உங்கள் முகவரி

குடியிருப்புகளில் வர்த்தக பகுதி பயன்பாடு + "||" + Commercial area use in residential areas

குடியிருப்புகளில் வர்த்தக பகுதி பயன்பாடு

குடியிருப்புகளில் வர்த்தக பகுதி பயன்பாடு
இன்றைய வளர்ந்து வரும் நகர்ப்புற சூழலில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் முற்றிலும் ஒரே வகையான பயன்பாட்டில் இருப்பதற்கு சாத்தியமில்லை.
அதன் அடிப்படையில் கலப்பு உபயோகம் (Mixed Use Basis) என்ற அடிப்படையில் நகரில் பல குடியிருப்பு பகுதிகள் இருக்கின்றன. ஆதார குடியிருப்பு பகுதியாக வரையறை செய்யப்பட்ட இடங்களில் அடுக்குமாடி திட்டங்கள் அமைக்கப்படுவது வழக்கமாக இருந்தாலும், அவசியம் மற்றும் இடப்பற்றாக்குறை ஆகிய காரணங்களுக்காக குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதி ஆகியவை ஒருங்கிணைந்த கலப்பு குடியிருப்பு பகுதிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு கட்டுமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.


கலப்பு குடியிருப்பு பகுதிகள்

நகரமைப்பு சட்டப்படி, வகுக்கப்பட்ட வளர்ச்சி விதிகளுக்கேற்ப இத்தகைய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த நிலையில், இன்றை நெரிசலான நகர்ப்புறச் சூழலில் கலப்பு குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பல சிக்கல்கள் எழுவதாக அறியப்பட்டுள்ளது. அது பற்றி ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கூறுவதை பார்ப்போம்.

கட்டுமான நிறுவன நடவடிக்கை

பொதுவாக, கட்டுமான நிறுவனங்கள் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடுகளுக்கான விலையை நிர்ணயம் செய்யும்போது, நிலத்தின் மதிப்பு மற்றும் கட்டுமான செலவினங்கள் ஆகியவை தவிரவும், நிலத்தின் உரிமையாளருக்கு உள்ள கூடுதல் தேவைகள் மற்றும் குடியிருப்புக்கான திட்ட அனுமதி உள்ளிட்ட பல்வேறு கூடுதல் செலவினங்களையும் கணக்கில் கொண்டு அதன் மொத்த பட்ஜெட் நிர்ணயம் செய்யப்படுகிறது. மேற்கண்ட நிலைகளின்படி நிர்ணயம் செய்யப்பட்ட வீடுகளின் விலை பலருக்கும் ஏற்றதாக அமைந்து, அவற்றை வாங்குவதற்கு வாய்ப்பாக வீடுகளின் எண்ணிக்கையை அதிகமாக்குவது அல்லது குடியிருப்புகளின் ஒரு சில பகுதிகளை வர்த்தக பயன்பாட்டுக்கு அனுமதிப்பது போன்ற நடவடிக்கைகளையும் கட்டுமான நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

குடியிருப்பு திட்டத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியை வர்த்தக பயன்பாட்டுக்காக இணைக்கும்போது, அவற்றில் வீடு வாங்குவோர் அல்லது குடியிருப்பவர்களுக்கு வாகனம் நிறுத்துமிடம், பொது இடப்பயன்பாடு, பாதுகாப்பு போன்ற விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடியிருப்பின் கீழ்ப்பகுதியில் வர்த்தக நிறுவனங்கள் அல்லது வணிக சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனத்துக்கு வாடகைக்கு விடப்படும் நிலையில், இரு தரப்பினருக்கும் சிக்கலில்லாமல் வாகன நிறுத்தம் உள்ளிட்ட இதர பாதுகாப்பு அம்சங்களில் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம்.

இணக்கமான செயல்பாடுகள்

ஒரு சில குடியிருப்பு திட்டங்களில், குறிப்பிட்ட தளங்கள் வணிக ரீதியான பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், இதர தளங்கள் குடியிருக்கும் வீடுகளாகவும் அமைந்து விடலாம். உதாரணமாக, நான்கு தளங்கள் கொண்ட குடியிருப்பின் தரைத்தளம், முதல் தளம் ஆகியவை வர்த்தக பயன்பாட்டுக்காகவும், மற்ற தளங்கள் வீடுகளாகவும் இருந்தால், அடிக்கடி பலரும் வந்து செல்லும் சூழல் ஏற்படும்.

அந்த நிலைகளில் பாதுகாப்பு, வாகன நிறுத்துமிடம் தொடர்பான சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. அதுபோன்ற நிலைகளில் பக்கத்தில் உள்ளவர்களோடு தக்க விதத்தில் இணக்கமான முறையில் பேசி, அதற்கேற்ப முடிவுகளை நடைமுறைப்படுத்துவது நல்லது.