்தைக் கொடுத்து என்னை ஏமாற்ற வாய்ப்பிருக்கிறது அல்லவா? எனவே எனக்கு முதலில் உங்களுடைய விடங்க வடிவம் எப்படி இருக்கும் என்பதை காண்பித்தருள வேண்டும்" என்று வேண்டினார். சிவபெருமானும் முசுகுந்த சக்கரவர்த்திக்கு தன்னுடைய விடங்க லிங்க வடிவத்தைக் காட்டி அருளினார். அப்போது அங்கு பெரும் ஒளி வெள்ளம் தோன்றியது. முசுகுந்தன், அவருடன் இருந்த முனிவர்கள் மட்டுமின்றி தேவலோகமே அங்கு திரண்டு விட்டது. இதைக் கண்டு உணர்ச்சிவசப்பட்ட முசுகுந்தன், "இறைவா.. தாங்கள் இந்திரலோகத்திலும் இருங்கள், இங்கேயும் அப்படியே இருங்கள். இங்கு நான் உங்களுக்கு ஆலயம் எழுப்புகிறேன்" என்றார். முனிவர்களும், தேவர்களும் கூட ஈசனை மன்றாடியதால், கலியுக பக்தர்களுக்காக ஈசன் இங்கு விடங்க வடிவத்தில் தங்கியதாக தல வரலாறு சொல்கிறது.

மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறது. வெளிசுற்றில் சமயக்குரவர்கள் நால்வர், பைரவர் சன்னிதிகளும், கருவறை சுற்றில் விநாயகர், வள்ளி-தெய்வானை உடனாய முருகப்பெருமான், மகாலட்சுமி ஆகியோரும் காட்சி தருகின்றனர். நடராஜர் சபையும் உள்ளது. இந்த ஆலயத்தில் தல விருட்சமாக பலா மரமும், தீர்த்தமாக சூரிய தீர்த்தமும் உள்ளது. இவ்வாலயத்தில் உள்ள இறைவனைப் பற்றி சமயக்குரவர்கள் நால்வரில் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தேவாரப் பாடல்களை பாடியுள்ளனர்.

இந்த திருத்தலத்தில் சூரிய பகவானும் வழிபாடு செய்திருக்கிறார். ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இத்தல இறைவன் மற்றும் இறைவியை தன்னுடைய கதிர்களால் சூரியன் வழிபடும் நிகழ்வு இன்றளவும் நடைபெற்று வருவது அதிசயமானது. இந்தக் கோவிலில் நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே வரிசையில் அமைந்திருப்பது மற்றொரு விசேஷம். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி ரிஷபத்தின் மீது அமர்ந்திருப்பது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது.

காசியைப் போல இந்த ஆலயத்திலும் அஷ்ட பைரவர்கள் எனப்படும் எட்டு பைரவர்கள் தரிசனம் தருகின்றனர். அவர்களை வழிபட்டால் பயம் விலகும். திரியம்பகாஷ்டமி நாளில் சிவன் முப்புரம் எரித்ததாக கருதப்படுகிறது. அந்த நாளில் இவர்களை வழிபடுவது கூடுதல் சிறப்பு. நான்கு பைரவர்கள் சிலை வடிவமாகவும், மேலும் நான்கு பைரவர்கள் தண்டங்களின் வடிவில் பைரவரின் அம்சமாகவும் இங்கே வீற்றிருக்கின்றனர். மூலவருக்கு தெற்கு பக்கம் தியாகராஜா்- நீலவிடங்கராகவும், வடக்கே வேதாரண்யேஸ்வரரும் உள்ளனர். கோவிலுக்கு எதிரில் குளம் உள்ளது. கரையில் விநாயகர் அருள்பாலிக்கிறார்.

இந்த ஆலய இறைனை தரிசித்தால், திருமணத் தடை நீங்கும். கல்வியில் சிறந்து விளங்கலாம். செல்வ வளம் பெருகும். பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறி யதும் இறைவனுக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்தக் கோவிலில் சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை, வைகாசி விசாகத்தில் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திலும், திருவாரூரில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவிலும், திருக்குவளை என்ற இடத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திலும் திருவாய்மூர் திருத்தலம் இருக்கிறது.

சப்த விடங்க தலங்கள்

சப்த விடங்க தலங்கள் என்பதை, தமிழ்நாட்டில் உள்ள நடனத்தை அடிப்படையாகக் கொண்ட சிவ வழிபாட்டு தலங்கள் ஆகும். இதன் தலைமை இடமாக திருவாரூர் உள்ளது. திருநள்ளாறு, நாகப்பட்டினம் எனப்படும் நாகைக்காரோணம், திருக்காராயில், திருக்குவளை எனப்படும் திருக்கோளிலி, திருவாய்மூர், வேதாரண்யம் ஆகியவை மற்ற விடங்க தலங்கள். 'விடங்க' என்பதற்கு 'உளியால் செதுக்கப்படாத மூர்த்தி' என்றும், 'மிகச்சிறிய சிவலிங்கம்' என்றும் பொருள்படும். இந்த சிவலிங்கத்தை ஒரு பாத்திரத்திற்குள் வைத்திருப்பார்கள். அர்ச்சகரிடம் சொன்னால் அதை எடுத்துக் காட்டுவார். இதை தரிசித்தால் சொர்க்கம் உறுதி என்றும், அகால மரணம் நிகழாது என்பதும் ஐதீகம்.

திருவாரூா் - வீதி விடங்கர்

திருநள்ளாறு - நாகவிடங்கர்

நாகைக்காரோணம் - சுந்தர விடங்கர்

திருக்காராயில் -ஆதி விடங்கர்

திருக்கோளிலி - அவனி விடங்கர்

திருவாய்மூர் - நீல விடங்கர்

வேதாரண்யம் - புவனி விடங்கர்


Next Story