சர்க்கரை நோய் தீர்க்கும் பரிகார தலம்
மிகவும் பழமையான இந்த ஆலயத்தில் உள்ள இறைவனின் திருமேனி கரும்புக்கழிகளை ஒன்றாக சேர்த்து கட்டிவைத்ததுபோல் உள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி என்ற ஊரில் அமைந்துள்ளது வெண்ணி கரும்பேஸ்வரர் கோவில். இத்தலத்தின் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
நாயன்மார்களில் முக்கியமானவர்களான அப்பர், சம்பந்தர் உள்ளிட்டோர் பாடியுள்ள இத்தலம், சர்க்கரை நோய் தீர்க்கும் பரிகார தலமாக விளங்குகிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த கோவிலில் வெண்ணிகரும்பேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதுடன், சர்க்கரை மற்றும் ரவையை சேர்த்து கோவில் பிரகாரத்தில் எறும்புக்கு உணவாக இடுகிறார்கள். இந்த உணவை பிரகாரத்தில் உள்ள எறும்புகள் உண்பதால் சர்க்கரை நோய் பாதிப்பு குறைகிறது என்பது ஐதீகம்.
தங்களின் பிரார்த்தனை நிறைவேறியதும் இங்கு வந்து இறைவனுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து விநியோகம் செய்கின்றனர்.
மிகவும் பழமையான இந்த ஆலயத்தில் உள்ள இறைவனின் திருமேனி (லிங்கம்) கரும்புக்கழிகளை ஒன்றாக சேர்த்து கட்டிவைத்ததுபோல் உள்ளது. பங்குனி 2,3,4 ஆகிய தேதிகளில் சிவனின் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை நடப்பது இத்தலத்தின் அதிசய நிகழ்வாகும்.
இந்த கோவிலில் நவராத்திரி 9 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகின்றது. பங்குனி உத்திரம், ஆனித்திருமஞ்சனம், திருவாதிரை, திருக்கார்த்திகை உள்ளிட்ட முக்கிய விழாக்களும் பிரமாண்டமாக நடைபெறும்.